கூர்மையான விழிகளோடு இருந்த ஸ்டாலின் நீர்த்துப் போனார்

Rushing towards the end… a small excerpt from the translation done today

மலாக்கா ஹௌஸில் கட்சி அலுவலகத்துக்கு நான் நீண்ட காலம் கழித்து மறுபடியும் போனபோது, சுவரில் ஸ்டாலின் உருவப்படம் ஒதுங்கி இருந்தது. முதல் முதலாகப் படங்களை மாட்டியபோது மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் ஆகியவர்களின் குழுவில் பிரதானமாக கூர்மையான விழிகளோடு இருந்த ஸ்டாலின் படம் இருந்தது. இப்போது சுவரில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன், பி.சுந்தரையா, பி.கிருஷ்ணபிள்ளை, வயலார் நினைவு மண்டபம் போன்ற படங்கள் வந்ததும் ஸ்டாலின் நீர்த்துப் போனார்.

“நீங்க எதுக்காக வந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்”, என்னையும் கோமஸ்சேட்டனையும் பார்த்த உடனே கட்சிச் செயலாளர் ஜோசப் சொன்னார்.

“என் பசங்க வற்புறுத்திப் போகச் சொன்னாங்க, அதான் வந்தேன்”, கோமஸ்சேட்டன் சொன்னார். “தோழர் மனசு வச்சா ஜெசிக்காப் பொண்ணு பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்படும்னு என் மகளுங்க ரோஸியும், டெய்சியும் சொல்றாங்க”.

“ஜெசிக்கா சம்பவம் பற்றி நான் கட்சி மேல்மட்டத்துக்கு ரிபோர்ட் அனுப்பியிருந்தேன். தகுந்த முறையிலே இந்த விஷயத்திலே தீர்மானம் எடுக்க ஹை கமாண்ட் எனக்கு பூரண அதிகாரம் கொடுத்திருக்கு” என்றார் ஜோசப்.

”என்ன தீர்மானம் செஞ்சிருக்கீங்க தோழர்?”, கோமஸ்சேட்டன் கேட்டார்.

“கட்சி இதிலே தலையிட வேணாம்னு முடிவு எடுத்திருக்கேன்”.

“இதோட தியரி என்ன?”

“ஒரு தியரியும் இல்லே”, ஜோசப் சொன்னார். “இது மனசும் உடம்பும் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் நான் பூர்ஷுவா சமுதாயத்தில் ஏற்படக்கூடிய எதிர்வினைகளைக் குறிச்சு எதுவும் சொல்லப் போகிறதில்லை. சரியான ஒரு உத்தி அப்படீன்னு வச்சா, நாம் புஷ்பாங்கதனைத்தான் ஆதரிக்கணும். கட்சி உடைந்து, அவரோட சகபாடி ராகவன் திருத்தல்வாதியானாலும், புஷ்பாங்கதன் நம்ம கட்சிக்கு வாக்களித்தார். அப்புறம் ஒண்ணு, உங்க தெற்குப்புற வீட்டுக்காரங்க, தோழர், உங்களைத்தவிர எல்லோரும், தீவிர கத்தோலிக்க கிறிஸ்துவங்க. திருச்சபை என்ன சொல்றதோ அதைத் தான் கேட்பாங்க. அவங்க எல்லாரும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடறவங்க. பிலாத்தோஸ் பாதிரியார் மறுபடி அவரோட சூழ்ச்சியான நடவடிக்கைகளை தொடங்கியிருக்கார். மலாக்கா ஹௌஸ் ஓனர் இசாக் புஷ்பாங்கதனை அறையைக் காலி செய்யச் சொல்லியிருக்கார். அந்த கிழட்டு நரி சந்தியாகு பள்ளிக்கூடத்துக்குப் போய் மாணவிகளுக்கு புஷ்பாங்கதனை வகுப்பு எடுக்க விடக்கூடாதுன்னு சொல்லிட்டு வந்திருக்கார். நான் இதிலே இருக்கப்பட்ட நிறைகுறைகள் பற்றி ஒண்ணும் பேசப் போகிறதில்லை. நான் இதிலே தலையிடப் போகிறதில்லே, அவ்வளவுதான்”.

“தோழரே, இவ்வளவு பெரிய அநியாயம் நம்ம லந்தன்பத்தேரியிலே நடந்து..”

“கோமஸ்தோழரே, என்னாலே நம்ப முடியலே. புஷ்பாங்கதன் அந்த மாதிரிப்பட்ட ஆள் இல்லே. நான் வந்தது முதற்கொண்டு புஷ்பாங்கதனைக் கவனிச்சுக்கிட்டு வரேன். எப்போ பார்த்தாலும் கணக்கு போட்டுக்கிட்டிருக்கற அப்பாவி அவர். அவருக்கு அந்த ஒரே விஷயத்துலே தான் ஈடுபாடு. மனசுலே வேறே எதுக்கும் இடம் இல்லை. புகார் வந்த போது அவர் நல்லா உடுத்தி, முடிக்கு சாயம் தோச்சு கறுப்பாக்கிக்கிட்டு சுற்றி வந்துட்டிருந்தார். எல்லோரும் அப்படித்தான். குற்றச்சாட்டு வந்தா, நான் அப்படி இல்லேன்னு காமிச்சுக்கறது உண்டுதான். இப்போ திரும்பவும் பழையபடி ஆகிட்டார். ரூம்லே அடைஞ்சு கிடக்கார். ஒரே ஒரு வித்தியாசம். இப்போ கணக்கு போடறதில்லை. யோசிச்சுப் பாருங்க தோழர். கணக்கு போடாத புஷ்பாங்கதன்! கட்சியிலே இருந்து வெளியேற்றப்பட்ட தோழர்கள் படற பாடு இல்லையா கணக்கு போடாம அவர் இருக்கறது?”

”அப்போ ஜெசிக்கா?”

“தோழரே, உங்களுக்கு மூணும் பொண்ணுங்க. எனக்கு ஒரே ஒரு பொண்ணு. ஆம்பிளைப் பிள்ளை இல்லே. காஞ்சிரமிற்றதிலே படிக்கறா. ஒரு பொண்ணுக்கு அப்பனா இருந்துக்கிட்டு ஜெசிக்கா சொல்றதை பொய்யினு எப்படித் தள்ளிவிட முடியும்?”

“என்ன சொல்றீங்க சகாவே? ஜெசிக்கா சொல்றதும் சரி, புஷ்பாங்கதன் சொல்றதும் சரி. அப்போ தப்பு செஞ்சது யாரு?” கோமஸ்சேட்டன் கேட்டார்.

”எனக்குத் தெரியாது”.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன