போகம் தவிர் – சிறுகதை : நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

போகம் தவிர்               

 

பசித்தது.

 

காலையில் சாரங்கன் எழுந்திருக்கும்போது சிறு பொறி போல ஆரம்பித்து, வயிற்றில் அக்னியாக வளர்ந்து உடம்பையே வளைத்து எரிக்க முற்படும் பசி.

 

தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா, பலா, வாழை, திராட்சை என்று பழங்கள்..

 

எப்போதும் மனதில் வரும் காட்சி. எழுந்ததுமே நினைப்பில் ஏறிவிட்டது அது.

 

சாரங்கனுக்கு சந்தோஷமாக இருந்தது. நேற்று ஜிம்-மில் ஒரு மணி நேர உடற்பயிற்சியும், குடியிருப்பு நீச்சல் குளத்தில் ராத்திரி கவியும் போது நீந்தியதும், ஈர உடல் கடல் காற்றில் காய்ந்து வர, ரேணுகாவோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டதும், சாரங்கன் வயிற்றில் நல்ல பசியாகி இருக்கிறது இந்தக் காலையில்.

 

ரேணுகா இன்னும் தூங்குகிறாள். அவளை எழுப்ப வேண்டாம். வீட்டில் இருப்பதைச் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி விட்டால் சுகாதாரமும் சுவையுமாக கேண்டீன் சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும்.  இன்று வெள்ளிக்கிழமை. ரவா பொங்கல், அவியல், சின்னச் சின்ன அடைகள், கத்திரிக்காய் கடலைக் கூட்டு. சகலத்துக்கும் உற்ற துணையாக இஞ்சிம்புளி. சாரங்கனுக்கு நாக்கு ஊறியது.

 

படுக்கை அறையில் இருந்து வரவேற்பு அறையில் நுழையும்போது தொலைக்காட்சி தானாகவே ஒளி உயிர் பெற்றது. ‘பிரவுன் அண்ட் பில்சன்ஸ் வெண்ணெய் பிஸ்கட்கள்.. எடுத்தால் கை மணக்கும். ஒரு கை அள்ளினால்….’. ஒரு மூதாட்டி அங்கே இங்கே பார்த்தபடி சூப்பர் மார்க்கெட் அலமாரியில் பாதி திறந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிஸ்கட்டை உருவி வாயில் வைக்கும் முன், பின்னால் இருந்து பார்க்கும் அழகான கடை சிப்பந்திப் பெண், தொண்டைக் குழியில் இறங்குவது தெரிய எச்சில் முழுங்குகிறாள்.  சாரங்கனுக்கு இப்போது பசி உச்சத்தில். வெண்ணெய் பிஸ்கட் சமையலறையில் இருக்கும் என்று நினைவு சொன்னது. ரேணுகா மாதாந்திர லிஸ்டில் தவறாமல் வாங்குவது.

 

சாரங்கனுக்கு இதே விளம்பரத்தை நேற்றும் பார்த்த நினைவு.  ராத்திரி கடலில் நீராடி வரும்போதும் தொலைக்காட்சியில் இது தான் வந்தது. பிஸ்கட். பெண். அவள் இடுப்புக்கு மேல் உடுத்தாமல் இருந்தாள். ரேணுகாவை நாடியது அதைப் பார்த்த பின் தான். அப்போது வெண்ணெய் பிஸ்கெட் நினைவில் இல்லை.

 

சமையலறை. காப்பிப் பொடியும், உறை பிரிக்காமல் புளியும், சிறிய துணிப் பையில் மிதுக்க வற்றலும் இருந்தது அலமாரியில். இரண்டு கட்டு சின்னதும் பெரிதுமாக உளுந்து அப்பளம். சுட்ட அப்பளத்தில் நாலு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மணக்க மணக்க இடது கையில் பிடித்தபடி, சோற்றில் நையப் பிசைய வற்றல் குழம்பு வேணும். அதைக் கலக்கும்போது கூடவே விழுதாக மசிய அரைத்த பருப்புத் தொகையல். மனதில் சடசடவென்று விரியும் நினைப்புகள் பசியை உக்கிரப்படுத்த, ரேணுகாவை எழுப்பலாம் என்று தோன்றியது.

 

ஒன்றுமே இல்லை. சாப்பிடும் பதத்தில் சமையல் அறையில் ஒன்றுமே இல்லை. தரையில் பார்வை போனது. நாலைந்து பாப் கார்ன் கதிர்ப் பொரி சிந்திக் கிடக்கிறது. டிவி பார்த்தபடி வாளியில் பொரி கொறித்து, காப்பி கலக்க சமையலறை வந்தபோது சிந்தியிருக்கலாம்.  தரையில் காத்திருக்கும் உணவு. சாப்பிட இல்லை. நமத்துப் போனது. ஆனாலும் பசியை இன்னும் தீவிரமாக்கியது.

 

அலுவலகத்தில் இருந்து தொலைபேசினார்கள்.  உடனே வரவேண்டுமாம்.  பசிக்கிறது. வேறே எதுவும் இல்லாவிட்டாலும், ஒரு கோப்பை காப்பி. படுக்கை அறையில் எட்டிப் பார்த்தான். ரேணுகா இழுத்துப் போர்த்திக் கொண்டு நல்ல நித்திரையில் இருக்கிறாள். உடம்பு சரியில்லையா என்ன? பக்கத்தில் போய் நெற்றியில் கை வைத்துத் தொட்டுப் பார்க்கும்போது திரும்ப ஃபோன் சத்தம். போக்குவரத்து அதிகம் என்பதாலும் அலுவலகக் கூட்டம் நேரத்தில் துவங்க வேண்டுமென்பதாலும் ஆபீஸ் கார் அனுப்புகிறார்களாம் கூட்டிப்போக. சாப்பாடு? கேட்க முடியாது. எப்படியாவது சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.

 

ஆபீஸ் காரா இது? வாடகை கார் போல இருந்தது. காரில் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களை ஆபீஸில் பார்த்த நினைவு இல்லை சாரங்கனுக்கு.

 

’போகலாம்’. கார்க் கதவை அறைந்து சார்த்திக் கொண்டே சாரங்கன் சொல்ல, டிரைவர் வண்டியைக் கிளப்பினான். சட்டென்று புதிதாக உறை பிரித்த ரொட்டித் துண்டுகளின் இதமான வாடை காருக்குள் சூழ்ந்தது. டிரைவர் ஒரு கையில் சாண்ட்விச்சை எடுத்துக் கடித்தபடி வண்டி ஓட்டிப் போக, சாரங்கன் எச்சில் முழுங்கிக் கொண்டான். ’நடுவிலே புதினா சட்னி வச்சு, மைக்ரோஅவன்லே க்ரில் பண்ணி, ரெண்டே ரெண்டு சாண்ட்விச்’. ரேணுகா கொண்டு வந்து, கூடவே ஒரு பெரிய கோப்பை நிறைய பில்டர் காப்பியும் வைத்து விட்டுப் போனது எப்போது? போன வாரம்? போன மாதம்? எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறது. பசி மட்டும், இன்னும் இன்னும் திடமாக உருக்கொண்டு உருண்டு மேலெழும்புகிறது.

 

சாரங்கனின் மொபைல் அதிர்ந்தது. ஆபீஸ் தான். வர வேண்டிய முக்கியமான அதிகாரி வந்து சேர இன்னும் இரண்டு மணி நேரமாகுமாம்.  மெல்ல வாங்க.

 

நான் கிளம்பியாச்சு என்றான் சாரங்கன் சிரத்தை இல்லாத குரலில். பதில் இல்லாமல் தொலைபேசி இணைப்பு  துண்டிக்கப் பட்டது.

 

’நேத்து ஆபீஸ் வரலையா?’

 

நீள மீசை வைத்து, தூசி மண்டிய கருப்பு கோட் அணிந்து கொண்டு பக்கத்தில் இருந்தவர் அவருக்கு அடுத்து இருந்த அரைக்கை சட்டைக்காரரிடம் கேட்டார்.

 

‘சகலை அப்பாருக்குக் கருமாதி. போகாம முடியலே.. சாப்பாடு வேறே பிரமாதம்.. செட்டிநாட்டு சமையல் .. குழிப் பணியாரம், வெள்ளையப்பம், சொதி.. ஆஹா’.

 

அவர் நேற்றைய சாப்பாட்டு நினைப்பில் அமிழ, சாரங்கன் அவரை அசூசையுடன் பார்த்தான்.

 

‘செத்தவருக்குப் படைக்க உப்பில்லாத தோசை.. சாப்பிட்டு பாத்துட்டு அந்த ஆத்துமா சே, இந்தச் சாப்பாட்டெளவே வேணாம்டான்னு திரும்பிப் போயிடுமாம்.. இவனுக சுட்டு வச்ச தோசை கூட தாமரைப் பூ மாதிரி மெத்து மெத்துனு.. இப்படி சுட்டு அடுக்கினா ஆத்துமா எப்படி வெலகிப் போகும்? சுத்தி சுத்தி தான் வரும்’.

 

அவன் கேட்டுக் கொண்டே இருக்க, கார் ஜன நடமாட்டம் கூடிய தெருவில் திரும்பியது. ஒன்றிரண்டு சைக்கிள்கள் தவிர வாகனம் ஏதும் கண்ணில் படவில்லை. எல்லோரும் நடந்துதான் போகிறார்கள். நிதானமாக நடக்கிறார்கள்.

 

’எங்கே இருக்கோம்?’ சாரங்கன் டிரைவரைக் கேட்க, ‘தங்கசாலை’ என்றார் கருப்பு கோட் போட்டவர். ‘என்னங்க?’ சாரங்கன் விளங்காமல் கேட்க, ‘ஜார்ஜ் டவுண் தங்கசாலை’ என்றார் அடுத்தவர் அழுத்தம் திருத்தமாக.

 

சாரங்கன் வெளியே பார்க்க,  தரையில் பந்திப் பாய் விரித்து ஏழெட்டு பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கட்டிடம் கண்ணில் பட்டது. ‘நிறுத்துப்பா’ அவன் அடக்க மாட்டாமல் கூவ,  மாமிசம் அடைத்த அடுத்த சாண்ட்விச்சை பிரித்துக் கொண்டிருந்தான் டிரைவர். வண்டி நிற்காவிட்டாலும் மெல்ல ஊர்ந்தது.

 

கதவைத் திறந்து இறங்க கால் கொஞ்சம் ஓடி நின்றது. சதா சாப்பிடும் ராட்சசன் போல்  டிரைவர் இறைச்சி சாண்ட்விச்சை மென்று  கொண்டிருந்தது கண்ணில் பட்டது. சாப்பிடும் இடம். இதோ இங்கேதான். சாப்பாட்டு வாசனை காற்றில் பரவி இருக்க, உண்டு முடித்து இலை எடுத்து மறைவாகப் போட்டு விட்டு கை அலம்பி வந்தவரிடம் சாரங்கன் விசாரித்தான் – ’இங்கே சாப்பிட ஏதாவது கிடைக்குமா’.

 

‘ஏன் கிடைக்காமல்? தங்கசாலை காசிப்பாட்டி ஓட்டலாச்சே இது’.

 

அவர் ஓரத்தில் சார்த்தி வைத்த பர்மாக் குடையை எடுத்துக் கொண்டு புன்னகையோடு வெளியே நடக்க, பாயில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கடுக்கன்காரர் சொன்னார் –

 

‘அவர் திருவாடுதுறை மடத்து வித்துவான். உள்ளூர்க்காரர் இல்லே. என்னைக் கேளுங்கோ.. ஓட்டல்லே இனி சாயந்திரம் தான் பலகாரம் கிட்டும்.  இப்ப சிரத்தைக்கு வேணும்னா, விக்டோரியா ஹால் பக்கம் உடுப்பிக்காரர் பச்சரிசிச் சாப்பாடு போடறாரே அங்கே கிடைக்கலாம்’.

 

சாரங்கன் திரும்ப ஓடி வந்து காரில் ஏறினான்.

 

‘உடுப்பிக்காரன் சாப்பாடு நல்லாத் தான் இருக்கு. பொலபொலன்னு சீரகச் சம்பா. கொதிக்கக் கொதிக்க இலையிலே போட்டு, தாராளமா நெய்யையும் ஊத்தி.. ‘

 

கோட்டுக்காரர் சிலாகிக்க அவரை முறைத்தான். ‘சும்மா இருடா.. எனக்குப் பசிக்குது’ என்று உரக்க அலற வேண்டும் போல் இருந்தது.

 

’அவ்வளவு சூடா சாப்பிட்டா, குடலுக்கு ஆபத்துன்னு வைத்திய சாஸ்திரம் சொல்றதாம்.. இதோ’ அடுத்தவர் எடுத்து நீட்டிய பத்திரிக்கையின்  பின் அட்டையில் ‘அறுபது இனிய கானங்கள் நிறைந்த தமிழ் டாக்கி’ என்று இருந்ததின் அர்த்தம் சாரங்கனுக்குப் புரியவில்லை. சாப்பிட்டால் புரியலாம்.

 

டிரைவர் இருக்கையில் இருந்து ஏதோ வழுக்கிப் பின்னால் விழுந்தது. ஓரத்தில் கடித்த ரொட்டித் துண்டு. கையில் பிடித்து ஓட்டும் போது பிடி வழுக்கியிருக்கலாம்.

 

சாரங்கன்  அதையே உற்றுப் பார்த்தான்.  பின்சீட் தரை அவ்வளவு ஒன்றும் தூசி மண்டி இல்லை. ஓரமாக இன்னும் கொஞ்சம் பிய்த்து விட்டால் புது ரொட்டி தான்.

 

சாரங்கனோடு கூட இருந்தவர்கள் கண் மூடி உட்கார்ந்திருந்தார்கள். டிரைவர் தெருவே கண்ணாக, வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

மெல்லக் குனிந்து அந்த ரொட்டித் துண்டைக் கையில் எடுத்தான் சாரங்கன். உடல் இந்தக் கணத்தில் வேறேதும் வேண்டாம் என்று போகத்துக்கு ஏங்குவது போல் துடிப்போடு காத்திருக்க, ரொட்டித் துண்டை வாய்க்கு அருகில் கொண்டு போகும் போது, கோட்டுக்காரர் இருமியபடி எழுந்தார். அவன் கையில் இருந்த ரொட்டித் துண்டைப் பறித்தார் அவர்.

 

‘நான் போட்டுடறேன்’ என்றபடி கார் ஜன்னல் வழியாக வெளியே வீச சாரங்கன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். பட்டினி நகரம் வெளியே விரிந்து கொண்டிருந்தது. ஏன் ஆபீஸ் இன்னும் வரவில்லை?

 

கண்ணை மூடிக் கொண்டு ஓய்வெடுக்கப் பார்த்தான்.

 

தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா, பலா, வாழை, திராட்சை என்று பழங்கள்..

 

இல்லை, இப்போ வேணாம்.. பசி இல்லாத நேரத்தில், சாவதானமாக..

 

கார் புதிய குடியிருப்புகள் பக்கம் போய்க் கொண்டிருந்தது. இதைத் தவிர தெருவில் தென்பட்ட வேறு கார்கள் எல்லாம் மிகச் சிறியவை. சத்தம் எழுப்பாமல், பூங்காவில் குழந்தைகள் ஓட்டும் விளையாட்டு வண்டிகள் போல ஓடின அவை.

 

‘உணவகம்’ என்று சுருக்கமான பெயர் எழுதிய கட்டிடத்தைக் கடக்கும்போது ‘தயவு செய்து வண்டியை ஒரு நிமிஷம் நிறுத்துங்களேன்’ என்று கெஞ்சினான் சாரங்கன். அந்த டிரைவர் வலிமை மிக்கவன். சாண்ட்விச்கள் அளித்த வலு அது. சாரங்கனைப் போல் பசியோடு இருப்பவனை அடித்து வீழ்த்த முடியும் அவனால்.

 

சாரங்கன் நுழையும்போதே, ‘ஏதாவது கிடைக்குமில்லியா?’ என்று உரக்க விசாரித்தான். முகப்பில், நீள் வட்ட மேஜையின் பின் இருந்த இளம்பெண் அழகாகப் புன்சிரித்தபடி, ‘இங்கே எல்லாமே எப்பவுமே கிடைக்கும்’ என்றாள்.

 

உள்ளே போகும்போது பக்கத்து நுழைவு வாசலில் ஆணும் பெண்ணுமாக நின்ற நீண்ட வரிசையைக் கடந்து போக வேண்டி வந்தது. ‘அறிமுகச் சலுகை – அறுபது சதவிகிதக் கட்டணமே ஓர் ஆண்டுக்கு’ என்று எழுதி வைத்த பலகை கவனத்தை ஈர்த்தது. செல்போனுக்கா இத்தனை பேர் நிற்கிறார்கள்? தெரியவில்லை.

 

குனிந்து வணங்கிய பரிமாறும் பெண்ணிடம் ‘நாலு இட்லி, வடை’ என்றபோது கொஞ்சம் அதிர்ந்து அவள் மேஜையைச் சுட்டிக் காட்டினாள். சாரங்கனுக்கு முன் ஒரு கிண்ணம் நிறைய மெல்லிய சிவப்பு நிறத்தில் என்ன அது?

 

‘மன்னிக்கணும். காலையிலே ரெட் ஒயின் எல்லாம் சாப்பிட்டுப் பழக்கம் இல்லே. ஆபீஸ் வேறே போகணும். சீக்கிரமா ப்ரேக்பாஸ்ட் எடுத்து வந்தா நல்லது’.

 

’காலைச் சாப்பாடா? 48 மணி நேரம் பசிக்காமல் இருக்க அமுதம் போதுமே’

 

அவள் கண்ணால் குவளையைக் காட்டிப் பூவாகச் சிரித்தாள்.

 

‘அமுதமா?’

 

’உணவகத்தில் வேறே என்ன கிடைக்கும்னு வந்தீங்க?’

 

மொபைல் அடித்தது. ரேணுகா.

 

‘ரேணுகா, வேடிக்கையைக் கேளு. நல்ல பசியோட வந்து ஓட்டல்லே இட்லி கேட்டா இவங்க என்ன தர்றாங்க தெரியுமா?’

 

‘இட்லியா, அப்படீன்னா?’

 

ரேணுகா ஆவலாக விசாரிக்க சாரங்கன் குழம்பினான். என்ன ஆச்சு இவளுக்கு?

 

‘நேத்து ஞாயித்துக்கிழமை ப்ரேக்பாஸ்டுக்கு செஞ்சு, மிஞ்சிப் போனதை உதிர்த்து ராத்திரி இஞ்சி மொளகா போட்டு இட்லி உப்புமா பண்ணித் தின்னோமே.. இட்லி’.

 

ரேணுகா உரக்க சிரிக்கும் சத்தம்.

 

‘என்ன ஆச்சு உங்களுக்கு .. எல்லோரும் மூணு வேளை குடிக்கறது அமுதம் தானே. வேறே என்னென்னமோ பெயர் எல்லாம் சொல்றீங்களே இட்டுக் கட்டி’.

 

அவள் ஃபோனை வைத்து விட்டாள்.

 

வேண்டாம். ஆபீஸ் போகிற நேரத்தில் கோபம் கூடாது.  கோரிக்கை விடுக்கும் குரலில் பணிப்பெண்ணைக் கேட்டான் –

 

‘சீக்கிரம் இட்லி கொண்டாங்க.. நேரமாகுது’.

 

‘ என்ன ஆச்சு உங்களுக்கு .. எல்லோரும் மூணு வேளை குடிக்கறது அமுதம் தானே. வேறே என்னென்னமோ பெயர் எல்லாம் சொல்றீங்களே இட்டுக் கட்டி’.

 

ஓட்டல் பணிப்பெண் ரேணுகா குரலில் திரும்பச் சொன்னாள்.

 

அடுத்த வினாடி சாரங்கன் உக்கிரமானான். எல்லா ஆத்திரமும் குவிய மொபைலை ஓங்கி மேஜையில் அடித்துக் கத்தினான்.

 

’என் கிட்டே இந்த வெளையாட்டு எல்லாம் வேணாம்.. சாப்பிட ஆர்டர் கொடுத்ததை கொண்டு வந்து வைங்க. அது போதும். ‘

 

‘அமுதம் குடியுங்க. அமைதியாக இருங்க’ அந்தப் பெண் சொன்னாள். அதை ஏற்று வாங்கி, வாசலில் மேஜை போட்டு உட்கார்ந்திருந்தவள் திரும்பச் சொன்னாள். நீளமான க்யூவில் நின்ற எல்லோரும் சேர்ந்து சொன்னார்கள். திரும்ப மொபைல் அடித்தது.

 

‘அமுதம் குடியுங்க. அமைதியா இருங்க’

 

ரேணுகாவும் சொன்னாள்.

 

சாரங்கன் எழுந்து வெளியே ஓடினான்.  ஆபீஸ் போய்விட்டால் போதும். அங்கே ரொட்டித் துண்டை வாட்டி, ரெண்டு முட்டைகளை அடித்துப் போட்டு ஆம்லட் சுட்டுக் கொடுக்க நேரம் காலம் பார்க்க மாட்டார்கள். மீட்டிங் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

பசியோடு இருந்த வயிறு இரைந்தது. சும்மா கிட சனியனே.

 

சாரங்கன் தெருவைக் கடக்கும்போது பெரிய சத்தத்தோடு எதிரே வந்த பிரம்மாண்டமான டிரக் மோத அவன் தூக்கி எறியப்பட்டான்.

 

‘மன்னிக்கணும். அதிர்வு அதிகமா கொடுத்திருக்கு போல’.

 

சாரங்கனின் அதிர்ந்த முகம் உறைந்து போயிருந்த காட்சிப் பெட்டியை அமர்த்தி விட்டு டாக்டர் சிற்பி கைகாட்டினார். உறைபனிப் பேழையின் மேல் அடுக்கில் இருந்து அடுத்த அடுக்கில் விழுந்திருந்த சாம்பல் நிறத் தொகுதியை ஜாக்கிரதையாக அவருடைய உதவியாளரான இளைஞர் எடுத்து மேலே வைத்தார்.

 

‘இது சாரங்கன். இந்த இருபத்தாறாம் நூற்றாண்டுக்கு நானூறு வருடம் முன்பாக,  சரியாகச் சொன்னால், 1953 முதல் 2015 வரை இதே சென்னையில் வாழ்ந்திருந்த சராசரி மனிதனான சாரங்கனின் மூளை, நரம்பு மண்டலம் சார்ந்த அமைப்பு இது. பசி என்பதே அறியாத, அமுதம் பருகிச்  சக்தி பெற்று உலவும் நமக்கு முன்னோரில் ஒருவன். உணவு பற்றி நினைப்பது, உணவுக்காக உழைப்பது, உணவுக்காகக் கூடி இருப்பது, உணவை விதவிதமாக ஆக்கவும், அது பற்றிப் பேசி ரசிக்கவும் நேரத்தைச் செலவழிப்பது, உணவு வாசனையை உன்னதமானதாக அனுபவிப்பது, உண்பதை காமம் போல், அதையும் விட இன்பமும் நிறைவும் தரும் செயலாகக் கருதுவது.. இந்த இயக்கங்களின் தொகுப்பு சாரங்கன். அவனுடைய மூளை இன்னும் உயிரோடு உள்ளதால், அதற்கு இப்படியான உணர்வுகளைத் தூண்டும் மின்சார அதிர்வுகளை அனுப்பிய போது சாரங்கன் கட்டி எழுப்பிய காட்சிகளை காட்சிப் பெட்டியில் நாம் பார்த்தோம்’.

 

‘எல்லாம் நல்லா இருந்துச்சு டாக்டர், ஆனா எதுக்கு?’

 

அமைச்சர் எழுந்தபடி கேட்டார். கூட வந்த உறுப்பினர்களும் அவசரமாக எழுந்து வாசல் பக்கம் போய் நின்றார்கள்.

 

‘சார், அமுதம் உற்பத்தி செய்ய.. ஒப்பந்தக்காரர்கள் வகையில் கையூட்டு புகார்கள்.. மத்திய கணக்குத் தணிக்கையகம்..’

 

டாக்டர் சிற்பி தயங்க, அமைச்சர் அவசரமாகக் கைகாட்டி அவரை நிறுத்தினார்.

 

‘அமுதம் திட்டத்தை மேம்படுத்தி பேரமுது ஆக்க எடுக்கும் நடவடிக்கைன்னு சொல்லுங்க டாக்டர்’.

 

‘ஆமா, அமுதம் திட்டத்தில் சாரங்கன் போல மனிதனுக்கு எழக் கூடிய இயற்கையான உணர்ச்சிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் மனித உரிமை அது இதுன்னு ஒரு சின்ன குழு தொந்தரவு கொடுக்கறாங்க.. மாத்திரை முழுங்கி மருந்து குடிக்க மட்டுமா மனுசன்னு கேக்கறாங்க.. அவங்களையும் கணக்கு தணிக்கையையும் சமாளிக்க, திரவ உருவத்தில் அமுதம் இனி தேவைப்படாது. உற்பத்தி செய்ய, வினியோகிக்க உள்ள சிரமங்களும் இல்லாது போயிடும் இந்த புது பேரமுது திட்டத்தில். அடக்க விலையும் ஆகக் குறைவு’.

 

குளிர்ப் பேழையில் இருந்து அவசர ஒலி கவனிக்கச் சொல்லி ஓலமிட்டது.

 

டாக்டர் சிற்பி தன் உதவியாளரை மேலே பேசும்படி கை காட்டி, சாரங்கனின் மூளைத் தொகுதியில் பதித்திருந்த மின் தகடுகளை லாகவமாக நீக்கத் தொடங்கினார்.

 

‘மனித உடலில் சிலிக்கன் சில்லைப் பதிச்சு, சாப்பிடுவது என்கிறதை உணர்வு பூர்வமாக அந்தச் சில்லில் மின் அதிர்வு கொடுக்கறது மூலம் செய்யப் போறோம். இன்னிக்கு 1905-ம் ஆண்டு சென்னை சூழலை சாரங்கன் அனுபவிக்க வச்சோம். அவனோட மூளைத் தொகுதிக்கு இன்னும் பல தடவை இதே மாநகரத்தின் வெவ்வேறு காலகட்ட சூழ்நிலைகளில் உயிர் கொடுத்து சாப்பாடு பற்றிய விதவிதமான உணர்ச்சிகளுக்குப் பழக்கப்படுத்துவோம். சோதனை முடிச்சு, அந்த அடிப்படை அமைப்பை நம் எல்லோர் உடம்பிலும் இதோ இந்த சில்லு மூலமா கடத்தி விட்டுடுவோம். உடலுக்கு வேண்டிய எல்லா சத்தும் அதோடு வரும்’.

 

’கால் செண்டிமீட்டர் நீளம் கூட இருக்காது போலே இருக்கே’

 

அமைச்சர் சில்லு பெட்டகத்தை கிலுகிலுப்பை போல அசைத்துப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்தார். சுவரில் மாட்டியிருந்த உணவு வகைகளின் படங்களில் அவர் பார்வை நிலைத்தது. தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா, பலா, வாழை, திராட்சை..

 

‘இது எதுக்கு இங்கே?’

 

‘சாரங்கனுக்கு இதெல்லாம் மறக்கக் கூடாதே.. அதான் எப்பவும் அவன் பார்வையில் படற மாதிரி’.

 

’அவன் இல்லை, அவர். நமக்கு ஐநூறு வருடம் முன்னோர். மூத்தோர் போற்றுதும்’.

 

அமைச்சர் திருத்தியபடி வெளியே நடந்தார்

(தினமலர் 2014).

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன