சென்னை தின வாழ்த்துகள்: 22 ஆகஸ்ட் 2017: இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3

இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3
1938 அக்டோபர் 7 வெகுதான்ய புரட்டாசி 21 வெள்ளிக்கிழமை

சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. … … .. ..

ஸ்டேஷன் வாசல் பக்கம் ஒருத்தன் கை நிறைய நோட்டீசுகளை வைத்துக் கொண்டு வினியோகித்தபடி இருந்தான். பாகவதர் டாக்கி எதுக்காவது இருக்கும். நீலகண்டன் அசிரத்தையாக வாங்கிக் கொண்டு கண்ணை மேயவிட எழுத்தெல்லாம் பூச்சி பூச்சியாக ஊர்ந்தது.

நோட்டிசைக் கண்ணுக்குப் பக்கமாகப் பிடித்துக்கொண்டு வாசிக்க முயற்சி செய்ய, விநியோகித்த பையனே சின்ன சிரிப்போடு சொன்னான்.

சாமிகளே, வர்ற மாசம் ஒத்தவாடை தியேட்டர்லே சுயமரியாதை மகாநாடு. அவசியம் வந்து குடும்பத்தோடு கலந்துக்கணும்.

பக்கத்தில் மெகபோனும் இன்னும் நிறைய நோட்டீசுமாக நின்ற ரெண்டு பேர் காணாததைக் கண்டது போல் சிரித்தார்கள்.

நீலகண்டன் சாடி அந்தாண்டை விலகிப் போனான். பிராமண துவேஷிகள். இன்னும் கொஞ்ச நேரம் இந்தப் பிரதேசத்தில் திரிந்தால் பூணூலையும் அறுத்து விடக்கூடும்.

மெயில் பத்திரிகைக்கு இதைப் பற்றி கடுமையாக விமர்சித்து ஒரு கடிதாசு எழுதணும். பிரியமான பத்ராதிபருக்கு, நாளது தேதி. கிடக்கட்டும். வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் எழுத உட்காரலாம். மனசிலேயே உருப்போட்டுக் கொண்டு போய் ஜட்கா வண்டி மேலோ, ஜெனரல் ஆஸ்பத்திரி பொண வண்டி மேலேயோ முட்டிக் கொள்ள வேண்டாம்.

உசிர்க் காலேஜ் என்கிற சிங்கம் புலி திரியும் மிருகக் காட்சி சாலை கால்வாய்த் தண்ணீரைக் கடந்து இருப்பது. அங்கே இருந்து அவ்வப்போது மாமிச நெடியும், யானை பிளிறலும், வேறே ஏதோ மிருகத்தின் உறுமலுமாக காற்றில் கலந்து வந்தது. பகல் முழுக்க அந்தப் பிரதேசத்தில் கட்டுச் சோற்றோடு அலைந்து திரிந்து சிறுத்தைப் புலியையும் ராட்சசக் குரங்கையும் ஆசனவாயில் குத்தி குரோதமாக உறும வைத்துப் பார்த்துத் திருப்தியடைந்து, புளியஞ்சோறு சாப்பிட்ட ஏப்பம் மேலெழ, குடும்பம் குடும்பமாக செண்ட்ரல் ஸ்டேஷனை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

நுகத்திலிருந்து பின்னால் கால் வைத்து ஏறும் சின்ன மரப்படி வரை மூட்டை முடிச்சுகளைத் திணித்துக்கொண்டு, தாட்டியான சேட்டுகளும் அவர்களை விட உடம்பு பருத்த சேட்டாணிகளும் ஜட்கா வண்டிகளில் செண்ட்ரல் ஸ்டேஷனுக்குள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். இந்தக் குதிரைகள் நின்றால் பிராணனை உடனடியாக விட்டுவிடும் என்று நீலகண்டன் நினைத்தான்.

சேட்டுகள் எப்படியோ, அவர்கள் நடத்துகிற மிட்டாய்க் கடைகளில் செண்ட்ரலுக்கு வெளியே கூட்டம் நிரம்பி வழிந்ததையும் அவன் கவனித்தபடி செண்ட்ரலுக்கு இடது வசம் வால்டாக்ஸ் ரோடில் திரும்பினான். நாயுடு வீட்டுக்கு இந்தப் பக்கமாகத்தான் போக வேண்டும்.
——————-
——————

எங்கே சார் போவணும்?

கை ரிக்ஷாவை இழுத்து வந்தவன் விசாரித்தான். அனேகமாக ஆற்காட்டுப் பிரதேசத்து ஆளாக இருக்கும். வாப்பா போப்பா என்று சகஜமாக சகலரையும் கூப்பிடுகிற நடைமுறை நீலகண்டனின் சர்க்கார் அதிகாரி மிடுக்கையோ முன் வழுக்கையைத் தாண்டி ஒளி வட்டமாகப் படர்ந்திருந்த வெள்ளை ரோம வளையத்தையோ கருதி சார் ஆகி இருக்கும்.

எல்பண்ட் கேட் போலீஸ் ஸ்டேஷன்

அய்யோ ஆனக்கவுனி தாணா கச்சேரியா? ஆள வுடு.

அவனுக்கு ரிக்ஷா இழுத்துப் பிழைக்கும் வகையில் அந்த சர்க்கார் அலுவலகத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போக வேண்டாம்பா. அதுக்குக் கொஞ்சம் அப்பாலே.

ஏயுகெண்றா?

அதுக்கும் முன்னாலே.,

ஏதோ சொல்றே போ சார். எட்டணா கொடு.

மிஞ்சினா ரெண்டு இல்லே மூணு பர்லாங்கு. இதுக்கு எட்டணாவா?

விலைவாசி ஏறிடுச்சு சாமி.

சாமி ஆறணா கொடுக்க சம்மதிக்க, கைரிக்ஷா சவாரி வாய்த்தது.

ஜன நெரிசல் அதிகமாகி விட்டது. நீலகண்டன் மிஷினரி ஸ்கூலில் படிக்கிற காலத்தில் அப்பா வைத்தியநாதன் கையைப் பிடித்துக் கொண்டு இங்கே ஒற்றைவாடை கொட்டகையில் கிட்டப்பா பாடி நடித்த ஏதோ நாடகத்தைப் பார்க்க வந்திருக்கிறான். அது கிட்டப்பா இல்லை என்று மூளை உடனே சொன்னது. பெங்களூர் ராஜா அய்யங்கார்.

ஷீர சாகர சயனா என்று உச்சக் குரலில் பாடிக்கொண்டு அய்யங்கார் மேடையை இடம் வலமாகச் சுற்றும்போது அவன் தூங்கிப் போயிருந்தான். காலேஜில் படிக்கும்போது ஒற்றைவாடை பக்கம் சினிமா பார்க்க ஒரு தடவை வந்து, தாமதமாக ராச்சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போனதால் வைத்தியநாதய்யரும் கோமதியம்மாளும் உயிர் விடுமளவு விசாரத்தில் ஆழ வைத்ததும் கூடவே நினைவு வந்தது. அதுக்கு அப்புறம் ஜியார்ஜ் டவுண் ஏரியாவில் திரிவதை ஆகக் குறைத்துக் கொள்ளவும், அதுவும் பகலில் மட்டும் என்றாகிப் போயிருந்தது அந்தக் காலத்தில். நாயுடுவோடு அவன் வீட்டு முகப்பில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதெல்லாம் சாயந்திரம் ஐந்து மணிக்கு முடிந்து பார்க் ஸ்டேஷனுக்கு டிராம் ஏறிவிடுவான்.
—– ————- –
—- ————

வாய்யா அய்யரே, இப்பத்தான் இன்னாண்ட வர வழி தெரிஞ்சுதா?

வாசல் நடையில் கயிற்றுக் கட்டில் போட்டு உட்கார்ந்திருந்த நாயுடு எழுந்திருந்து அவன் கையைப் பற்றிக் கொண்டான்.

ரிடையர் ஆனதுமே கிழண்டு போயிட்டியேடா. ஆபீஸ் போகாத ஏக்கமா?

நீலகண்டன் நிஜமாகவே நாயுடுவைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு போய்விட்டான். அவனுடைய மிடுக்கும் வெள்ளை வேட்டியும், இந்துஸ்தானி கோட்டும், தொப்பியும் தொப்பையும் போன இடம் தெரியவில்லை. மங்கிய சிவப்பும் பச்சையுமாக சாரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு, மேலே அழுக்கு கதர் துண்டால் நரை பரந்த நெஞ்சை மூடிக்கொண்டு கஷ்கத்தில் கொத்தாக முடி தெரிய நிற்கிறவன் சிரஸ்தார் நாயுடு இல்லை. அவனுடைய நிழலோட சோகையான நிழல்.

நீயும் அப்படித்தான் இருக்கே. கண்ணாடியிலே பார்த்துக்கோ. இல்லே கற்பகத்தைக் கேளு.

ராஜா அய்யங்கார் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் நீல வர்ண லேஞ்சியை ஆட்டிக்கொண்டு மேடையில் இடமிருந்து வலமாகச் சுற்றியபடி சொன்னார். அவருக்கும் வயதாகி இருந்தது.
———————– ———-
—————— —–

நாயுடு பக்கம் கோணல் மாணலாக மடித்த மெயில் பத்திரிகை. சாயந்திரம் அஞ்சு மணிக்குத்தான் வந்திருக்கும். படித்து விட்டு அதே போல் மடிப்பு கலையாமல் திரும்ப வைக்க சில பேருக்குத்தான் முடியும். நாயுடு அந்த கோஷ்டியில் பட்டவன் இல்லை என்பது நீலகண்டனுக்குத் தெரிந்தது.

மெயிலைப் புரட்டிப் பார்த்தான். ராஜகோபாலாச்சாரி ராஜகோபாலாச்சாரி ராஜகோபாலாச்சாரி. முதல்மந்திரி தவிர வேறே ராஜதானியில் யாரும் மூச்சு விடுவதில்லை. மூத்திரம் போவதில்லை.

அய்யங்கார் வந்தாலும் வந்தாரு, மரம் ஏரறவங்க அல்லாரும் குடும்பம் குடும்பமா தெருவுக்கு வந்துட்டாங்கப்பா. கள்ளை எத்தினி நாளைக்கு நிறுத்தி வைக்க முடியும் சொல்லு. ஒரு மரத்துக் கள்ளு மாதா கையால ஊட்டுற கஞ்சித்தண்ணி மாதிரி. ராஜகோபால ஆச்சாரிகள் ஒரு தபா குடிச்சா விடுவாரா அய்யரே?

நாயுடு வம்பு வளர்க்க வாகாக ராஜாங்க விஷயம் பேச ஆரம்பித்தான். உலக நடப்பு. சும்மா கோண்டு மாதிரி கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் ஏதொண்ணும் தெரியாத மனுஷன் என்று தோன்ற ஆரம்பித்து விடும். கிரிக்கெட் பற்றி யாராவது பேசினாலும் இப்படித்தான்.

அடே நாயுடு, அய்யங்கார் மந்திரியானதும் தானே கோவில் பிரவேசச் சட்டம் வந்தது. வியாபாரி வித்து வித்து கோடி கோடியா லாபம் சம்பாதிக்கறதுக்கு நியாயமா நாலு காசு வரி கட்டணும்னு கொண்டு வந்தது. சுனா மானா சர்க்கார் என்ன பண்ணினது முன்னாடி? இப்போ என்னமோ கிழிக்கறேன்னு கான்பரன்ஸாம்.

சட்டைப் பையில் இருந்து செண்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் அந்தப் பையன் விநியோகித்த நோட்டீசை எடுத்து நீட்டினான். நாயுடுவிடம் சொல்லலாமா அவனுடைய நக்கலையும், கூட நின்ற கட்சிக் காரர்களுடைய பரிகாசத்தையும்.

வேணாம். நாயுடுவும் சுனா மானா ஆதரவாக இருக்கலாம். ஊஹும். நெற்றி நிறைய திருமண்ணோடு இவன் எங்கே ஒற்றைவாடை டாக்கீஸ் மகாநாட்டில் பிரசங்கம் கேட்கப் போய் உட்கார?

நாயுடு நோட்டீசை வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேறே வேலை இல்லே என்றபடி தரையில் போட்டான். கொடுத்த மரியாதைக்காவது அதை மெயில் பேப்பருக்குள் செருகி வைத்திருக்கலாம்.

—————– ————-
—————— ———

சரி அய்யரே, ஆயுசு முழுக்க உத்தமமான மனுஷனா இருந்து நீ கைலாசம் போ. நான் கசத்தையும் கண்றாவியையும் கட்டி அழுதுட்டு வைகுண்டம் போறேன். பகவானுக்கு நாத்தம் தான் பிடிக்கும் தெரியுமா? நாற்றத் துழாய்முடி நாராயணன்னு ஆண்டாளம்மா கூடச் சொல்லிட்டுப் போயிருக்கு. தில்லக்கேணி பெருமாள் ஆனைக்கவுனிக்கு வந்து கொழாயிலே குளிச்சா அவருக்கும் கப்பு அடிக்கற மயிர் தான் வாய்க்கும், சொல்லிட்டேன்.

நீ திருந்தவே மாட்டேடா. அது வாசனையான நாற்றம்னு தமிழ் வாத்தியார் செங்கல்வராய முதலியார் படிச்சுப் படிச்சுச் சொன்னாரேடா. நீ மிஸ்ஸியம்மாவை நினச்சுக்கிட்டு இத்த கோட்டை விட்டுட்டியா?

மனசுக்குப் பிரியமான பால்ய காலத் தோழனோடு கொக்கோக ரசம் தெளிக்கப் பேசும்போது வயசே குறைந்து போய், துக்கமும் கஷ்டமும் நோயும் வாதனையும் எல்லாம் ஓடியே போய் கரைந்து விடும். நீலகண்டனுக்கு அது வேணும்.

செங்கல்வராய முதலியாரை பாடையிலே வைக்க. வைக்க என்ன, வச்சாச்சு மூணு வருஷம் முந்தி. மேனகா ரிலீஸ் பண்ணச் சொல்ல. ஞாபகம் இருக்கா?

மேனகாவை எப்படி மறக்க முடியும்? உருண்டு திரண்ட தோளோடு அதே ராஜலட்சுமி. கூடவே ஒரு புதுப்பையன்.

உடம்பு முழுக்க முத்தம் கொடுத்துட்டே மூஞ்சிக்கு வருவானேப்பா அந்த நாகர்கோவில் பையன். ஷண்முகமோ ஆறுமுகமோ பேர்.

நாயுடுவும் அந்த அதியற்புதக் காட்சியில் தான் லயித்திருக்கிறான்.

நாவல் :விஸ்வரூபம் இரா.முருகன் கிழக்குப் பதிப்பகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன