dance of the ear ringsகாதார் குழையாட


திருவெம்பாவை – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14

திருப்பாவை – 14

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். 14
//

இன்றைக்குத் திருவெம்பாவை முந்தி விட்டது -இலக்கிய, பக்தி அனுபவத்தில்.

தமிழ் அந்தப் பெண்களோடு ஆடியும் பாடியும் பூம்புனலாகக் குதித்துப் பெருகி வருகிறது மணிவாசகர் கவிதையில்.

1) திறம்பாடியா அல்லது ஆதித் திறம்பாடியா? ஆதியையும் பாடி அந்தத்தையும் பாட இந்தப் பெண்கள் என்ன முக்காலம் உணர்ந்த ஞானியரா? அல்லது இறையன்பு இப்படிச் சொல்ல வைக்கிறதா?

2) பேதித்து – வேறுபடுத்தி என்று பொருள் கொண்டால், மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி இந்தப் பெண்களை வளர்த்த உமை (பெய்வளை ஆகுபெயர்). ஏன் பாகுபாடு காட்டி வளர்க்க வேண்டும்?

3) பெற்றெடுத்த – வழக்கத்தில் உண்டு. வளர்த்தெடுத்த?

4) கேரளப் பழைய இல்லங்களில் வீட்டுப் பரப்பில் குளமும் இருக்கும். அந்த அமைப்பு முறை இங்கே இருந்து போயிருக்கலாம்…புழக்கடை தோட்டத்து வாவி என்கிறாள் நாச்சியார். கொல்லைப் பக்கத்துத் தோட்டத்தில் அமைந்த குளம்.

5) கோவிலில் ஸ்ரீகாரியம் செய்யும் பணியாளர்களுக்கு டிரஸ்கோட் இருந்திருக்கிறது போல – செங்கல் நிறத்தில் முண்டு. தறியில் இருந்து குறுக்கப்பட்ட வேட்டி. அவர்கள் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அல்லர். தாம்பூலம் தரித்துப் பழகினால் எச்சில் ஊறி கருவறையில் இருக்கும்போது தரையில் வீழ்ந்து அசுத்தப்படுத்த வாய்ப்பு உண்டு. பேச்சிலும், மறையோதும் போதும் எச்சில் எதிரே தெறிக்கும். இந்தப் பணியாளர்கள் வெற்றிலை போடாத காரணத்தால் எப்பொழுதுமே வெண்பல்லோடு விளங்குகிறவர்கள்.

கோவில் ஊழியர்கள் வருண வேறுபாடு காட்டிச் சொல்லப்படவில்லை என்பதை நினைவு கொள்ள வேண்டும். பூசை புரிபவர்கள் இந்த ஜாதி, இனம் என்று எழுதாத விதி ஏற்படுத்தப்படாத பக்தியின், இலக்கிய அனுபவத்தின் பொற்காலம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன