This happened to Ambaiஅம்பைக்கு நேர்ந்த அனுபவம்


அம்பை எழுதுகிறார் –

//மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரை சிறுவர்கள் ஏறலாம். இரண்டு வாரங்கள் முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன் –பத்து வயதிருக்கும் — இரண்டு கால்களையும் கிட்டத்தட்டப் பாதி உடம்பையும் வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை. வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை.ஸ்டேஷன்களில் அங்கிங்கு அலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன். மறுத்தான். ”விழுந்துவிடுவாய் பையா, பிடிவாதம் பிடிக்காதே” என்று வற்புறுத்தி உள்ளே வந்து உட்காரச் செய்தேன். தமிழ்ப் பையன் போல் தெரியவே, “ஏன் இப்படிச் செய்கிறாய் தம்பி?” என்று திட்டினேன். முறைத்தான். அடுத்த ஸ்டேஷனில் இறங்கினான். நான் சன்னலோர இருக்கையில் இருந்தேன். வண்டி கிளம்பியதும் சட்டென்று முன்னால் வந்து என் முகத்தில் காறித் துப்பினான். ஓடிவிட்டான். அருகிலிருந்தவர்கள் தந்த பேப்பரால் முகத்தைத் துடைத்துக் கொண்டேன். “உங்களுக்கு ஏன் இந்த வேலை எல்லாம்? அவன் விழுந்து தொலையட்டுமே?” என்றார்கள் எல்லோரும். எனக்கு அவனிடம் கோபமே வரவில்லை. இவ்வளவு கோபமும் ஆத்திரமும் உள்ள அவன் எதிர்காலம் என்னவாகும், அவனைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்பட்டேன். மும்பாயில் இப்படி எத்தனை சிறுவர்கள்!//

கவலை தரும் சூழ்நிலை இது. அம்பைக்கும் அந்தப் பையனுக்கும் வயது வித்தியாசம் குறைந்தது ஐம்பதாவது இருக்கும். தனக்கு வயதில் மூத்தவரை அவர் ஒரு பெண் என்ற ஒரே காரணத்துக்காக மதிக்க்காத மனப்போக்கு தான் பின்னால் மாபாதகங்கள் செய்ய வழி வகுக்கிறது.

ஐந்திலே வளைக்க அன்பு கூட துணை செய்யவில்லையே.. இருபத்தைந்திலே?

*************************************************

வெங்கட்நாராயணா தெரு பெருமாள் கோவிலில் தினசரி கதாகாலட்சேபம், பக்திப் பேருரை நிகழ்த்தும் பெரியோர்களுக்கு ஒரு கோரிக்கை. உங்கள் உரைக்கு நடுவே ஒரு ஐந்து நிமிடம் இதைப் பற்றிப் பேசுங்கள் –

கோவிலுக்கு முன்னாலும் மற்ற இடங்களிலும் சாலையில் உள்ள zebra crossing-களில் பாதசாரிகள் கடக்கும் போது வாகனங்களை ஓட்டி வருகிறவர்கள் கண்மூடித்தனமாக, நிற்காமல் வண்டியின் வேகத்தைக் குறைக்காமல் (சிலர் அசிங்கமாகத் திட்டுவதும் உண்டு) போவது ரௌராவதி நரகங்களில் அவர்களைச் சேர்க்கும் பாவம்.

நடப்பவர்கள் இஷ்டத்துக்குத் தெருவைக் கடக்காமல் இந்த வரிக்குதிரைத் தடங்களில் மட்டும் கடக்க வேண்டும். கடக்காதவர்கள் அமரராகும் போது வைதாரணி நதியைக் கடக்க படகு ரிப்பேர் ஆகி காலமெல்லாம் காத்திருக்க நேரும்.

ஆமென்

***********************************************

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன