என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நாவல் பற்றி

நன்றி நண்பர்கள் கணேசன், அனுராதா கிருஷ்ணஸ்வாமி

பத்திரிகையில் வந்தபோது நல்ல வரவேற்பு இருந்தாலும், அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஏனோ பிடிக்காமல், உடனே நிறுத்தியாக வேண்டும் என்று ஒரே பிடிவாதம். நான் பிரிட்டனில் இருந்த காலம் அது என்பதால் நேரடியாக வந்து என்ன பிரச்சனை என்று கேட்கவும் முடியவில்லை.

மறைந்த எழுத்தாளர் திரு சாருகேசியும் நண்பர் – பத்திரிகையாளர் சிவகுமாரும், ரெட்டைத் தெரு தொடர வேண்டும் என்று உறுதியாகச் சொல்ல, தொடர் நீண்டு 26 அத்தியாயம் வரை போய் நின்றது. அதற்குள் ‘நிறுத்து’ எனும் பூதம் அவ்வப்போது தலைகாட்டிப் போனது.

26-ஆம் அத்தியாயத்துக்கு அப்புறம் இறுதி அத்தியாயம் 52 வரைக்கும், புத்தகமாக வரும்போது எழுதிச் சேர்த்தேன்.

சிதறுண்ட கதையாடலோடு நான் எழுதிப் பார்த்த முதல் புதினம் இதுதான்.

இந்த 52 அத்தியாயங்களில் வருகிறவர்களில் பலரும் எனக்கு முந்தைய தலைமுறையினர். இவர்களை வாசக நண்பர்கள் தத்தம் வசிப்பிடத்திலும் வாழ்க்கையிலும் கண்டுணர்ந்ததால் சற்றே பரந்த வாசிப்பு இப்படைப்புக்குக் கிடைத்தது.

கதையாடலுக்கு நடுவே, போகிற போக்கில் ஒரு சிறுகதையை விதைத்துப் போவதை இந்த நாவலில் முயன்று பார்த்தேன். ஊரின் சாப்பாட்டுக் கடைகள் பற்றிய அத்தியாயத்தில் (அத்தியாயம் 4) இந்தப் பத்திக்குள் பொதிந்திருக்க்கும் சிறுகதை உதாரணம் –

//
பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்டாக இருந்த அண்ணவாரு ராதாகிருஷ்ணன் ரெட்டைத்தெருவாசிதான். அவர் மெஸ் எதுவும் வைக்கவில்லை. ஆனால், காந்திவீதியில் ஏழெட்டு பெஞ்ச் போட்டு உடுப்பி ஓட்டல் என்று நடத்திக் கொண்டிருந்தார். பெரியவர்கள் காப்பி குடிக்கப் படியேறும் இடம் இது. நாலு வீட்டில் தோசைக்கு அரைத்து, குடிதண்ணீர் கொண்டுவந்து ஊற்றி வரும் சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த குட்டிகிருஷ்ணனின் அம்மா இறந்தபோது அவனும் வீட்டுக்காரியும் அதே நாலுவீட்டிலும் அண்டையிலும் தகனத்துக்காக யாசகம் வாங்கிய பணத்தோடு படியேறிய இடம் இந்த ஓட்டல். அக்கம் பக்கத்துப் பெரியவர்கள் இதை இளக்காரமாகச் சொல்லும்போது பாட்டியம்மா சொல்வாள் – ‘பாவம், அகப்பை நோக்காடு. குத்தம் சொல்லக் கூடாது’.
//

இந்த நாவலில் இருந்து போகி, பொங்கல் விழா பற்றிய பகுதிகள், குறும்படமாக, என் நண்பர் சரவணன் இயக்கினார். நானும் நடித்தேன் (தேவுடா).

யுடியூபில் ‘ரெட்டைத் தெரு’ என்று தேடினால் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன