போகிற போக்கில்

 

சில நேரம் சிரிப்புத்தான் வ்ருகிறது. அயர்லாந்தோடு நல்லுறவு வளர்க்க பிரிட்டன் மெனக்கெடுவதை வரவேற்கிறோம். எலிசபெத் ராணியம்மா கையை அயர்லாந்த் மாஜி தீவிர வாதி மக்கின்னஸ் குலுக்கினால் நட்பு வளர்ந்து விடும், ஆமா அப்படித்தான்.

என்ன இருந்தாலும் ராணி மகாராணிதான். எலிசபெத் மகாராணி போனால் தான் தெரியும் பிரிட்டனின் இழப்பு என்ன என்று. விக்டோரியா சகாப்தம் போல் நிச்சயம் எலிசபெத் சகாப்தமும் வரலாற்றில் நிலைக்கும்.

ஒரு constitutional monarch எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எலிசபெத் ராணி உதாரணம்.


தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபோது டோனி பிளேருக்கு அவரைப் பிடிக்கவிலலை. ராணிக்கும் டோனியைப் பிடிக்கவில்லை. பாக்லாந்த் யுத்தத்தின் போது இந்த பரஸ்பர வெறுப்பு mutual respect, mutual admiration ஆனது தனிக்கதை. ‘The Queen’ திரைப்படம் பார்த்திருப்பீங்களே!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மறைந்து கொண்டிருக்கும் உணவு வகைகள் பற்றிய பத்திரிகை செய்தி இப்படித் தொடங்குகிறது –

Once, Formby asparagus was famous. White at the base, green through the stem and with a purple-tinged tip, it was grown by half-a-dozen families on the sandy wastelands known as “slacks” behind the dunes at Formby Point, liberally fertilised by “night soil” (human manure) from nearby Liverpool. By the 1940s, 200 acres were under cultivation and the award-winning asparagus, acclaimed for its superior texture and flavour, was served in the finest restaurants and aboard the grandest ocean liners, including (briefly) the Titanic.

Asparagus – இது தமிழில் உண்டா? பாதியில் வாசிப்பை நிறுத்தி விட்டுத் தேடினேன். இரண்டு தமிழ்ச் சொற்கள் தட்டுப்பட்டன –
தண்ணீர்விட்டான் கிழங்கு,சாத்தாவாரியினம்.

முதலில் சொன்னது எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது.

இங்கேயும் என் பார்வையில் பல வருடமாகப் படாமல் காணாமல் போன காய், கனி, உண்டி உண்டு. நினைவுக்கு வந்த சில

1) ஈச்சம்பழம்
2) அரநெல்லி
3) அரைக்கீரை
4) மிதுக்க வ்ற்றல்
5) சத்துமா (பாட்டிகளின் பிரியமான உணவு)
6) உக்காரை (இனிப்பு பதார்த்தம்)
7) மோர்க்கூழ் (மோர்க்களி அண்மையில் கிடைத்தது)

திருப்பல்லாண்டு நினைவு வருகிறது –

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர் களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

சரி, ஆழ்வாரே, நீரும் உம் குழுவும் கொஞ்சம் முன்னால் போய்க் கொண்டிரும். கொஞ்சம் கூழாட்பட்டு விட்டு வந்து விடுகிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$44

பூங்காவுக்கு வெளியில். வயதான ஒரு சமணப் பெண் துறவி வாய் மூடிய துணியும் வெள்ளுடையுமாக நடக்கிறார். அவரைத் தொடர்ந்தும் முன்னும் ஒரு சிறிய கூட்டம். சென்னை வாழ் சமணர்கள். எல்லோரும் வட இந்தியர்கள்.

தென்னிந்தியச் சமணர்கள் அருகி விட்டார்களா? ஞானசம்பந்தரும் அப்பரும் சமணத்தை இங்கிருந்து வெளியேற்றி சைவத்தைப் பரப்பியது தெரியும். ஆனாலும் சிறுபான்மையினராகவாவது தமிழ்ச் சமணர்கள் ஒரு இருபத்தைந்து வருடம் முன்பு வரை இருந்தார்களே..

சீவக சிந்தாமணி பாராயணம் செய்த தஞ்சை மாவட்ட சந்திர நாதச் செட்டியாரின் சம்ணக் குடும்பம் பற்றி உவேசா குறிப்பிடுவார். செட்டியார், நயினார் போன்ற இனப் பெயர்களில் நானும் சிலரை சந்தித்த நினைவு. காவல் துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றிய தமிழ் ஆர்வலர் ஸ்ரீபால் கூடச் சமணர்தான்.

தமிழ்ச் சமணர்கள் என்ன ஆனார்கள்?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$4
தமிழ் சமணர்கள் பற்றி எழுதும்போது பிராமண கிறிஸ்துவர்கள் பற்றி நினைவு வருகிறது.

நான் இருபது வருடம் முன் திருச்சி பகுதியில் இந்த சமுதாயத்தினரை சந்தித்திருக்கிறேன். பிராமண சமுதாயத்தில் இருந்து நாலு அல்லது ஐந்து தலைமுறை முன் மதம் மாறியவர்கள். கலாசாரத்திலும், கொஞ்சம் மடி ஆசாரம், கொஞ்சம் கிறிஸ்துவம் என்று கலந்து கட்டியாக இருப்பார்கள். பேச்சில பார்ப்பனக் கொச்சையும் வேறானதும் கலந்து வரும்.

அரசூர் வம்சம் நாவல் எழுதும்போது சில தகவல்களுக்காக பிராமண கிறிஸ்துவக் குடும்பங்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது ஏமாற்றம் தான் மிஞ்சியது.

எனக்கு மின்னஞ்சலும் இண்லண்ட் லெட்டரும் அனுப்பி வா வா என்று நிறையப்பேர் அவசரமாக வைத்துக்கொண்ட (ராபர்ட் குப்புசாமி ஐயர் வகையறா) பெயர்களோடு அழைத்தார்கள். எல்லோரும் என்னை அவர்களுடைய ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு ஒரு பெரிய பிராமின் கிறிஸ்டியன் கூட்டத்தோடு கலந்து பேசலாம் என்று அழைத்தவர்கள்.
எனக்கு ஞானஸ்நானம் நடத்துவதில் குறியாக இருந்தவர்களும் உண்டு – கார் அனுப்பி கூட்டிப் போறோம் .. அட்ரஸ் கொடுங்க..

எனக்கு ஞானஸ்நானத்தை விட நாவல் எழுதி முடிப்பதே முக்கிய குறிக்கோள் என்பதைச் சொல்லி விலகி வந்தேன். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சாவக்காட்டு பிராமண முதியவனை உருவாக்கினேன். மற்றவர்கள் மெல்ல நாவலில் நுழைந்தார்கள்.

அரசூர் வம்சம் ஜான் கிட்டாவய்யர் குடும்பத்தின் அடுத்த தலைமுறை வேதையன் குடும்பத்தினர் என் அடுத்த நாவல் விஸ்வரூபத்தில் இடம்பெற்ற போது அவர்களின் பழக்க வழக்கங்களையும் சூழலையும் சித்தரிக்க எந்த ஆராய்ச்சியும் வேண்டி இருக்கவில்லை. எனக்குப் பழக்கமாகி விட்டிருந்தது…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன