வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து ஒரு நினைவின் ஊர்வலம்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல்களின் வரிசையில் நான்காவதாகும். அதிலிருந்து ஒரு சிறு பகுதி
இறக்கி விட்டுக் காத்திருந்த பஸ் கண்டக்டரைப் போகச் சொல்லிக் கையசைத்தபடி வலது புறமாகத் திரும்பி நடந்தான் அவன்.

வீட்டு வாசல் இருட்டில் இருந்தது. உள்ளே மங்கின வெளிச்சத்தில் அம்மா குரல் நவ்ய நவ்ய கத்யா என்று லாவணிப் பாட்டாக மேலெழுந்து வந்தது.

சாதத்தை முழுங்கிட்டுப் பாடேண்டீ. பாட்டு எங்கே ஓடியா போகும்? அவன் தான் போய்ட்டான். ஓடினானோ நொண்டிக் காலாலே கெந்திக் கெந்தி நடந்தானோ ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாச்சு. உனக்கு ஒண்ணாவது தெரியறதா? பரப்பிரம்மம்டீ நீ. எங்க அவர் மாதிரி, அதாண்டி, உன் மாமனார். ஆக்காட்டுடி லண்டி முண்டை. சோறாவது ஒழுங்காத் தின்னத் தெரியறதா?

கற்பகம் பாட்டி தன் மருமகளைக் கொஞ்சுகிற நேர்த்தி அந்த லண்டி முண்டையில் நிரம்பி வழியும் வாத்சல்யத்தில் தெரியும்.

இருட்டிலேயே நின்று கொண்டிருந்தான் திலீப். அம்மா மராத்தியில், சோறு வேணாம், பரமா எஜ்மானைக் கூட்டி வா கிழவி என்று யார் என்ன என்ற போதமின்றி கற்பகம் பாட்டியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவை அதிக மரியாதையோடு அப்படித்தான் கூப்பிடுவாள் அவள்.

குளிக்க மாட்டேன்னு அப்படி என்ன அடம்? தலை மயிர் சிக்கு பிடிச்சு எட்டு ஊருக்கு நாறறது. இங்கே என்ன பட்டணம் மாதிரியா, தண்ணிக் கஷ்டமா ஒண்ணா? குழாயைத் தெறந்தா கங்கா ஸ்நானம். உங்க மாமனாருக்கு குளிக்கறதுன்னா அப்படி ஒரு இஷ்டம். செயலா இருந்தப்போ ரொம்பவே செயலா இருப்பார். நீயும் வாடி கல்ப்பு, சேர்ந்தே இதை எல்லாம் முடிச்சுடுவோம்பார். என்னோட கூட ஜலக்ரீடை பண்ணனுமாம் கிழத்துக்கு. எப்போ? ரிடையர் ஆனதுக்கு முந்தின வருஷம். தீபாவளியன்னிக்கு. கருமம் கருமம்.

பாட்டி சிரிப்பில் நாணம் கலந்து இருந்ததை திலீப் உணர்ந்தான். நீலகண்டன் தாத்தா நாய் மாதிரி லோல்பட்ட கடைசி ஐந்து வருஷத்தைக் கழித்துப் பார்த்தால் ராஜபோகமாகத் தான் மூச்சு விட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் தயிர்சாதம் எடுத்துக்கோடி தங்கமே. முருங்கைக்காய் சாம்பார் பிடிச்சிருக்கா? ஊற ஊறத்தான் ருஜி. காலம்பற வைக்கற முருங்கை சாம்பாரை ராத்திரி தான் இவர் ஒரு பிடி பிடிப்பார். அன்னிக்கு நாலு தடவை.

பாட்டி, ஏன் இருட்டிலே உக்காந்திருக்கீங்க ரெண்டு பேரும்

திலீப் உள்ளே நுழையும்போது உற்சாகமாக உணர்ந்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன