நடந்தாய் வாழி ஷராவதி

மிளகு பெருநாவலில் இருந்து

அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து, உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி மறைந்து போவாள்.

நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போகவும் நேரம் செலவிட, தண்ணீர்த்துறைகள் சந்தடி மிகுந்து பரபரப்பாக இயங்கும் நிலாநாள் காலை.

இருபத்தைந்து வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி என்று உரிமையோடு அழைத்தபடி கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயது மகளை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள்.

‘அடியே காசிரை’ விளிகள் ‘அக்கா காசிரை’ ஆயின. அவை ’அத்தை காசிரை’யாகி, அதுவும் போய் ’காசிரை அம்மாளாக’, ‘காசிரை முத்தச்சி’யாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள்.

கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும் அவளுக்கு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அவள் அதற்காக நிலாத் தேவனை வேண்டுவதும் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன