என் புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – உணவு விடுதிகள் – தேளர், கரப்பர், மானுடர் உணவு

எல்லா அலுவலக, சமூக இடையாடலுக்கான நுகர்வோர் பொருள் விற்கும் கடைகள், உணவு விடுதிகள் என்று பல நிறுவனங்களில் தேளர், கரப்பர், மானுடர் என்ற இந்த மூன்று இனங்களின் தனிவெளியில் அவரவர் இனம் தாண்டாமல் வேண்டிய அளவு மட்டும் ஊடாடி வாழ்கிறார்கள்.

உணவைப் பொறுத்து மானுட இன உணவின் சுவைகளை மற்றவர்களும் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அழுகிக் கெட்டுப்போன உணவை பாகம் செய்து கரப்பர்களுக்கு மனதுக்கு உகந்த உணவாக உண்ணத் தருவது நீடிக்கிறது.

அந்த உணவு உருவாக்குமிடங்கள் மனுஷர்களுக்கான உணவு விடுதிகளிலிருந்து வெகுவாக அகன்றே அமைகின்றன. உணவு விஷயத்தில் கரப்பர்களோடு தேளர்களும் ஒரே நேர்கோட்டில் வருகின்றனர்.

புதுச்சிறப்பு கரப்பர் உணவு விடுதி ஒன்றை அரசு தொடங்கியபோது தேளர்கள் அங்கே அதிகமாகத் தட்டுப்பட்டார்கள். பன்றிகளுக்கு தவிட்டில் கலந்த மனிதக் கழிவை உண்ணத் தந்து பன்றிக் கழிச்சலை அவ்வப்போது கழியக் கழியக் கரப்பர்களுக்கு உண்ணத் தரும் உணவகம் அது.

கரப்பர்களைவிடத் தேளர்கள் அதிகம் உணவுண்டு வரும் விடுதி அது. இந்த இனங்கள் இரண்டும் எதை வேண்டுமானாலும் உண்ணட்டும், உண்ட பிறகு வாய் வாடை இன்றி இருக்க கிருமிநாசனி கொண்டு கொப்பளித்து பொது வெளியில் வரவேண்டும் என்று கட்டுப்பாடு உண்டு.

எனில், மனிதர்கள் வாய் கழுவாமல் வந்து எழுப்பும் வாய் துர்நாற்றம் கரப்பர்களை மயக்கும் நல்ல வாடை என்பதால் மற்றோர்க்கு இன்பம் கருதி மனித இனத்தின் வாய் நறுமணம் பேணுதல் கட்டாயம் இல்லை.

சிறப்பு உணவுக் கூடங்கள் ஊருக்கு வெளியே எந்த அறிவிப்புப் பலகையோ மின்னணுச் சுவர் அறிவிப்புகளோ இன்றிக் காணப்படும். பன்றிகள் உண்ணத் தவிடும் மனிதக் கழிவும் கலந்து தர சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகள் நல்ல ஊதியத்தில் நியமிக்கப் பட்டவர்கள்.

புது நாவல் தினை அல்லது சஞ்சீவனி – ஒரு பகுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன