புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 14

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினான்கு இரா.முருகன்

நீல நிறம் தவிர வேறொன்றும் இல்லை.

நீலம் வானம் இறங்கி வருகிறது. நீலம் நிலம்பட நிற்கிறது. செங்குத்தாக நீல இறகு கூம்பிப் பறந்து வருகிறது. தரை தொட்டதும் வெடித்துச் சிதறிய தோகைக் கண்களின் அடுக்காக நீலம் உயர்கிறது. நீலம் காலடி எடுத்து மெல்ல வைத்து ஆடுகிறது. நீலம் சூனியக்காரியின் இச்சையூட்டும் அழைப்பாக, அந்தரங்க ரகசியம் சொல்ல அகவுகிறது. ஒரு நீலம், நீலமாக இன்னொன்று, நீலமே வடிவாக மற்றுமொன்று, புதிதாக இறங்கும் வேறொரு நீலம் என்று உருக் கலந்து, குழைந்து, உயர்ந்து, அகவி, நீலம் மருட்டுகிறது.

மேலத் தெரு ஓரத்தில் நின்றபடி பயத்தோடு பார்க்கிறான் சின்னச் சங்கரன்.

நீலத்தைக் கண்ணால் அள்ளி விழுங்கி ரசிக்கலாம். பறந்து காற்றில் அலைந்தாடும் தோகைகளில் முகம் பதித்துக் காதல் செய்யலாம். கருத்து நீண்ட தலைமுடியில் முகம் புதைந்து, முகம் தேடி, இதழ் தேடி, முலை தேடி முன்னேறுகிற மோகவெறியோடு பட்டாகப் படர்ந்த நீலம் மனமேறலாம். அது துளைத்துக் கீறிப் படிந்து உயிர் கலக்க, எல்லா நினைவும் இல்லாது போக, போகம் போகம் என அமிழலாம்.

என்றால், குத்திக் கிழிக்கக் கூர் அம்பாக இத்தனை இணை கால்கள் கத்தியாக இறங்கும்போது காமமும் காதலும் கைவிட்டுப் போகும்.

அசிங்கமாகத் திட்டவும், விழுந்து புரண்டு முகத்தில் உமிழ்ந்து குரோதம் பாராட்டி உயிரெடுக்கவுமான ஏதோ மொழியில் திரும்பத் திரும்பக் கூப்பிடுகிற அகவும் ஓசைகள் காற்றைத் துர்வாடையடிக்கச் செய்து கலையாது நிற்கும்.

கனவையும் குத்திக் கீறிச் சிதைத்துக் கொன்று போடும் கோணலான அலகுகள் வழியே அந்த ஓசை நாராசமாகச் சிதறும்போது, நீலமும் நிறமாலையும் தோற்று ஓடும்.

சின்னச் சங்கரன் சுற்றுமுற்றும் பார்த்தான். மேலத் தெருவில் அவனைத் தவிர யாரும் வெளியே இல்லை. எல்லா வீட்டுக் கதவுகளும் அடைந்திருந்தன. தெரு நடுவில் உயரும் மணல் திட்டுகளும், வாசல் தெளித்துக் கோலம் இடாமல் புழுதியேறிக் கறுத்த முகப்புகளும் அணிவகுத்து நிற்கச் சிறுத்து நிறம் மங்கி, குவிந்து உள்வாங்கித் தெருவின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டு நின்ற வீடுகள் அவையெல்லாம்.

இந்தத் தெரு இன்னொரு வடிவிலானது. அவன் நினைவில் அது பசுக்களின் சத்தமாகவும், பசுவும் கன்றும் மேய்த்து, வார்ச் செருப்பு அணிந்து நாலைந்து பேர் ஓங்கிப் பேசி நடக்கிற ஒலியுமாகத் தான் இருக்கிறது. மயில்கள் வராத வீதி அது.

சங்கரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீதிக் கோடியில் இருந்து ஒரு வில்வண்டி தெருவுக்குள் எக்காளமாக நுழைந்தது. முன்னும் பின்னும் விருதாவாக ரெண்டு பேர் தாம்பூலம் மென்று கொண்டு, வழியெல்லாம் துப்பியபடி வந்தார்கள்.

அசங்கியமான மனுஷர்கள். இவர்களை மயிலும் கழுகும் கொத்திக் கிழிக்கட்டும். சங்கரன் உதாசீனத்தோடு பார்த்தபடி நின்றான். தலைக்கு வெகு அருகே சிறகடிப்பு சத்தமும், அகவும் பிசாசு ஒலியும் சுழன்று சுழன்று தாக்கின.

நகருமய்யா, கொட்டகுடி தாசி வருகையானது.

ஒரு விருதா தடியன் சொன்னபடி வெற்றிலை எச்சிலை சங்கரன் கால் பக்கம் துப்பினான். அது சில்லுச் சில்லாக இவன் முழங்காலிலும், செருப்பு அணிந்த பாதத்திலும் தெளித்துத் தரையில் அடரும் சிவப்புப் பிசினாக நீண்டது.

சங்கரன் வாயைத் திறக்கக் கெட்ட வார்த்தை சரம் சரமாக வந்தது. அந்தத் தடியன் இனி வாய் இருக்கிற வரை வெற்றிலையே மெல்லக் கூடாது. கூட வரும் இதர துஷ்டர்களும் தான். தேவைப்பட்டால் சங்கரன் முரடனாகவும் செய்வான். துப்பினவன் கும்பிட்டபடி கடைவாய் எச்சிலைத் துடைத்துத் தூரப் போனான்.

வில்வண்டித் திரை பின்னால் சற்றே திறக்க, உள்ளே பதவிசாக உட்கார்ந்த, லட்சணமான ஒரு மத்திய வயசுப் பெண் சங்கரனைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தபடி கடந்து போனாள். அவளுக்காக இந்த எச்சிலையும், துப்பலையும், தூசியையும் பொறுத்துக் கொள்ளலாம் என்று சங்கரனுக்குத் தோன்றியது. மயில்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

வண்டியின் மேல் கூரையில் ஆரோகணித்த மயில் ஒன்று இன்னும் சத்தம், பெருஞ்சத்தமாகக் குரல் கொடுத்தது. கூரையில் கால் பாவ நின்று சற்றே ஆடவும் தொடங்கியது அது. வண்டிக்குள் இருந்து மெல்லிய குரலில் ஜாவளி பாடும் சத்தம்.

அடுத்துக் குலவைச் சத்தம் கேட்டது. தலையில் குடமும் அதில் நீரும், பூவும், அரிசியும், மஞ்சளும், பாலும், நெய்யும் நிறைத்து எடுத்து ரெண்டு ரெண்டு பேராக வருகிற பெண்கள் சங்கரனைப் பார்த்துச் சிரித்தார்கள். நடுவிலே வந்த பெண் சங்கரனின் அம்மா ஜாடையில் இருந்தாள். என்ன விசேஷம் என்று சங்கரன் அவளை விசாரித்தான். கொட்டகுடி மாதா சொர்க்கம் போன நாள் என்றாள் அவள்.

அந்த நீண்ட வரிசை போகும் வரை, மயில்கள் தரையில் வழிவிட்டு நின்றன. சில சங்கரன் காலில் படும்படி தத்திப் பின்னாலும் முன்னாலும் நடந்தன. சத்தம் குறைவாக இருந்தாலும், சூழ எழுப்பி இருந்த செம்மண் புழுதிப் படலம் கலையாமல் இருந்தது. தெரு முனையில் தூசிப் பரப்புக்கு ஊடே ஆரவாரம்.

சிவந்து வழிந்த தெருக் கோடியில் இருந்து பழைய கார் ஒன்று ஒலி முழக்கி வரும் சத்தம். சட்டையில்லாமல் வெள்ளை பனியன் அணிந்த இரண்டு பேர் பக்கத்தில் பக்கத்தில் இருந்து செலுத்தி வந்த கார் அது என்று சங்கரனுக்குப் புலப்பட்டது.

சங்கரனை கார் கடந்த போது ஸ்டியரிங் பிடித்தவனுக்கு அருகில் இருந்த மற்ற பனியன்காரன், பழுக்காத் தட்டு வேணுமா என்று சங்கரனிடம் கேட்டான்.

நீர் சொல்வதென்னவோ, புரியலை. எந்தப் பக்கத்து ஆட்கள் நீங்க எல்லாம்?

சங்கரனின் விசாரிப்புக்கு அவர்கள் கரிசனத்தோடு பதில் சொல்லவில்லை. காருக்கு உள்ளே, பின்னால் உட்கார்ந்து சிரித்துப் போன பெண்ணும் கூட.

சங்கரனுக்கு அவளைத் தெரியும். வில்வண்டியில் அதோ முன்னால் போய்க் கொண்டிருக்கிறாள் அவள், அங்கே அவள் கொட்டகுடித் தாசி. இங்கே மாதா.

பகவதியம்மாளின் டயரியில் இதெல்லாம் விரிவாக உண்டு, தான் படிக்கக் காத்திருக்கிறது என்று சின்னச் சங்கரனுக்குத் தோன்றியது. இந்தப் பெண்கள், தாம்பூலம் மெல்லும் தடியர்கள், இந்த ஊர்வலங்கள், வில்வண்டி, பழைய கார், குடங்களில் பூவும் அரிசியும் எல்லாம் வேறே ஏதோ காலத்தைச் சேர்ந்தவை. மயில்கள் கிளம்பிப் போனதும் அவையும் போய்விடும் என்று அவன் அறிவான். மயில்கள் காலம் கடந்தவை. அவை சாவைக் குறிப்பவையாக இருக்குமோ?

கொட்டகுடி மாதா என்றவள் காருக்குள் இருந்து சன்னமாகச் சொன்னது கேட்டது –

இந்த ஊரிலே இனி மரணமே இல்லை. நான் தான் நிறுத்தி வச்சிருக்கேன் கொழந்தே. நல்லது தானே? என்ன சொல்றே? உனக்கு மூத்தகுடிப் பெண்டு நான்.

தெரியவில்லை சங்கரனுக்கு. ஆனாலும் அவளைப் பார்த்துக் கை கூப்பினான். இந்த மண்ணில் சுவாசித்திருந்த எல்லோருமே அவனுக்குப் பூர்வீகர்கள் தான். நல்லதுக்குத் தான் எல்லாம் செய்வார்கள். அவர்கள் சதா உலாப் போய்வரட்டும்.

தெருவில் ஒரு வினாடி கூட்டமாகத் தலை தூக்கி அலகு அசைத்து, சேர்ந்து எழுந்து சிவன் கோயிலை நோக்கி மயில்களில் கூட்டம் பறக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு ஜோடிக் கண்களையும் ஏறிட்டுப் பார்த்து நிற்கும் சங்கரனை லட்சியம் செய்யாமல் அவை எல்லாம் சூனியத்தில் வெறித்தபடி நகர்ந்து கிடைமட்டமாக மிதந்து சென்றன.

கோயிலுக்குள் இருந்து அவசரமாக மணிச் சத்தம் உயர்ந்தது. சிவன் சன்னிதிக்கு எதிரே கட்டி இருந்த நகராவும், உச்ச ஸ்தாயியில் எழும் நாகஸ்வரம், கொட்டி முழக்கும் தவில் சத்தமும் கூடவே முழங்கின. சங்குகளை பூம்பூமென்று யாரோ கோயிலுக்கு உள்ளே மூச்சடக்கித் தொடர்ந்து ஊதிக் கொண்டே இருந்தார்கள்.

கோயில் வாசலுக்கு ஓடி உள்ளே பாய்ந்து குதித்து கல் மண்டபத்தின் தூணைப் பிடித்தபடி தலையை எக்கி அங்கிருந்து மயில்களைப் பார்க்க வேணும் போல் இருந்தது. குளிக்காமல் எப்படி கோயிலுக்குப் போறதாம்? பகவதிப் பாட்டி சிரிக்கிறாள். போனால் என்ன, பைராகி தூக்கிப் போயிடுவானா? சரி வேணாம்.

தெருத் திரும்பி வடக்கு வாடியில் எந்தக் களேபரமும் இல்லாமல் இன்னொரு நாள் மெதுவாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மூக்கக் கோனார் கடையில் இரண்டு ரூபாய் கம்மியாக வாங்கிக் கொண்டு பழைய தினசரியில் பத்தாறு வேட்டியையும், குற்றாலத் துண்டையும் மடித்துப் பொட்டலம் கட்டிக் கொடுக்க வாங்கியானது. மேலே ராட்டை படம் அச்சடித்த பில்லில் காப்பியிங் பென்சிலால் பெயர் கிறுக்கியிருந்ததில் புகையிலை மட்டும் அர்த்தமானது. சங்கரன் இருக்கும் வரை அவனோடு ஒட்டி இருக்கப் போவது அது. இன்னார் என்று அறிவிக்கவும், சலுகையும் தள்ளுபடியும் கேட்காமலேயே கிடைக்கவும் பெயர் வழி செய்யும்.

அவன் சொசைட்டிக் கட்டடத்துக்குள் நுழைந்தபோது பின்னால் கிணற்றடியில் பேச்சு சத்தமும், கிணற்று ராட்டினம் சுற்றிக் கிறங்க எழும் ஓசையும், இரும்பு வாளி கிணற்றுக் கைப்பிடிச் சுவரில் மோதித் தண்ணீர் சிதறும் ஒலியுமாக எழுந்தது.

சப்தரூபமாக சங்கரனுக்குப் பழகிய இந்த உலகம் ஆசுவாசமளிப்பது. அழகு இல்லை தான். ஆபத்துக்குக் கட்டியம் கூறாதது. நீலம் பூத்த தரையெல்லாம் மயில்கள் ஆடும் அலங்காரமும் ஆனந்தமும் இல்லை. அவை வேண்டாம். இரைத்து இரைத்துப் பத்து வாளி வெதுவெதுவென கிணற்று நீர் போதும். உடல் குளிரட்டும்.

கிணற்றடியில் ஏக ரகளையாக நாலைந்து பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கௌபீனம் அணிந்து கிணற்றைச் சுற்றி நிற்கிறவர்கள். ஒவ்வொருத்தர் கையிலும் இரும்பு வாளி ஒன்று இருந்தது. ராட்டினத்தில் தாம்புக் கயறு சுற்றி, வாளிக் காதுகளில் இறுக்க முடிந்திருந்த வாளி தவிர மற்றவை பலமான கயிறுகளால் செங்குத்தாகக் கிணற்றில் இறக்கப்படு, நீர் சிதற திரும்ப வாரப் பட்டன. சுற்றிலும் ஈரம் மிகுந்து வேப்பிலை வாடையோடு கிணற்றில் இருந்து இரைபடும் தண்ணீர் இந்த யுகத்தில் வற்றாது. எனில் அப்படியே ஆகட்டும்.

மயில் இறங்கினபோது மேலத் தெருவிலே நின்னுட்டிருந்தீங்க இல்லே?

குளித்துக் கொண்டிருந்த ஒருவன். கண் இமையில் தளம் கட்டி நிறுத்தியிருந்த கிணற்று நீரை விரலால் வழித்தபடி கேட்டான்.

சார் புகையிலைக்கார வீட்டுப் பிள்ளை. கல்கத்தாவோட போயிட்டாரு எப்பவோ.

இன்னொருத்தன் பக்கத்தில் இருந்து சங்கரனைப் பற்றித் தனக்குத் தெரிந்த தகவல் சொன்னான். அதில் பிழை திருத்த அவசியம் இல்லை என்று சங்கரன் தீர்மானம் செய்தபடி கிணற்றடிக்கு அருகில் போனான்.

இங்கே இப்போதைய வழிமுறை தெரிந்திருந்தால், இரும்பு வாளியோடு வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் என்ன, குளிக்க வந்தவனை மற்றவர்கள் நிச்சயம் திரும்ப அனுப்ப மாட்டார்கள். அதுவும், அவர்களுக்கு அரைகுறையாகவும், அனுமானமாகவும் நல்ல விதத்தில் தெரிந்திருக்கிறவனை.

சங்கரன் வேட்டிக்கு மேல் குற்றாலத் துண்டை அணிந்தபடி, ஜாக்கிரதையாக வேட்டியைக் களைந்து கொசகொசவென்று மடித்துக் கிணற்றுக் கைப்பிடிச் சுவரில் வைத்தான். உள்ளே விழலாம் என்று பட, கிணற்றடியில் இருந்து சொசைட்டியின் பின்கட்டுக்கு நீண்ட கயிற்றுக் கொடிகளில் ஒன்றில் பரத்தினது போல் போட்டான். ராட்டினத்தில் மாட்டிய வாளியை ஒருத்தன் பெருந்தன்மையும் நேசமும் முகத்தில் தெரிய சகஜமான சிரிப்போடு சங்கரன் பக்கம் நகர்த்தினான்.

அவர்கள் மயில்களைப் பற்றி வாயோயாமல் பேசுவார்கள் என்று சங்கரன் எதிர்பார்த்தான். வயல் சூழ்ந்த பூமியிலும், மலையடிவாரத்திலும், குன்றுகளின் உச்சியிலும் மயில்கள் வரும். குளிர்கால டில்லியில் அரசாங்கமானது தங்களுடைய விசுவாசம் மிக்க இடைநிலை மற்றும் மேல்தட்டு குமாஸ்தாக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் விஸ்தாரமான குடியிருப்புகளின் குரோட்டன்ஸ் செடிகள் தழைத்த முகப்பிலும் அவை தோகை விரித்து ஆடும்.

அங்கே எல்லாம் ஆடலாம் தான். செம்மண் பாளமாக நீளும் அரசூரில் அவை என்ன செய்கின்றன? யாராவது இது பற்றி அரை வார்த்தை, ஒரு வார்த்தை கோடி காட்டும் விதமாகவேனும் சொல்ல மாட்டார்களா என்று சங்கரன் எதிர்பார்த்தான்.

அவர்கள் மயில்களோடு சேர்ந்து வந்த ஊர்வலங்கள் பற்றியும் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். மெல்லக் குளித்து முடித்து, இடைக்கட்டில் கால் பரப்பி நின்று, கெட்டியான கைத்தறித் துண்டால் தலை துடைத்தபடி, காலடி மண்ணை மிதியடியில் ஒற்றி விட்டு அவர்கள் சொல்வார்கள் என்று தோன்றியது.

வாளிகள் உருளும் ஓசையும், தண்ணீர் மேலே விழும்போது சிலிர்த்து முனகி உற்சாகப்படும் ஒலியும், இடமும் வெளியும் பொருந்தாமல் யாரோ வெளியேற்றும் அபான வாயுச் சத்தமும், அதற்கோ வேறெதற்கோ அரைச் சிரிப்புமாக இருந்த அந்தச் சூழலில் சங்கரன் ஒன்றிப் போனான். குரல்கள் செவியில் விழுந்து கொண்டிருந்தன. எதை வேண்டுமானலும் யாரும் பேசட்டும். சங்கரனுக்கு விரோதம் ஒன்றும் இல்லை. அவன் எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்பான்.

நேத்து முழுக்க முத்துப்பட்டியில் காத்துட்டிருந்தேன். வயசான மனுஷன். சீக்காளி வேறே. சீக்கு ஒட்டிக்குமோன்னு பயமா இருந்துச்சு. சர்க்கார்லேயானா, அந்தாளை எப்படியாவது இங்கே ஆஸ்பத்திரியிலே கொண்டாந்து படுக்க வைன்னு நச்சரிப்பு. சீக்கு குணமாகக் கூட்டிப் போறேன்னு தூக்கிப் போட்டுட்டு வந்தேன்.

துணிக்குப் போடும் சவுக்காரத்தை அழுத்தி அழுத்திக் கம்புக்கூட்டில் தேய்த்தபடி ஒருத்தன் சொல்ல, ஏன் என்ன என்று யாரும் விசாரிக்காவிட்டாலும் எல்லோரும் சேர்ந்து சின்னதாகச் சிரிக்கும் ஒலி. என்ன விஷயம் என்று சங்கரன் கேட்டான்.

ஏன் கேக்கறீங்க. நம்மூர்லே சாவே விழல்லேன்னா தேசம் முழுக்க, அப்புறமா உலகம் பூரா இதைப் பத்தியே பேச்சாயிடுமாம். உலகமே பார்க்க நாம சகஜமா இங்கே மூச்சு விட்டுக்கிட்டு, மூத்தரம் போய்க்கிட்டு, நம்ம வேலை உண்டு நாம உண்டுன்னு இருக்கறது முடியாது இல்லே. அதான் பக்கத்து ஊர், கிராமத்துலே எல்லாம் யாரு போய்ச் சேர்ற மாதிரி இருந்தாலும், நேரா இங்கே கொண்டு வந்துடறது. ஆயுசு போன கணக்குலே ஒண்ணு கூடினா ஒரு மாசத்துக்கு கவலையில்லே. அதுக்குள்ளே வேறே ஏதாவது வந்து சேரும். கணக்கு முக்கியம்.

தன்னைப் போல் சர்க்கார் உத்தியோகஸ்தன் அவன் என்று சின்னச் சங்கரன் ஊகித்தான். இறப்பைத் தேடி அண்டை அயலில் சதா அலைகிற உத்தியோகம். நாள் முழுக்க, விடுமுறை நாள் தவிர்த்து இப்படியாகச் சுற்றித் திரிய அவ்வப்போது உயரும் விகிதத்தில் பஞ்சப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப் படி என்று சம்பளம் வழங்கப் படுகிறது. இன்னும் ஒரு வருஷத்தில் இந்த ஊழியனின் பதவி உயரும். சாணித்தாள் அலுவலகம் ஒன்றில் நீட்டிக் கையெழுத்து போட்டபடி, அலைகிற இன்னும் இரண்டு கடைநிலை குமஸ்தர்களைக் கட்டி மேய்த்தபடி இருப்பான்.

அப்போதும் சாவு இல்லாத நிலைமை தொடருமா?

சங்கரன் சுற்றிலும் பார்க்க, குளிக்க வந்தவர்கள் போய் விட்டிருந்தார்கள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன