புது நாவல் ‘தினை’ – அத்தியாயம் இரண்டு – பூக்களின் நண்பன் -திண்ணை இணைய இலக்கிய இதழில்

மாடத்தி சொன்னாள் –

”இன்னிக்கும் தேனும் தினைமாவும் தான் காலை ஆகாரமாக கழிக்க வேண்டியிருக்கு. இந்த மாதம் நாலு விருந்தாளி வந்தாச்சு. யவனன், சீனன் என்று அவங்க எல்லோரும் நாம் தினம் சாப்பிடறது இதுதான், எது, தேன், தினைமாவு. இதைத் தான் வாழ்க்கை முழுக்க தின்னுட்டிருக்கோம்னு நினைக்கறவங்க”.

”அதை உறுதிப்படுத்த குரங்கு வாழைப்பழம் திங்கற மாதிரி அவங்க வந்து பார்க்கறபோது எல்லாம் இதை நாமும் சாப்பிட்டு அவங்களுக்கும் தரணும்.

”போன மாதம் நீ வரலே அப்போ வந்த பயணி நாம் தேனும் தினைமாவும் சாப்பிடறதை சித்திரமாக வரையணும்னு அழிச்சாட்டியம் பண்ணினார். மெழுகுசீலையிலே வர்ணம் தேச்சு வரைய ஆரம்பிச்சுட்டார். அவர் முடிக்கிற வரைக்கும் தினைமாவு திங்கற மாதிரி அபிநயம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்க வேண்டிப் போச்சு. ஆளாளுக்கு ரெண்டு மண்டை வெல்லமும், அரைப்படி கல் உப்பும் அதிகமாகக் கிடைச்சதுதான்.

மாடத்தி சொல்ல, அழறதா சிரிக்கறதா தெரியலே என்றாள் குறிஞ்சி.

”ஆற்றுப்படுகையிலே பொங்கல்னு அரிசியை வச்சுப் பொங்கி அருமையா சமைக்கறாங்க. உப்பு புளி மிளகு கலந்து காய்ச்சி குழம்பு செய்யறாங்க. நமக்கு அது சேர்த்தி இல்லையாம்.”.
மாடத்தி சலிப்போடு சொன்னாள்.

”பயணம் வந்தவங்க பார்த்து மகிழ ஆடறதும் பாடறதும் உனக்கு பிடிச்சிருக்கா”? குறிஞ்சி மாடத்தி கையைப் பற்றியபடி கேட்டாள்.

”என்ன பண்ணச் சொல்றே குறிஞ்சி? நமக்காக இருக்கறது மலையருவித் தண்ணீர், பழங்கள், மலை எலி, சமைக்காமல் நெருப்பில் வாட்டிய முயல் இறைச்சி, வருஷம் ஒரு முறை ஆற்றுப்படுகை ஊருக்குப் போய் கலிங்கமும் முண்டும் வாங்கி வந்து தினசரி மலையருவியிலே துவைத்து உடுத்திய மேனிக்குக் காயவைத்து இன்னொரு நாள் போக ஓடி ஆடி தினைப்புனம் காத்து, காக்கை, காடை, கிளி, புறா மேலே கவண் விட்டெறிந்து ஓட்டறது. பரண்லே இருந்து இறங்கி மூத்திரம் போக ஒதுங்கிக்கற முன்னாடி கண்ணு ஏதும் தட்டுப்படறதான்னு கவனிக்கறது.

நாவல் தினை – அத்தியாயம் இரண்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன