நான் எடுத்த படம் பற்றி ராயர் காப்பி கிளப் நூலில் இருந்து

2003-இல் எழுதியது.

நான் எடுத்த ஆணவப் படம்

ஆவணப் படங்கள் எடுப்பது பற்றிப் போன வாரம் இங்கே எழுதியதைப் படித்த ஓர் அன்பர் சொன்னார் – ‘காம்கார்டரில் படம் எடுத்துக் கம்ப்யூட்டரில் மென்பொருள் கொண்டு எடிட் செய்து ஆவணப் படம் எடுக்கலாம்’.

கம்ப்யூட்டர் இருக்கு, மென்பொருள் இருக்கு. நாமும் ஒரு ஆவணப் படம் தயாரிக்கலாமே என்று யோசனை சில மாதங்கள் முன்னால் வந்தது.

அறுநூறு பவுண்ட் கொடுத்து புஷ்டியான சோனி டிஆர்வி 14 ஈ காம்கார்டர் வாங்கிக் கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஹாலிபாக்ஸ், ப்ராட்போர்ட், ஷெஃபீல்ட் போன்ற திருத்தலங்களிலும் நீண்ட விடுமுறையின் போது லண்டன் மாநகரத்தில் கென்சிங்க்டன், பிக்கடலி வளைவு, டிரபால்கர் சதுக்கம், ஈஸ்ட் ஹாம், வால்த்தம்ஸ்டோ, டவர் பிரிட்ஜ், கிளஸ்டர் ரோடு என்று சந்து பொந்து விடாமலும் அலைந்து நாலைந்து குட்டியூண்டு வீடியோ கேசட்டுகளில் எல்லாமும், எல்லாரும் அடக்கி எடுத்து வந்தேன்.

“ஹேண்டிகேம்லே எப்படிப் படம் எடுக்கறது?”

“ரொம்ப எளிசு..இந்தப் பாரு .. இப்படி”

வீட்டில் மனைவி, மக்களுக்கு விரிவுரை எடுக்க ஆயத்தமாக உட்கார ஐந்தே நிமிடத்தில் கேம்கார்டர் என் மகன் கையில்.

என் ஆணவமான ஆவணப் படக் கனவுகளுக்கு என்ன ஆச்சு?

இதுதான் –

டிரபால்கர் சதுக்கத்தில் எலிசபெத் அரசியாரின் வீரர்கள் அணிவகுத்துக் கெத்தாக நடந்து போகிறபோது சின்ன மாமனார் எங்கள் வீட்டுக் கூடத்தில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். லண்டன் பத்மநாப ஐயர் பிளைஸ்டோவில் அவர் இல்லத்தில் எனக்கும் அம்ஷன் குமாருக்கும் மஹாகவியின் ‘சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்’ பற்றிச் சுவையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஹைதராபாத் பேகம் பஜாரில் மூலக் கச்ச வேட்டி கட்டிய ஆந்திரர்கள் உயிரைத் திரணமாக மதித்து, ஆட்டோ, ஸ்கூட்டர் களேபரங்களுக்கு இடையே வாயில் புகையும் சிகரெட்டோடு வீதியைக் கடந்து போகிறார்கள். அம்ஷன் குமாரின் ‘பாதல் சர்க்கார்’ ஆவணப் படத்தைப் பற்றி யமுனா ராஜேந்திரனும் ஈழ நாடக ஆசிரியர் பாலேந்திராவும் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ராத்திரிப் பத்து மணி மாம்பலம் வெங்கட்நாராயணா தெருவில் ஸ¤ம் ஷாட்டாக, ராத்திரி வெளிச்சத்தில் ஓனிக்ஸ் ஊழியர்கள் துப்புரவு செய்கிறார்கள். கிரீன்பார்க் பாதாள ரயில் நிலையத்தில் எக்கச் சக்கக் கூட்டத்தோடு வண்டி நுழைய, நண்பர்கள் பா.ராகவனும், இகாரஸ் பிரகாஷும் நாற்காலியில் உட்கார்ந்து புன்னகை புரிகிறார்கள்.

கொஞ்சம் பொறுங்கள். இன்னும் இரண்டு காசெட் பாக்கி இருக்கிறது. நானும், வீட்டில் மற்றவர்களும் அவற்றையும் ஒரு வழி செய்த அப்புறம் சாவகாசமாக உட்கார்ந்து போஸ்ட் மார்டனிச ஆவணப்படம் தயாரித்து விடுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன