என் புது நாவல் ‘தினை’ – மனிதர்களுக்கு மேலான தேளர்களும் கரப்பர்களும் வாழும் கோகர் மலைநாடு The country of the Scorpions and the Roaches

என் புது நாவல் தினை, இணைய இதழ் திண்ணையில் வாராவாரம் வெளியாகிறது. இந்த வாரம் வெளியாகி இருக்கும் அத்தியாயம் -5 சில பகுதிகள்

பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக் காத்திருக்கும் பேராசான் பெருந்தேளர். கோகர் மலைநாட்டின் என்றென்றைக்குமான, மாபெரும் தலைவர் பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர்.

குயிலியும் வானம்பாடியும் தேளசைவு போல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செலுத்தி, உக் உக் உக் என்று அரசு மொழியான தேள்மொழியில் பெருந்தேளரிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அரசுமொழியான தேள்மொழியில்தான் அரசு நடவடிக்கைகள் நடத்தப்படும். அரசுமொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உள்ளே வாருங்கள். இந்தக் கதவை ஒரு தடவை திறந்தால் எத்தனை கஷ்டப்பட்டாலும் அடுத்த பத்து நிமிடம் மூடாது என்பது தெரியும்தானே.

தடித்த முன் காலை அன்போடு குயிலிக்கு முன் உயர்த்தினார் பெருந்தேளர். சொல்லி வைத்தாற்போல் அந்தப் பெண்கள் மானுடச் சிரிப்பைக் கலகலவென்று உதிர்த்தார்கள்.

தான் சொன்ன நகைச்சுவைத் துணுக்கு அவர்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அடைந்த பெருந்தேளர் கதவு திறந்ததும் ’ஏமப் பெருந்துயில் நிகழ்வும் நிர்வாகமும்’ பகுதிக்குள் நுழைந்தார்.

இது தேள்களின் மேட்டிமை துலங்கித் தெரியும் அலுவலகப் பகுதி என்பதால் பொறுப்பில் இருக்கும் தேளர்கள் எல்லோரையும் கண்டதுமே குயிலியும் வானம்பாடியும் மரியாதை செலுத்த பதிலுக்கு அமுக்கமாக ஒரு தலையாட்டு மட்டும் செய்து அவர்கள் உள்ளே வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.

மிடுக்காக உடையணிந்த காவல் கரப்புகள் முதல் தடவையாகக் கண்ணில் பட்டன. சராசரி மூன்றடி உயரமும், ஐந்து அடி நீளமும், இரண்டடி அகலமுமான அந்தக் கரப்புகளின் பலம் வாய்ந்த இறக்கைகள் இரண்டரை அடி உடலின் இரண்டு பக்கத்திலும் பறக்கத் தயாராக வெளியே துருத்திக் கொண்டிருந்தன.

தேளர்களைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்காத கரப்பர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச மரியாதையில் திருப்தி அடைந்திருந்தனர். உரிமை, அதிகாரம், அந்தஸ்து எல்லாம் கிடைத்த சந்தோஷம் கரப்பர்களுக்கு. மானுடர்களைவிட மேலான இடம் கிடைத்த சமூக அமைப்பில் உயிர்த்திருப்பதில் பெருமை கொண்டவை கரப்பர்கள். அடுத்து இன்னும் மேலான விருதுகளும் உரிமைகளும் கிடைக்கப் போவதை எதிர்பார்த்துப் பரபரவென்று நகர்ந்து கொண்டிருந்தன அவை.

குயிலி வாயில் காவலர் கரப்பருக்கும் தலைக்கு மேல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செய்ய அது லட்சியமே செய்யவில்லை.

அங்கங்கே அறிவிப்புப் பலகைகள் வெண்மை நிறத்தில் ‘மேலதிகப் பாதுகாப்பு வெளி. வரவு தடை செய்யப்பட்டுள்ளது’ என்று எச்சரித்தன.

மனிதர் உலகில் சிவப்பு எச்சரிக்கும் நிறம் என்றால் தேளுலகில் வெண்மை அப்படி அச்சப்படுத்துவதாகும். இன்னும் ஆறு மாதத்தில் மாற்றுப் பிரபஞ்சம் மேல் மட்டத்தில் ஆட்சி மாறி, அடுத்த ஆறு மாதம் தொடங்கும்போது அதுவும் மாறக் கூடும். ஆட்சி மாற்றம் அறிவிக்கப்படாது. பழக்க வழக்கங்களில் நுண்ணிய வித்தியாசங்கள் எதிர்ப்படுவதை வைத்துத்தான் அது ஊகித்தறியப் படுகிறது.

பெருந்தேளருக்குக் கீழ்ப்பட்ட, ராணுவ உடுப்பணிந்த, ஆத்திர அவசரத்துக்குப் பறக்க இறகு கொண்ட செந்தேளர் ஒருவரும் அவரை மரியாதைக்குரிய இடைவெளியில் தொடர்கின்ற கீழ்ப்பட்ட நிலை அதிகாரர்களும், அவர்களின் பின்னால், மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படும் கரப்பு அதிகாரிகளும் வந்து சேர, மேடையில் பதினைந்து பேரும், அரங்கில் முப்பது பேருமாக மண்டபம் நிரம்பி வழிந்தது.

அறைக்கு வெளியே இரட்டைக் கதவுகளுக்கு சிறு தொலைவில் இரண்டு சாதாரண இருக்கைகள் போட்டுக் குயிலியும் வானம்பாடியும் அமர்ந்திருந்தனர். அந்த அமைப்பிலேயே மனுஷப் பிராணிகள் அவர்கள் இருவர் மட்டும்தான்.

ஒவ்வொரு தலைமுறை மனுஷ ஜாதியிலும், பதிமூன்று விழுக்காடு பேர், உயர் மனிதர் என்ற மேட்டிமை சொல்லும் தோளில் அணியும் பட்டி மூலம் அடையாளம் கண்டு அதிக சலுகைகளோடு ஆதரிக்கப் படுகிறார்கள்.

குயிலி, வானம்பாடி இருவருமே உயர் மனிதர்கள் என்பதால் அவர்களுக்கு அரசு ஓருரு அமைப்பில் பணி நிரந்தரமாக்கப் பட்டிருக்கிறது.

பின் வரிசையில் நின்ற இரு கரப்பு அதிகாரிகள் உரக்கச் சொன்னது இப்படியாக இருந்தது –மரியாதைக்குரிய பெருந்தேளர் உலகப் பெருந்தலைவரின் அவை தொடங்குகிறது. எல்லோரும் வணக்கம் செய்ய உத்தரவாகியுள்ளது.

தேளர்கள் நின்று சேர்ந்து கைதட்டி மரியாதை செலுத்தினர். கரப்பர்களோ இடுப்பு வளையக் குனிந்து வணங்கினார்கள். மரியாதை செலுத்துதலுக்கு பத்து நிமிடம் சென்றது. அடுத்து கூட்டத்தைக் கூட்ட வேண்டிய காரணத்தை ஓர் உயர் தேளதிகாரி விளக்கினார். அதன் மானுட மொழி வடிவம் இப்படி இருந்தது –

நாவல் தினை அத்தியாயம் ஐந்து

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன