என் வெளிவர இருக்கும் அடுத்த நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து

அத்தியாயம் 9 முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்

அடிவாரத் தரிசு பூமி.

எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை.

கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும் வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை. கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை.

மலையின் செழிப்பை எடுத்தோதிக் கொண்டு தினம் மாலை நேரத்தில் அடர்த்தியான மேகங்கள் மலைமுகட்டில் சேர்ந்து குவிந்து குறிஞ்சி நிலத்தை ஒரு மாசு, தூசு இன்றித் தூய்மைப் படுத்தும் வானத் திரவமாக நிறுத்தாமல் பொழிந்து கொண்டிருக்கும்.

மலைமேலே மழை பெய்தால் மலையடிக்கும் வாராதோ / மழைவெள்ளம் பெருகி வந்தால் மலையடியில் நதியாமோ என்று அடிவாரத்துப் பெண்கள் தினசரி மலையில் மழைபெய்யும்போது அடிவாரத்தில் வட்டமிட்டு நின்று கைகொட்டிப் பாடுவார்கள்.

மழையின் கீற்றுகள் தரைக்கு இறங்கும்போது அவர்கள் அந்தத் தாரைகளில் சொட்டச்சொட்ட நனைந்து ஆடத் தொடங்குவார்கள். இப்படி மலை வாசனை அடிக்கும், மழை மணக்கும் ஒரு நாள்.

அன்றைய தினத்துக்கு மழை ஓய்ந்த பின் அந்தி சாயும் பொழுதாக இருட்டு மெல்லக் கவிந்து வந்தபோது மானுடர் இருப்புப் பெருவெளியின் ஊடாக ஓர் இளைஞன் இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்தவனாகக் கடந்து வந்தான்.

பசியால் குழிந்த கண்களும் மரத்துப் போய்க் குழைந்து தடுமாறும் கால்களுமாக அவன் தன் தலைக்கு மேல் இருகையும் வைத்துக் கும்பிட்டபடியே வந்தான். மழைப்பாட்டு ஓய்ந்து வீடு திரும்பும் மகளிரிடம் ஒரு கைப்பிடி சோறு யாசித்தபடியே நடந்து வந்தவன் மழை நீர் தேங்கிய பாதையில் கால் சற்றே வழுக்க, அம்மவோ அம்மவோ என்று கூவியபடி நடந்தான்.

”வழிப்போக்கனே, நீ உண்ண இன்னும் இரண்டு மணிக்கூறாவது ஆகுமே! சோறாக்கிக் குழந்தைகளுக்கு பாலும் சீனியும் பெய்து ஆறவைத்த பால்சோறை ஊட்டி முடித்து, அடுத்து முதியவர்கள் ஆகாரம் செய்து, வளர்ந்த எம் அன்பு மக்களும், நாங்களும் எம் துணைவரும் உண்ணும் நேரம் உனக்கும் சோறுண்டு. இரண்டு மணி நேரம் பசி பொறுத்து ஊர் வனப்பும் மலை அழகும் கண்டு வா உண்டு போகலாம்”.

வழிப்போக்கனை அந்த மலைக்கு ஆற்றுப் படுத்தினது இன்று நடந்தது போல் தான் உள்ளது. அதற்குள் ஒரு ஆண்டு கடந்து போய்விட்டது.

அடிவாரக் குமரன் கோவில் வாசலில் கல் ஆசனத்தில் அமர்ந்தபடி இடுப்பில் வேட்டியைப் பிரி முறுக்கிச் செருகி இருந்த குழலை எடுத்து ஊதத் தொடங்கினான் அவன். மனையக ஆண்கள் பாட்டு கேட்டுத் தாளம் கைத்தாளமாகப் போட்டபடி அவனை அணுகினர். அவரெல்லாம் இசை ரசிகர்கள்.

”அய்யரீர், இசை நன்று. குரல் நன்று. சுவரம், கமகம், பிர்க்கா, ராகம், தானம், ஆலாபனை என எல்லாமே நன்று கண்டீர். எனில் காணீரோ, குழந்தைகளும் முதுமக்களும் இசை கேட்டு உறங்கத் துவங்கினர் மாதோ. அவர்க்குப் பொங்கிய சோறும் சமைத்த வாழைக் கறியும், வள்ளிக்கிழங்கைச் சுட்டதும் வீணாகி விடும் அந்தோ. எனவே குழல் வாசிக்காமல், பாடாமல் தாளம் தட்டாமல் இருப்பீராகின் அது நன்று. உண்டு முடித்து மனம் இருந்தால் எங்களுக்காக ஆடும். எமக்குப் பாடும். எம் உழைத்த களைப்பு நீங்கக் குழலூதுக”.

அந்த சம்சாரிகள் வேண்டியபடியே அவன் மறுபடி இடுப்பில் குழலைச் செருகியபடி சோறு கிடைக்கக் காத்திருந்தான். அன்றைக்கு நெருப்பு நீரோடு சிநேகம் அதிகம் கொள்ள, நெல்லுச்சோறு சடசடவென்று விரைவாகப் பொங்கி முடித்தது எல்லா வீடுகளிலும். அந்த வேகத்தைக் கொடுத்தவன் அந்த வழிப்போக்கன் என்பது யாருக்கும் தெரியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன