வேலு நாயர் சாயா பீடிகைக்கு வந்த பணிமுடக்கு

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் புதினம்
எதுக்கு? நீ வெக்கமே துளிக்கூட இல்லாம சொளசொளன்னு எச்சலை வடிய விட்டுண்டு பார்க்கற போது நானும் ஏன் நோக்கணும்? எத்தனை பாத்து மனசு திருப்தி வரும் உனக்கு? ஒரு ஆயிரம்? பத்தாயிரம்? லட்சம்? கோடி மாரிடம்?

அகல்யா கேட்பாள்.

இந்த ஊரில் வேறே என்ன உண்டு கோவிலையும் பால் பாயசத்தையும் இதையும் தவிர?

படகு. பக்கத்தில் உட்கார்ந்து வருகிறவளின் கிறங்கடிக்கும் வியர்வை வாடை. வேலு நாயர் சாயாக்கடை. அங்கே சுவரிலே மாராப்பு இல்லாது ஒய்யாரமாக நிற்கும் மலையாள சுந்தரிகளின் கண்ணைக் குத்தும் சினிமா போஸ்டர். புட்டும் கடலையும். பாப்பச்சன் தையல் கடை. அங்கே சாயந்திரம் ரேடியோவில், மனம் உருகி உருகி சம்ஸ்கிருதம் கலந்து பாடும் சினிமா கானம். எல்லாம் உண்டே.

கடலில் மீன் பிடிக்கும் முக்குவனும் சமஸ்கிருதத்தில் பாடுகிற அபூர்வ பூமியா இது? அகல்யா மேலும் கேட்பாள். திலீபுக்குப் பதில் தெரியாத கேள்வி அதெல்லாம். பாட்டைக் கேட்டால் போதாதா? ஆராய்ச்சி எதுக்கு?

வேலு நாயர் கடை வாசலில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. கூட்டமாக, பரபரப்பு தொற்றிக் கொள்ள எல்லோரும் எல்லாத் திசையிலும் ஓடி நடந்து கொண்டிருந்தார்கள். வேலு நாயர் என்ன இழவுக்காகவோ எலுமிச்சம்பழ மிட்டாய் அடைத்த பாட்டிலைத் தலை நிற்காத கைக்குழந்தை மாதிரி அணைத்துப் பிடித்துக் கொண்டு கடைக்கு உள்ளே ஒரு காலும் வெளியே மற்றதுமாக இருந்தான். வேலு நாயர் கடையே உலகின் சகல இயக்கங்களுக்கும் மையம் என்கிற மாதிரி சைக்கிள்களில் வந்து இறங்கி ஓடி வருகிறவர்களும், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடி, போகிற வாக்கில் ஏறி ஓட்டிப் போகிறவர்களுமாக திலீப் வயது இளைஞர்கள் அவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வேலை கிரமத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ப்ராதல் கழிக்கான் பாடில்ல.

திலீபைப் பார்த்து ஏழெட்டுப் பேர் தன்மையாகவும், கண்டிப்பு மிகுந்தும், விளக்கம் கொடுக்கும் கருணையோடும் சொன்னார்கள். வேலு நாயர் அந்தக் கூட்டத்தில் இல்லை.

என்ன ஆச்சு? ஏதாவது ஜகடாவா?

காலை எட்டரை மணி லோனாவாலா கல்யாண் லோக்கல் பேட்டைத் தகராறு காரணம் நின்றுபோய் ஊரே முடங்கிப் போன சோகம் திலீபுக்கு அனுபவப்பட்டது. இங்கேயுமா அது போல கஷ்டம்? வீடு கூட இல்லாத இடத்தில் வெறும் வயிற்றோடு எப்படி வேலை செய்ய?

பணிமுடக்கு.

சந்தோஷமாக எல்லோரும் சொன்னார்கள். வேலாயுதன் நாயர் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவன் முகத்திலும் அந்தக் கூட்டத்தின் பெருமிதமான களை ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் திலீப். இன்றைக்கு வேறே வேலை செய்ய வேண்டியதில்லை என்ற நிம்மதியாக இருக்கும் அது. ஊரை முடக்கி வீட்டில் முடங்க வைக்க மாதம் ஒரு நிகழ்ச்சியாவது வந்து விடுகிறது என்று வேலு நாயர் உடைந்த இந்தியில் திலீபிடம் சொன்னான். அதில் குறையேதும் அவனுக்கு இருப்பதாக திலீப் உணர்ந்து கொள்ளவில்லை.

என்ன காரணத்துக்காக ஸ்டிரைக், யாரெல்லாம் பணி முடக்குகிறார்கள், எப்போதிலிருந்து எப்போது வரை, இன்றைக்கு மட்டுமா நாளைக்கும் அதற்கு அப்பாலும் நீளுமா? போகிற போக்கில் மிக வேகமான மலையாளத்தில் ஏதோ சொல்லிப் போகிறார்கள் எல்லோரும்.

குட்டநாடு பஞ்சாயத்து எலக்‌ஷன் தகராறு காரணமாக ஸ்டிரைக், கேரள காங்கிரஸ் ஒரு பிரிவுக் காரர்கள் செய்கிறார்கள் என்று ஒரு வழியாக துண்டு துணுக்காகத் தெரிய வந்தபோது வேலு நாயர் சாயா பீடிகையை அடைத்துப் பூட்டி விட்டு ஒரு பீடி வலித்தபடி சைக்கிளில் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன