நளவெண்பாவும், BREXIT-உம்

நளவெண்பாவும் BREXIT-உம்
—————————————–
போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
வாய்திறந்து ப்ரெக்ஸிட் வேண்டுமென்பார் – ஓய்வுகொண்டு
போகவேண்டாம் யூனியனில் சேர்ந்திருப்போம் புத்தியென்பார்
போகணுமா நிக்கணுமா சொல்

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து (European Union) பிரிட்டன் விலகிவிட வேண்டுமென்று (BREXIT) பிரிட்டீஷ் மக்கள் சில ஆண்டுகளுக்கு முன் பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். வெளியேறும் நேரம் நெருங்க, போகவேண்டாம், சேர்ந்திருப்போம் என்று புது யோசனை. To Be or not to Be … போகணுமா நிக்கணுமா – இதுதான் பிரச்சனை

வெண்பாவில் முதலடி நளவெண்பாவிலிருந்து எடுத்துக் கொண்டது. நளன் கலி பற்றியதும் தன் மனைவி தமயந்தியைப் பிரிந்து போகலாமா வேண்டாமா என்று குழம்பி, காலெடுத்து வைத்து வெளியே போய், திரும்பி வந்து, திரும்பவும் காலடி வைக்கிறதை அழகாகச் சொல்லும் அடி இது. அடுத்த அடியில் நளவெண்பாவை இயற்றிய புகழேந்திப் புலவரின் நேர்த்தியான உவமை வரும் –

நளன் காலடி எடுத்து வைத்து வெளியே போய், திரும்பி வந்து, திரும்
பி – இந்த உள்ளே –வெளியே ஊசலாட்டம், தயிர் கடைகிற பெண்ணின் கரம் முன்னும் பின்னும் அசைவது போலவாம்.

வெண்பாவோ, புதுக் கவிதையோ இந்தச் செறிவும் கவித்துவமும் வரிகளிலும் இடையிலும் கொண்டு வரக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

புகழேந்திப் புலவரின் முழு வெண்பா இது –

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
கடைவார்தங் கைபோல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்

(அடுபால் – காய்ச்சிய பால்; தோயல் – தோய்த்த தயிர்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன