புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் ஒரு நிலவு ராத்திரி

நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

வீட்டுக்கு வெளியே, நனைந்த மண் பரவிய வாசலில் தடுக்குகள் இட்டு இருந்து, பூவரச இலைகளில் வட்டித்துச் சுடச்சுடப் புளிக் குழம்பும் வழுதணங்காய் எண்ணெய்ப் புரட்டலுமாக, அமர்க்களமாக உண்டு முடிந்தானது. சோறுண்டு வயிறு நிறைந்து, குளிர்ந்த நிலவு ஒளிவீசிய இரவிலெல்லோரும் கூடி இருந்து மகிழ அவன் குழலூதத் தொடங்கினான்.

குரலிசைக் கலைஞர்கள் பாடிப் புகழ்பெற்ற சில பாடல்களை குழலில் பகர்த்தியெடுத்து அவன் வெளி நிறைக்க, கீதங்களுக்கு இடையே சில்வண்டுகள் கிறீச்சிட்டுத் துளைக்கும் அமைதியின் அடர்த்தி, இசையனுபவத்தை ஒன்று பலவாக்கி அளித்தது. இடைவெளியும் இசைதானே. குழலோசை இற்றுத் தேய்ந்து நிறைவு பெற்றது.

அவன் சிரித்தபடியே குழலை இடுப்பில் செருகிக் கொண்டான். வினாடியில் அது காணாமல் போனது.

வெளிவட்ட மனிதரிடையே சிறு சலசலப்பு. பாம்பு என்று நசுக்கப்பட்ட ஒன்றிரண்டு குரல்கள் மங்கி ஒலித்தன.

பாம்பு வரட்டும் என்று தலையசைத்தான் குழலூதி வந்தவன். ஓ என்று ஒச்சையிட்டுப் புயல் கடந்து கடலில் இருந்து நிலம் கொண்டது போல் பாறைக் கற்களை இழைந்து சுற்றி முன்னால் வந்து கொண்டிருந்த பாம்பைக் கண்டு அஞ்சி ஒரு பெரிய ஆள்கூட்டமே நடுநடுங்கி தடுக்குகளை விட்டு எழாமல் அமர்ந்திருந்தது.

மலினமும் கீழ்மையுமே வடிவான பாம்பு இனம் இந்தப் பிரதேசத்திலும் மலையிலும் பிரவேசிக்கத் தடையுள்ளதை அறிவீரோ என்று ஒரு வயோதிகன் எழுந்து கைகட்டி நின்று கேட்டான். அவனை நோக்கிப் படம் உயர்த்தி இன்னும் அதிகமாகச் சத்தமிட்டுப் பாம்பு சொன்னது –

”ஓய் சும்மா இரும். நான் குழலனுக்கு சிநேகிதன். அவனை விட்டு நான் இருக்க மாட்டேன். என்னை விட்டு அவன் இருக்க மாட்டான்”.

இறக்கை முளைத்த பாம்பா நீ என்று குடியிருப்புத் தலைவன் கேட்டான். ஏன் சிறகு இருந்தால் என்ன போச்சு இல்லாமல் என்ன ஆச்சு என்று பாம்பு போதையேற்றும் இளம்பெண் குரலில் கேட்க அவர் சொன்ன காரணம் இப்படி இருந்தது –

”நான் இதுவரை றக்கை முளைத்த பாம்பைக் கண்டதே இல்லை. நீர் அப்படியானவரென்றால் கண்டு போக உத்தேசம் கொண்டு தான்”.

அவர் சொல்லி முடிப்பதற்குள் உஸ்ஸ்ஸ் என்று ஏற்றிய பெரும் அடுப்புத் தீயை மழைபொழிந்து அணைப்பது போல் அந்த சத்தம் இருந்தது. கேட்டவர், சற்றே பின்னால் நகர்ந்து, எழுந்து நின்று, ஓடியே போனார்.

அந்த ராத்திரி தான் பாம்பு அதிரூப சுந்தரியாகி அந்தக் குழலனோடு பின்னிப் பிணைந்து கிடந்து நிலவொளியில் கலவி செய்தாள். குழல் ஊதி இசை வழங்கியதற்கு ஈடான காட்சி அனுபவமாக அந்தப் புணர்ச்சி இருந்தது.

குழந்தைகள் உறங்க, வன்முதியோர் உறங்கியதாக பாசாங்கு காட்டிக் கிடக்க, அகவை அறுபது வரையான ஆண்கள், கண்ணுக்குத் தெரியாத காட்சி என்பது போல் பொருட்படுத்தாமல் அதில் ஈடுபட்டு நோக்கியிருக்க, வயதாக வயதாக வனப்புக் கூடும் பெண்கள் கைத்தண்டையிலும் பின்கழுத்திலும் மயிர் சிலிர்க்கக் கண்டு, இணையரோடு வீடு புகுந்து இணை சேர, வீட்டுக்கு வீடு துய்த்த இன்பம் நடுராத்திரிக்கு ஐந்து நாழிகை வரை கோலாகலமாக நீண்டது.

இறுதியில் யாரும் பார்க்காத ஒரு ஷணத்தில் அந்தப் பாம்புப் பெண் குழலானாள். ஏதும் நடக்காதது போல் குழலை அவன் மடியிருத்தினான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன