newspaper artபத்திரிகை ஓவியங்கள்

<!--:en-->newspaper art<!--:--><!--:ta-->பத்திரிகை ஓவியங்கள்<!--:-->


இதுவும் அதுவும் உதுவும் – 4

இரா முருகன்

Share

இரா.முருகன்

சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும்.

டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து வரை குறுகி வரும் குளிர் காலத்தில் பாதி நகரம் சரணம் ஐயப்பா விளிக்க ஆரம்பித்து கேரளா எக்ஸ்டென்ஷன் ஆகிவிடுவதால், நெற்றியில் சந்தனமும், மலையாள தாடியும், கழுத்தில் துளசி மாலையுமாகப் பாதி சென்னை முகம் மாறும். மீதி, சபா கேண்டீனில் கீரை வடை சாப்பிட காரில் வந்து இறங்கும் மேட்டுக்குடி மூஞ்சியில் பிய்த்தது. ஈரக் கையோடு உள்ளே போய் அருணா சாயிராம் கச்சேரியில் மராத்தி அபங்கில் உருகி திரும்ப வெளியே வந்து சபா கழிவறை மூத்திர வாடையும் காதில் விழும் மீதிப் பாட்டுமாக அடை அவியலை அதம் செய்ய வாயைத் திறக்கும் அது.

சென்னையின் மழைக்கால முகம் வேறே மாதிரி. சுரணை குறைந்து மரத்துப் போன உடம்பும், மனசுமாக, தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கால் அமுங்க கையில் லெதர் பையில் வைத்த காலி லஞ்ச் டப்பாவோடு நடக்கிறவனின் முகம் அது. சேறும் சகதியும் பள்ளமும் மேடும், கடந்து கலங்கிய நீரை மேலே எறிந்து விட்டு சீறிப் பாய்கிற கார்களைக் கவனிக்காமல் செல்போனில் பேசிச் சிரித்தபடி நகர்கிற, ஈர சல்வார் காலோடு ஒட்டிய இளம் பெண்ணின் முகம் அது.

வெட்டி வைத்த சாக்கடைப் பள்ளத்தில் தலை குப்புற வீழ்ந்து, நெட்டுக் குத்தலாக அதில் பயிர் செய்த இரும்புக் கம்பிகளில் ஒரு பத்து இருபதாவது ஒரே நேரத்தில் கழுவேற்ற பரிதாபமாக மரித்த அந்த இளம் பெண்ணின் குழந்தைத்தனம் மாறாத முகமாக சென்னையின் மழைக்கால முகம் போன வாரம் பத்திரிகைகளில் பயமுறுத்தியது.

உடனே அது மறக்கப்பட்டு, மழை நின்ற சென்னையின் முகம் டெண்டுல்கரின் நூறாவது செஞ்சுரிக்காக ஆவலோடு காத்திருக்கப் பார்வையில் படுகிறது. டெண்டுல்கர் இன்னும் ஒரு நூறு செஞ்சுரி அடிக்கட்டும். சாக்கடைக் குழாய்ப் பள்ளத்தில் யாரும் எப்போதும் விழாத சந்தோஷத்தில் சென்னை சந்தோஷமாகச் சிரித்தபடி அதை வரவேற்கட்டும்.
88888888888888

இரண்டு வாரம் முன் எழுதியதைத் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களைப் பாதிக்கக் கூடிய நிகழ்வுகளைப் பற்றி வந்த கருத்துப் பகிர்தலைப் படித்திருக்கலாம்.

சில கதைக் கருக்கள் மனதின் ஆழத்தில், கிட்டத்தட்ட பாரம்பரிய நினைவிலிருந்து வருகிற மாதிரி புறப்பட்டும் வரும். அதே கரு பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஐரோப்பாவிலோ, ஆப்ரிக்காவிலோ, அல்லது இங்கே சென்னை நுங்கம்பாக்கத்திலேயோ இன்னொரு எழுத்தாளருக்கு, வேறொரு காலத்தில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

ஒ.வி.விஜயன் எழுதிய பிரபலமான மலையாளச் சிறுகதை ‘பலி காக்கைகள்’. கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வெள்ளாயி அப்பன் நகரத்துக்குப் புறப்படுகிறான். அவனுடைய மகனைத் தீவிரவாதி என்று பிடித்துப் போய் தூக்கு தண்டனை விதித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு நாளில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

சிறைக் கம்பிகள் குறுக்கே நிற்க, மகனும் அப்பனும் கடைசி முறையாகச் சந்தித்துக் கொள்கிறார்கள். ‘நான் தப்பு எதுவும் செய்யலே அப்பா’ என்று சொல்லும் மகனைப் பிரிய மனமே இல்லாமல் பிரிகிறான் அந்தத் தகப்பன். அடுத்த நாள் தூக்குதண்டனை நிறைவேற்றி, சடலத்தை வண்டியில் எடுத்துப் போய் அரசாங்கமே கொள்ளி போட்டு விடுகிறது. இவன் இயலாமையோடு அதைப் பார்த்து விட்டு கடற்கரை போகிறான். கொண்டுவந்த கட்டுச் சோறு பொதியவிழ்ந்து கொள்கிறது. இறந்தவர்களுக்கு திவசம் தரும்போது பிண்டம் தின்ன வரும் காக்கைகள் அந்தச் சோற்றைத் தின்ன இறங்கி வருகின்றன.

இந்த அருமையான கதையின் சாயலில் ஒரு ஸ்பானிஷ் சிறுகதையைப் படித்ததாக இலக்கிய விமர்சகர் காலம் சென்ற எம்.கிருஷ்ணன் நாயர், தன் ‘சாகித்ய வாரபலம்’ பத்தியில் குறிப்பிட்டிருந்தார். குற்றம் சொல்லி இல்லை, தகவலுக்காக.

கல்கி தீபாவளி மலருக்கு என்னிடம் ஒரு கதை கேட்டபோது நான் ‘சேது’ என்ற சிறுகதை எழுதிக் கொடுத்தேன். ராமேஸ்வரம் பின்னணியில், மனைவியைத் தொலைத்த ஒரு யாத்திரிகனின் பார்வையில் நகரும் கதை. கதை போய்ச் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் கல்கி ஆசிரியர் தொலைபேசினார் –

‘நல்ல கதையா இருக்கு. ஆனா ஒரு சிக்கல். இதே கருவை வைச்சு முப்பது வருஷம் முந்தி கல்கி ஒரு கதை எழுதி இருக்கார். இது ராமேஸ்வரத்தில் நடக்கறதுன்னா அது காசியில் நடப்பது. அதை விட முக்கியமான விஷயம், இந்த வருட தீபாவளி மலரில் கல்கி எழுதின கதை ஒண்ணு போடலாம்னு தேடியபோது அதைத் தான் தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்’.

உடனே கதாபாத்திரங்களையும் கருவையும் மாற்றி அதே ராமேஸ்வரம் பின்புலத்தில் ‘சேது’ கதையை மறு வடிவமைத்துக் கொடுத்தேன். இதுக்குப் பத்து வருஷம் கழித்துதான் கல்கி எழுதிய அந்தக் கதை படிக்கக் கிடைத்தது. சேது வெர்ஷன் ஒன்றுக்கும் அந்தக் கதைக்கும் பத்து சதவிகித ஒற்றுமை இருந்தால் அதிகம். ஆனாலும் பழைய சேதுவைப் படிக்கும் யாருக்கும், அவர் கல்கி கதையைப் படித்தவராக இருந்தால் கல்கி நினைவு வராமல் போகமாட்டார்.

அசாதாரணமான நிகழ்வுகள் பூகோள எல்லைகளைக் கடந்து இரண்டு படைப்பாளிகளை ஒரே நிகழ்வின் அடிப்படையில் எழுத வைத்திருக்கலாம். எழுதத் தூண்டுகிற சம்பவம் தவிர வேறு எந்த விதமான பொதுத் தன்மையும் கொள்ளாது இவர்கள் இருப்பதால் எழுத்தின் நடையும், வீரியமும், கருவும், உருவும் எல்லாமே இரண்டு படைப்புகளிலும் வேறுபட்டு வரலாம். வரும்.

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் முடிவில் வரும் சம்பவம் மறக்க முடியாதது – கதைசொல்லியான சந்திரசேகரன் 1947-ல் ஹைதராபாத் கலவரங்களின் போது ஒரு விசித்திரமான சூழலில் சந்திக்கிற பெண் பற்றியது. சுய உணர்வே இல்லாமல் யந்திரமாக பைஜாமா நாடாவை அழிக்கிற அந்தப் பெண்ணின் செய்கையில் அவன் நிலைகுலைந்து போய் நிற்பதோடு நாவல் முடியும்.

உருது –இந்தி எழுத்தாளர் சதத் உசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (திற) சிறுகதையைப் படித்தபோது உடனடியாக அ.மி நினைவுக்கு வந்தார். சதத் உசைன் கதை அதே 1947-ல் நாட்டைத் துண்டாடிய இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து எழுந்த பாலியல் வன்முறையும் இனப் படுகொலையுமாக இருண்ட காலகட்டத்தைப் பற்றியது. பாலியல் வன்முறைக்கு இலக்கான இளம் பெண் ஒருத்திக்கு அவசர மருத்துவ சிகிச்சை தர ஒரு மருத்துவ மனைக்கு அவள் எடுத்துச் செல்லப்படுவாள். சிகிச்சை அளிக்க வந்த டாக்டர், அறையில் இருட்டு மண்டி இருந்ததால், படுத்த படுக்கையாக இருக்கும் அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல், ஜன்னல் வெளிச்சத்தை உள்ளே வர அனுமதிக்க, ஜன்னல் திரைப்பக்கம் கைகாட்டி, அதை சற்றே விலக்கச் சொல்வார் –‘கோல்தோ’. பாதி மயக்கத்தில் இருந்த இளம்பெண் இதைக் கேட்டதும் உடனே உடுப்பை உயர்த்துவாள். அ.மி கதை போல் இதுவும் மனதை நெகிழ வைப்பது.

இந்த சம்பவம் அரசியல் கொந்தளிப்பு மிகுந்த 1947-ல் உண்மையாக நடந்து இரண்டு எழுத்தாளர்களையும் பாதித்திருக்க வாய்ப்பு உண்டு. சதத் உசைன் கதையை முந்திப் படித்து பதினெட்டாம் அட்சக் கோட்டை அடுத்து எடுத்திருந்தால் உசைன் நினைவு வந்திருப்பார். இந்தச் சம்பவம் தவிர வேறு எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லாத படைப்புகள் இந்த இலக்கிய பிரம்மாக்கள் படைத்தவை. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது போல் ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்பதும் சுவாரசியமானதே.

8888888888888888888888888888888888888888888888888888888888888888

‘மழைநாள் திவசம்’ கவிதை எழுதிய ஞானக்கூத்தன் ‘மழைநாள் கலை இலக்கியக் கூட்டம்’ என்று இன்னொன்று எழுதாததற்குக் காரணம், இப்படியான கூட்டங்கள் அபூர்வமாகவே நடக்கின்றன என்பதே. கொட்டும் மழையில் இலக்கியக் கூட்டத்தை, அதுவும் சென்னைப் புறநகர் பகுதியில் ஏற்பாடு செய்து விட்டு எப்படியோ ஆட்டோ பிடித்து அன்றைய பேச்சாளரான முதுபெரும் இலக்கிய விமர்சகர் சி.சு.செல்லப்பாவோடு விருட்சம் பத்திரிகை ஆசிரியர் அழகியசிங்கர் போய் இறங்கினார். நாலே நாலு பேர் வந்த அந்த மழைக் கூட்டத்தைப் பார்த்து ‘விருட்சம் பட்டுப் போகட்டும்’ என்று சி.சு.செ விஸ்வாமித்திரனாக சாபம் கொடுத்ததை வெள்ளந்தியாக அழகிய சிங்கர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது விருட்சம் கூட்டம் இல்லை. இலக்கியத்தையும் பேசப் போவதில்லை. ஒரு சேஞ்சுக்காகக் கலையைப் பற்றிய கூட்டம். ஓவியர் மணியம் செல்வன் பேசுவார் என்று என் பதிப்பாளர் – நண்பர் பத்ரி அனுப்பிய ஈ-மெயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு உடனே டெலிட் செய்யாமல் இன்னொரு தடவை கவனிக்க வைத்த விஷயம் – கூட்டம் நடைபெறும் இடம். வீட்டிலிருந்து வெறுமனே இல்லாவிட்டாலும் மெகபோன் வைத்துக் கூப்பிட்டால் காதில் விழக்கூடிய தூரத்தில் இன்னும் ராட்டை நூற்கிற தக்கர் பாபா வித்யாலயா. அதுவும் சனிக்கிழமை சாயந்திரம். போகலாம் என்று தீர்மானித்தபோது போயிடுவியா என்று கூவி சவால் விட்டுக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே மழை தொடர்ந்தது.

கலை இலக்கியக் கூட்டங்களுக்கு ஆண்கள் அணியக் கூடிய சிலாக்கியமான உடுப்பு – மேலே ஜிப்பா; இடுப்பில் வேட்டி அல்லது ஜீன்ஸ் அதுவுமன்றி பைஜாமா. மழைக்கு உடுத்தி அலைய வாகான அரை டிராயரில் இப்படியான கூட்டத்துக்குப் போனால் ஓவியக் கலைக்கு அவமதிப்பை மறைமுகமாகக் காட்டியதாக நம் மேல் விமர்சனம் வருமா? சமூக நாகரீகம் குறித்த சிக்கலை ஒரு மணி நேரம் யோசித்துத் தீர்த்து, முழுசாக உடுத்து தக்கர்பாபா அரங்கத்தில் முக்கால்வாசி ஈரமாக நுழைந்தபோது வரவேற்ற பத்ரி ஷார்ட்ஸில் தான் இருந்தார். இன்னும் நாலு நிஜார் கனவான்களும் கூட்டத்தில் உண்டு. இனி கூட்டம் அறிவிக்கும்போதே டிரஸ் கோட் என்ன என்றும் எழுதி விட்டால் சிக்கல் இல்லை.
88888888888888888888

மழையாக இருந்தாலும் இருபது பேர் எப்படியோ வந்து சேர்ந்திருந்த கூட்டம். மணியம் செல்வன் சாஸ்திரத்துக்கு நாலு வார்த்தை பாரம்பரிய சித்திரக் கலை, ரவிவர்மா, கோட்டோவியம், சித்தன்ன வாசல் என்று ஒப்பித்து விட்டு ‘அவை நிறைந்து சாவகாசமாக ஒரு கூட்டம் போடுங்கள், வந்து நிறையப் பேசறேன்’ என தப்பித்திருக்கலாம். வந்திருந்த இருபது பேரையே இருநூறு பேராகப் பாவித்து கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரம் உற்சாகத்தோடு சொற்பொழிந்தார் அவர்.

எழுத்தாளர் யாராவது இருபது நிமிடத்துக்கு மேல் பேசினால் முன்னால் உட்கார்ந்து அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்டு மொபைலில் மன்மோகன் சிங்கை கிண்டல் செய்து ட்வீட் அனுப்பிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் ம.செ மொபைலை சட்டைப் பையில் இருந்து எடுக்கவே விடவில்லை. ரெண்டரை மணி நேரம் என்ன, ராத்திரி ரெண்டு வரைக்கும் அவர் பேசினாலும் கேட்கக் கேட்க அலுப்பே தட்டாத பேச்சு. வெறும் பேச்சு மட்டும் இல்லை. லேப்டாப் கம்ப்யூட்டரில் கொண்டு வந்த ஓவியங்களையும் காட்டி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதால் மனம் தானே ம.செ பொழிந்ததில் லயித்து விட்டது.

மொத்தம் ஐந்து ஓவியர்கள் – மாதவன், எஸ்.ராஜம், சில்பி, கோபுலு, மணியம். அப்புறம் ஆறாவதாக மணியம் செல்வனும். இவர்கள் தான் டாபிக்.

ஒற்றைப் பார்வையில் இவர்கள் எல்லோரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் தொடர்ந்தோ தீபாவளி, பொங்கல் மலர்களில் மட்டுமோ படம் வரைந்த ஓவியர்கள். ‘முப்பது பைசா விலைக்கு விற்கிற பத்திரிகைக்காக’ உசிரைக் கொடுத்து நுணுக்கமாக மரபு ஓவியம் வரைவதில் வல்லவர்கள். அதாவது அறுபதுகளில். இப்போதென்றால் பத்து ரூபாய்க்கு விற்கிற பத்திரிகைகள்.

இலக்கிய வாதி எழுத்தாளர்கள் ஜனரஞ்சக எழுத்தாளர்களோடு ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டால் அனாசாரம் என்று வெகு சமீப காலம் வரை நினைத்தது உண்டு. அது போல், ஆர்ட் காலரிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி பத்து லட்சம் இருபது லட்சம் விலைக்கு நவீன பாணி ஓவியங்களை விற்று லண்டன் – நியுயார்க் பறக்கிற குறுந்தாடி ஓவியப் பிரபலங்கள் இந்த ஜனரஞ்சக ஓவியர்களை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. ஓவிய விமர்சகர்ளும் அப்படியே.

ஆனாலும் முப்பது பைசா ஓவியர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது என்பது உண்மை. கதைக்குப் படம் போட்டும், கார்ட்டூன் போட்டும் சராசரி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் இவர்கள். ‘தமிழ் சரியா படிக்கத் தெரியாது. பத்திரிகையிலே ஜோக் மட்டும் பார்ப்பேன்’ என்று மேட்டுக்குடி தமிழர்கள் போன நூற்றாண்டு முழுக்க ஆடம்பரமாக அறிவித்தது உண்டு. இப்போது நடுத்தர வர்க்கமும் அதே போல் பேச ஆரம்பித்து விட்டது. அவர்களுக்கும் பரிச்சயமான பெயர்கள் மேலே குறிப்பிட்ட எல்லோரும்.

மாதவன் பத்திரிகை ஓவியத்தோடு கூட பிரதானமாக, சினிமா கட் அவுட்டும் பேனரும் வரைந்து பிரபலமான ஓவியர். ஆனாலும், இருபது பேர் வந்த கூட்டத்தில் பத்து பேருக்கு அவரைத் தெரியவில்லை. அறிமுகப்படுத்துகிற வேலையை கச்சிதமாகச் செய்தார் ம.செ. அழுத்தமான நிறங்கள், அழுத்தமான கோடுகள். ஆற்றில் பளிங்கு நீரையும், மேலே நீல வானத்தையும் வண்ணமும் தூரிகையின் துடிப்பும் வெளிப்படுத்த அவர் வரைந்த பத்திரிகை ஓவியங்கள் காலண்டர் ஆர்ட் என்று ரெண்டே வார்த்தையில் தள்ளி விடலாம். நஷ்டம் நமக்குத்தான்.

பேனர் ஆர்ட்டிஸ்களின் கலை வெளிப்பாட்டுச் சூழல் மற்ற கலைஞர்களுடையதை விடக் கஷ்டமானது. பரபரப்பான வீதியில் சாரம் கட்டி உச்சியில் உட்கார்ந்து, எப்படியோ பிரஷ்ஷயும் வண்ணங்களையும் அங்கே பக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு, உள்ளங்கையில் வைத்திருக்கிற புகைப்படத்தைப் பார்த்து அதைப் பல மடங்கு பிரம்மாண்டமாக அச்சு அசலாக அதேபடிக்கு வரைய வேண்டும். மாதவன் சாரம் கட்டி வரைந்தாரா தெரியவில்லை. ஜெமினியின் இந்தி ‘சந்திரலேகா’வுக்காக அவர் வரைந்து கொடுத்து பம்பாய்க்கு எடுத்துப் போன பேனரில் கதாநாயகி ராஜகுமாரியின் லோலாக்கு மட்டும் ஆறு அடி உயரம் என்றால் பேனரின் நீள அகலம் மற்றும் உயரத்தைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

எஸ்.ராஜத்தின் பாட்டு மாதிரி ஓவியமும் அடக்கமான அழகு கொண்டது. மாதவன் போல் பளிச்சென்ற நிறங்கள் கிடையாது. கண்ணுக்கு இதமான வண்ணங்கள் பெரும்பாலும். வண்ணங்களோடு மனதில் நிற்பது அவர் பிடிவாதமாகக் கடைப்பிடித்த அஜந்தா ஓவியப் பாணி. சாவி பத்திரிகை மலரில் படம் போட கொஞ்சம் பாணியை மாற்றுங்கள் என்று கேட்டபோது மறுத்து விட்டாராம் இந்த ஓவிய-இசை மேதை. பெரும்பாலும் தீபாவளி மலர்களிலேயே இவர் திறமை வெளிப்பட்டது என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட அறுபது தீபாவளிகள்!

ராஜம் இன்னொரு புதுமையும் செய்திருக்கிறார். அமரரான காஞ்சி மூத்த சங்கராச்சாரிய சுவாமிகள், மடத்தில் சிவபூஜை செய்கிற ஓவியத்தை கல்கி தீபாவளி மலருக்காக வரைய ஆரம்பித்தவர் தன் பாணியில் பூஜையில் பிரத்யட்சமான மூன்று தேவியரையும் வரைந்திருக்கிறார். விண்ணுலகத் தேவதைகளை சுலபமாக வரைந்தவர் மண்ணுலக சங்கராச்சாரிய சுவாமிகளின் உருவத்தை அதே பாணியில் வரையத் தயங்கி, மணியம் செல்வத்திடம் ஓவியத்தைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்லி இருக்கிறார். தலைமுறை இடைவெளி கடந்த இந்த நட்பைச் சொன்னபோது ம.செ நெகிழ்ந்துதான் போனார்.

ஓவியர் சில்பி தத்ரூபம் என்பதின் மறு பெயர். அவருடைய மயிலைக் கற்பகாம்பாள் ஓவியத்தைக் காட்டினார் ம.செ. கோவில் கர்ப்பகிருஹத்தில் போய் நின்றால் கூட இந்த அற்புத தரிசனம் கிடைக்காது என்று பக்தர்களைக் கன்னத்தில் போட்டுக் கொள்ளவைக்கும் நேர்த்தி. இருக்காதா பின்னே? காலையில் கோவிலுக்குள் போய் வரைய ஆரம்பித்து, உச்சி காலம் முடிந்து கோவிலைப் பூட்டும்போது அவரை உள்ளேயே வைத்துப் பூட்டிப் போய், சாயந்திர பூஜைக்கு திரும்பத் திறந்தபோது முடிந்த ஓவியமாம் அது. முடித்தாலும் திருப்தி இல்லாமல், கற்பகாம்பாளுக்கு அணிவிக்கும் எல்லா நகைகளையும் ஒரு தடவை வாங்கிப் பார்த்து நுணுக்கமான திருத்தங்கள் செய்து தான் சில்பி ஓவியத்தை முடித்தாராம். மரபு ஓவியத்தில் ஒரு மைல்கல் அவர்.

கோபுலுவைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை. அந்தப் பெயரைச் சொன்னாலே நமக்கு ஜெயகாந்தனின் சாரங்கனும், ஹென்றியும், கொத்தமங்கலம் சுப்புவின் சிக்கல் சண்முகசுந்தரமும் தில்லானா மோகனாம்பாளும், வாஷிங்டனில் திருமணக் காட்சிகளும் இன்னும் ஏகமான கோட்டோவியங்களும், வண்ண ஓவியங்களும் நினைவில் வரும். முக்கியமாக அந்தக்கால ஆனந்த விகடன் அட்டைப்பட சிரிப்புத் துணுக்குகள்.

கோபுலு வரைந்த ஆனந்த விகடன் அட்டைப்பட நகைச்சுவை ஓவியத்தை ம.செ காட்டினார். மனதிலேயே நிற்கிறது. 1940-களின் நடுத்தர வர்க்க வீடு. வீட்டு வாண்டுகளுக்கு ‘மாசாந்திர விளக்கெண்ணெய்’ கொடுக்கும் வைபவம். விளக்கெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு நிற்க, மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பையனை அம்மா விசிறிக் கட்டையைக் காட்டி மிரட்டுகிறாள். பக்கத்தில் அன்பே உருவான பாட்டி சர்க்கரை டப்பாவோடு நிற்கிறாள். வீட்டுக்கு உள்ளே இன்னொரு அறை. ரெண்டு டைமன்ஷன் படத்தில் எப்படி இந்த மேதை இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்தார்?நம்மால் அந்த உள்ளறையை உணர முடிகிறது. உள்ளறையில் அப்பா எதைப் பற்றியும் கவலைப் படாமல் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். இனி படத்தில் வரும் மறக்க முடியாத பாத்திரம் – அடுத்து விளக்கெண்ணெய் குடிக்க வரிசையில் நிற்கும் இன்னொரு குட்டிப் பையன். அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கோபுலு தவிர வேறே யாராலும் சித்தரிக்க முடியாது.

கோபுலு இன்னும் நம்மிடையே இருக்கிறார் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் பேறு.

‘சேர்க்கச் சேர்க்க சிற்பம், எடுக்க எடுக்க ஓவியம்’ என்றார் மணியம் செல்வன். சிற்பத்தில் இம்மி இடம் கூட விடாமல் நுணுக்கமாகச் செதுக்கும்போது கிடைக்கும் காட்சி அனுபவத்துக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை ஓவியத்தில் அங்கங்கே வெறும் வெளியை அப்படியே விட்டு கற்பனையில் நிரப்ப வைப்பது. மணியம் இதில் வல்லவர் என்று ம.செ காட்டிய அவருடைய ஓவியங்கள் கூறின.

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைக் கூட மறந்து விடலாம். ஆனால் மணியன் வரைந்த பழுவேட்டரையரையும் நந்தினியையும் மறக்க முடியுமா என்ன? அவர் மேல் கல்கிக்கு விசேஷப் பிரியம் இருந்திருக்கிறது. ஓவியக் கல்லூரியில் டிப்ளமா முடித்து விட்டு ஆறு மாதம் கழித்து கல்கி பத்திரிகையில் வேலைக்கு சேர்கிறேன் என்று மணியம் சொன்னபோது கல்கி கேட்டிருக்கிறார் – பத்திரிகையில் நீ வேலை பார்க்கப் போறியா, டிப்ளமா வேலை பார்க்கப் போறதா? படிப்பை முடிக்காமலே வேலைக்குச் சேர்ந்த மணியம் அதை ஒரு குறையாகவே கருதினாலும் கல்கி பத்திரிகை வேலையை கடைசி வரை ரசித்தே செய்திருக்கிறார். பத்திரிகைப் பெயர், விலை முப்பது காசு முதற்கொண்டு அட்டைப்பட ஓவியத்தோடு கூட வரைந்து எழுத வேண்டியிருந்த காலம் அது.

மேலே சொல்லிய எல்லா ஓவியர்களின் கலைச் சிறப்பையும் உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறை ஓவியரான மணியம் செல்வனின் படைப்புகள் மிளிர்கிறதை அவர் சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளலாம். சிவராத்திரி நேரத்தில் சிவபிரானை கருப்பு வண்ணத்தில் ஒரு நிழல் போல் தான் வரைந்த ஓவியத்தை ம.செ திரையில் காட்டினார். சிவனுக்கு முக்கண்னோ, மூக்கோ, நாசியோ செவியோ வாயோ எதுவுமில்லை. ஆனாலும் கற்பனையில் நிரப்பிக் கொள்ள சராசரி பத்திரிகை வாசகன் எந்த கஷ்டமும் படவில்லை.

ஆனாலும் அந்த ஓவியத்துக்கு உள்ளே ஓவியருக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறதாம். இதை மணியம் செல்வனுக்குச் சொன்னவரும் ஒரு வாசகரே.

‘படத்தைத் திருப்பிப் பாருங்க சார்’ என்றாராம் வாசகர் ஓவியரிடத்தில்.

திரையில் வந்த தன் சிவராத்திரி சிவன் ஓவியத்தைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டினார் மணியம் செல்வன். அங்கே துல்லியமாக ஒரு வினாயகர் தெரிந்தார். மணியம் செல்வனின் டாவின்சி கோட் இது என்று சந்தேகப் படுகிறவர்கள் அவருடைய மற்ற ஓவியங்களையும் தலைகீழாகப் பார்க்கவோ யோகாசனம் செய்தபடி பார்க்கவோ செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

(எழுதியது – 2010 -திண்ணை)

கோபுலுவின் ‘விளக்கெண்ணெய் குடி மஹா உற்சவம்’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன