நல்ல உணவு தன்னைத்தானே சமைத்துக் கொள்ளும், நல்ல மது…

திண்ணை டாட் காம் இணைய இதழில் வெளியாகும் என் புது நாவல் தினை – ஒரு சிறு பகுதி

புது நாவல் தினை – நல்ல உணவு தன்னைத் தானே சமைத்துக்கொள்ளும்

”மகா ப்ரபு, சங்க காலம் யார் போனது? அந்தக் காலத்தைப் பகுதி வனைந்த நிகர்மெய் வெளியில் அல்லவோ எங்களை அனுப்பி வைத்தீர்கள்”.

குயிலி சிரித்தபடி அமர்ந்தாள். பெருந்தேளர் சிரிக்க அவையே நகைத்தது.

“சுனையும், மலையும், கூத்துப் பரம்பும் பகுதி உண்மை. மற்றபடி அங்கே இருந்தவர்கள் சிலர் உண்மை மனிதர்கள். மற்ற சிலர் செயற்கையாக வனைந்து ஊடாட அனுப்பப்பட்டவர்கள். எல்லாமே புது அனுபவம்”. வானம்பாடி பெருந்தேளரை நோக்கிக் கூறினாள்.

நீங்கள் பறந்தது? பெருந்தேளர் அவளை உற்று நோக்கியபடி கேட்டார்.

தற்காலிகமாக எங்களுக்குக் கிட்டிய கொடை.

கண்கள் நனையப் பார்த்தாள் குயிலி.

அந்தக் குழல்களோ?

எங்களுக்கான இசையை, கலையை, இலக்கியத்தை நீங்கள் எப்போதும் மதிப்பீர்கள் என்பதற்கான அழுத்தமான அடையாளம். கூடவே தொழில்நுட்பத்தையும். அவை காலம், வெளி கடந்து ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரத்தில் தொடர்பு ஏற்படுத்தித் தரும் அற்புதமான ட்ரான்ஸீவர்களன்றோ.

அதேதான். குழலில் மேலும் என்ன புதுமை கண்டீர் சிறுமியரே?

அவை தம்மைத் தாமே இசைத்துக்கொண்டன, நல்ல இலக்கியம் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பது போல்.

வானம்பாடி சொல்ல குயிலி மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் – இது இன்னும் எவ்வளவு காலம் சொல்லிப் போக வேண்டும்? நல்ல சிற்பம் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும். நல்ல ஓவியம் தன்னைத்தானே வரைந்து கொள்ளும். நல்ல உணவு தன்னைத்தானே சமைத்துக் கொள்ளும். நல்ல மது தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும். நல்ல கலவி தன்னைத்தானே புணர்ந்து கொள்ளும்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன