ராமோஜியம் – என் அடுத்த நாவல் -சில பகுதிகள் – வருகை 1942

”என்னாச்சு, அத்தங்கா மறந்துட்டாளா?” பந்துலு சம்சாரம் தூணைப் பார்த்துக் கேட்டாள். அங்கே பந்துலு இருந்தாலும் மௌனம் தான் பதிலாகக் வந்திருக்கும்.

எந்த நேரமும் வேட்டியை நனைக்கிற அவசரத்தோடு ராமண்ணா ஜோசியரும் என் வீட்டு வாசலுக்கு வந்து, ’எங்கே காணோம்? இன்னும் வரல்லியே’ என்று கூப்பாடு போட்டார். நான் என்ன, வந்த தெலக்ஸை பறிமுதல் செய்து வீட்டில் பதுக்கிவிட்டா வரல்லே என்கிறேன்?

ராத்திரி ஏழரைக்கு டெல்லியில் செய்தி அறிக்கை படிக்கிற சத்தம் எல்லா வீட்டு ரேடியோக்களிலும் இருந்து கொர்ர் என்ற கரகரப்போடு ஒலிபரப்பானது –

”சோவியத் போர்விமானங்கள் ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டை குண்டு வீசித் தாக்கின. ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. ரஷ்ய துறைமுக நகரம் நோவராஸிஸ்க், ஜெர்மன் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது… இனி விரிவான செய்திகள்”.

நான் வார்டில் ரவுண்ட் போய் வரலாம் என்று கிளம்பினேன்.

என்ன இருந்தாலும் பிரபலங்களோடு பழகும்போது அவர்கள் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பி விடக்கூடாது என்று நம்பத் தொடங்கினேன். தெலக்ஸ் வருவதாகச் சொன்னபோது வேறே சினிமா ப்ரட்யூசர் யாராவது புதுப் படத்துக்கான வாய்ப்போடு வந்து இறங்கியிருக்கலாம். அல்லது அவளுக்கு லேசாக ஜலதோஷம் பிடித்திருக்கலாம். அல்லது அவள் வேறு ஜோசியரை ஆஸ்தான ஜோசியராக நியமித்திருக்கலாம். அல்லது அவளுடைய சித்திக்கு றக்கை முளைத்து, பொடிமட்டையோடு பறக்க ஆரம்பித்திருக்கலாம்.

நான் புதுக் கைக்குட்டையை எடுத்து செண்ட் அடித்து என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஜலதோஷத்தோடு கொஞ்சம் தாமதமாக தெலக்ஸ் வரக்கூடும். வந்து தும்மக் கூடும். முதலில் வரட்டும்.

மழை இப்போது இல்லை என்றாலும் உள்ளே போய்க் குடையை எடுத்து வாள் போல சுழற்றிக்கொண்டு கிளம்பி விட்டேன். மழையும் புவனா போலத்தான். வருவதும் வராததும் யார் அறிவார்?

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ’மாதே மலயத்வஜ பாண்ட்ய சம்ஜாதே’ என்று கமாஸ் வர்ணத்தில் தொடங்கி எடுத்த எடுப்பிலேயே களை கட்டத் தொடங்கி இருந்த ரேடியோ கச்சேரியைக் கேட்க முடியாமல் வேலை. தெலக்ஸ் வந்தால் என் கடமை உணர்வைப் பார்த்து மெச்சுவாள்.

மிடுக்காகத் தெருவில் நடந்து போனேன். தங்கப்பன் முதலாளி வீட்டில் ஏனோ அதிகபட்ச அமைதி தட்டுப்பட்டது. முன்ஹாலில் விளக்கு எரிந்து ரெண்டு நிமிஷத்தில் திரைக்குப் பின்னால் நிழலாக அவசர அசைவுகள். அப்புறம் விளக்கு அணைக்கப்படுகிறது.

சந்தேகமே இல்லை. பருப்பு, அரிசி, கோதுமை என்று ஏதோ பதுக்கப் படுகிறது. அத்தன பேரும் ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு ரேஷன் கடை வாசலில் மணிக்கணக்கில் நின்று கிடைக்காமல் திரும்ப, யாரோ ப்ளாக் மார்க்கெட்டில் கொட்டிக் கொடுத்து வாங்கி அனுபவிக்க, அதெல்லாம் திசை திருப்பப்படுகிறது.

தெலக்ஸ் ப்ளாக் மார்க்கெட்டில் ஃபாரின் சோப் கூட வாங்குவாள். மொழுமொழு என்று அந்த முழங்கை. இல்லை அவளோடு எனக்கென்ன மனதில் சரசம். வருவதாகச் சொல்லி எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள்.

முக்கியமாக ரத்னாவை சமையல்கட்டில் மாங்குமாங்கென்று உழைத்து இத்தனை டிபனும் செய்து காத்திருக்க வைத்த கிராதகி அவள். அழகுப்பிசாசு.

கடமை அழைக்கிறது. தெலக்ஸ் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

நான் தங்கப்பன் முதலாளி வீட்டுக் கதவைத் தொட அது திறந்து கொண்டது. வாசலில் நின்றிருந்த தங்கப்பன் வாங்க வாங்க என்று வாய்நிறைய வரவேற்றபடி என்னையும் தள்ளிக்கொண்டு வாசலுக்கு வந்தார். உள்ளே ஹாலில் வாசலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நாலைந்து பேர் தரையில் உட்கார்ந்து இலை போட்டு சாப்பிடுகிறது தெரிந்தது.

இங்கிருந்தே, விளம்பக் கொண்டுபோன சப்பாத்தியும், வாசனை ரூபமாக வெஜிடபிள் குருமாவும் என் புலன்களுக்குத் தட்டுப்பட்டன.

“ஒண்ணுமில்லே ராமோஜி சார், நம்ம கடை, தெருவைப் பார்த்து இருக்கறது அவ்வளவு நல்லதில்லேன்னு ஜோசியர் அண்ணன் தான் சொன்னார். முகப்பிலே சின்னதா ஒரு பிள்ளையார் கோவில் கட்டி அதுக்கு சின்னதா இன்னிக்கு கும்பாபிஷேகம்.. ரொம்ப நெருங்கிய உறவுக்காரங்க, சிநேகிதங்களுக்கு ..”

பார்ட்டி வைக்கிறீங்களா என்று கடமை தவறாத ஏ ஆர் பி வார்டனாகக் கேட்டேன். பிரசாதம் என்று திருத்தினார்.

எந்தப் பிள்ளையார் சப்பாத்தி – விஜிடபிள் குருமா பிரசாதம் ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்கிறார் என்று கேட்க நாக்கு நுனிவரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

“பிரசாதம் வாங்கிட்டுப் போங்களேன்” என்று தங்கப்பன் முதலாளி சொன்னது காதில் விழாதுபோல் மிடுக்காக வாசலுக்குப் போனேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன