அந்தி சூழ சர்ப்பக்காவில் ஏற்றிய விளக்கு

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 6

 

இரவு மனையில் பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்தது.

 

சர்ப்பக்காவில் விளக்கு வைத்துவிட்டுப் பகவதி திரும்பிக் கொண்டிருந்தாள்.

 

‘யாரது, வாசலில் இருட்டில் நின்றுகொண்டு?’

 

இருமல் பதிலாக வந்தது. அப்புறம் தீனமான குரல்…

 

‘திருமேனியைப் பார்க்கணும்’.

 

சோகைச் சிவப்பில் ஓர் இளம்பெண்.  தீப வெளிச்சத்தில் வெளிறித் தெரிந்த அவளுக்குப் பகவதி வயது காணும். தாடை எலும்பின் மேல் விடாப்பிடியாகப் பற்றியிருந்த தசை. குழி விழுந்த கண்களில், ஏதோ பழைய பொற்காலத்தின் மிச்சமாகக் கொஞ்சம் வெளிச்சம்.

 

அவள் கூட நிற்கிற பெண் குழந்தை ஒரு பழைய முண்டின் கிழிசலை உடுத்தி அவளோடு ஒண்டியபடி அந்தப் பெரிய மனையைப் பயத்தோடும், பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருந்தது.

 

‘திருமேனி மனையில் இருக்கிறாரா தம்புராட்டி?’

 

அவள் திரும்ப வினயத்துடன் கேட்டாள்.

 

‘காழ்ச்சை வைக்க வந்திருக்கிறாயா?’

 

வலிய நம்பூதிரிக்குக் காணிக்கை வைக்கப் பகல் நேரங்களில் யாராவது வருவதுண்டு. திருச்சிவப்பேரூரிலிருந்தும், மண்ணார்க்காட்டில் இருந்தும், பாரதப் புழையின் கரையோர கிராமங்களில் இருந்தும் வருகிறவர்கள். இந்த மனையின் நம்பூதிரிகளை ஈசுவர சொரூபமாக மதிக்கிறவர்கள்.

 

வீட்டுக் குளத்தில் குளித்து ஈரன் முண்டு உடுத்து, பாக்கும் வெற்றிலையும், தேங்காயும், பணமுமாக இலையில் வைத்து வலிய நம்பூதிரியின் நல்ல வார்த்தையை எதிர்பார்த்து நிற்கிற அவர்கள் மனசு திறந்து எல்லா சஞ்சலத்தையும் கொட்டுவார்கள். வலிய தம்புரான் கேட்பது வராக மூர்த்தி கேட்கிறது போல.

 

ஆனாலும், காழ்ச்ச வைக்கப் பெண்கள் தனியாக வருவதில்லை. அதுவும் அந்தி சாயும் நேரத்தில்.

 

அந்தப் பெண்ணின் கண்கள் நிறைந்தன.

 

‘நான்..நான் …. அவரைப் பார்க்க வேண்டும்.. மூத்தவருக்கு அடுத்தவரை..’

 

அடிவயிற்றில் எழும்பி வந்த இருமலோடு போராடித் தொடரும் குரல்.

 

‘என்ன விஷயமோ?’

 

பகவதி அனுதாபத்தோடு பின்னும் விசாரித்தாள்.

 

நாணிக்குட்டி தோட்டத்தில் மேற்கு மூலையில் சாரைப் பாம்பு போல நடந்து போவது அவள் பார்வையில் பட்டது.

 

வந்துவிட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை போல.

 

‘எய்.. நான் விளக்கு வைத்தாகி விட்டது’.

 

சத்தம் கூட்ட நினைத்து அடக்கிக் கொண்டாள். பெண்கள் குரல் உயர்வது நல்லதில்லை.

 

சர்ப்பக்காவுப் பக்கம் வேறே ஏதோ காலடிச் சத்தம் கேட்டது. பிரமையோ?

 

போய்ப் பார்த்தால் தெரிந்து விடும். அதற்குள் இந்தப் பெண்ணின் வர்த்தமானத்தைக் கேட்டு வார்த்தை சொல்லி அனுப்பி விட்டு.. இவள் யார், வந்த காரியம் என்ன என்று முதலில் மனசிலாக்கிக் கொள்ள வேணும்.

 

‘இது .. இது..’

 

அந்தப் பெண் வார்த்தை வராமல் தடுமாறியபடியே, கூட நின்ற பெண் குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

 

‘இவள்.. திருமேனிக்கு.. இவள் .. அவருக்குப் பிறந்தவள்..’

 

பகவதி அந்தப் பெண்ணை ஆச்சரியத்தோடு உற்றுப் பார்த்தாள்.

 

யார்? நீலகண்டன் நம்பூதிரி சம்பந்தம் வைத்திருந்த மலமக்காவு கார்த்தியாயினியா முன்னால் நிற்பது?

 

‘நைஷ்டிக பிரம்மச்சாரியையும் நிமிர்ந்து பார்த்துக் கண் கிறங்க வைக்கிற வனப்புள்ள தேவதை’ என்று பாரதப் புழையின் இக்கரையிலும் அக்கரையிலும் பரப்ரப்பாக, லயிப்போடு பேசப்பட்ட கார்த்தியா இது?

 

செல்லரித்த கவிதையின் ஏட்டுப் பிரதி போல் முன்னால் கட்டி நிறுத்திய இந்த எலும்பு உருவம் தான் கார்த்தி என்றால், பாரதப் புழையும் திசை மாறி வடக்கே பாய்ந்து இலக்கின்றிப் போகட்டும்..

 

‘பசிக்குதம்மா’

 

குழந்தை அம்மாவின் இடுப்புத் துணியைப் பறி இழுத்தது.

 

‘போய்ச் சாப்பிடலாம் மோளே..’

 

அவள் பகவதியின் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள்.

 

‘அப்பா வீட்டில் பெரிய இலை விரித்து, நிறைய நெய் ஊற்றி, பப்படமும், பிரதமனும், சோறும், காயுமாகச் சாப்பிடலாம் என்றாயே அம்மா?’

 

செப்பு வாயைக் குவித்துக் கேட்கிற மழலை.

 

‘ரொம்பப் பசிக்குதம்மா.. காலையில் கோயிலில் கொடுத்த நேந்திரம்பழத்தை நீ சொன்னபடி கொஞ்சம் கொஞ்சமாகப் பகல் வரை சாப்பிட்டு, அப்புறம் தோலையும் தின்று விட்டேன்..’

 

பகவதிக்கு வயிற்றைப் பிசைந்தது. இந்தப் பச்சை மண் வெறும் வயிற்றோடு வாடிப் போய் நடந்திருக்கிறது. எப்போது புறப்பட்டோ…எத்தனை கல் தூரத்தில் இருந்தோ… கட்டி வைத்த கிழட்டு யானைக்குக் கூட இருநூறும் முன்னூறுமாகச் செவ்வாழைப் பழங்களை அள்ளித் தருகிற இந்த மனையின் ஒரே வாரிசு, யாரோ எங்கேயோ கொடுத்த ஒற்றைப் பழத்தைக் கிள்ளித் தின்றபடி, குடல் கருக நடந்து.. கடவுளே.. கடவுளே.. உனக்குக் கண் அவிந்து போனதா.. பாரதப் புழை வெள்ளத்தில் உன்னையும் அடித்துப் போக..

 

‘உள்ளே வா கார்த்தி..’

 

பகவதி விடுவிடுவென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தாள். பின்னால் தயங்கி நின்றவளைப் பார்த்துச் சொன்னாள் –

 

‘உன்னைத் தான் கார்த்தியாயினி.. இந்த வாசல், மனையில் எங்கள் பகுதிக்குப் போகிறது.. நீ என் வீட்டுக்கு வருவதை யாரும் ஏனென்று கேட்க முடியாது..புரிகிறதா?’

 

சுவ்ரைப் பிடித்துத் தடுமாறி மெல்லக் கார்த்தியாயின் உள்ளே வருவதற்குள் வட்டிலில் குழந்தைக்குச் சோறு பரிமாறி இருந்தாள் பகவதி.

 

தரையெல்லாம் சிதறி இரைத்துக் கொண்டு அவசர அவசரமாகச் சாப்பிடும் குழந்தை.

 

‘மெல்ல.. மெல்ல.. என் கண்ணே.. உன் பெயர் தான் என்ன?’

 

‘நந்தினி..அச்சன் நந்துக்குட்டி என்று விளிக்கும்…என் அச்சன் எங்கே ஓப்போளே?’

 

‘நான் அக்கா இல்லையடி என் செல்லமே.. உன் சித்தியாக்கும்.. இரு உன் அச்சனைக் கூப்பிடுகிறேன்..நீ சாப்பிட்டு முடித்தால் தான் அது.. உன் அம்மாவும் சாப்பிடணும்.. இரு.. பரம்பில் ஒரு வாழையிலை அரிந்து வரேன்.’

 

கார்த்தியாயினி சுவரில் தலை சாய்த்து இருமத் தொடங்க, பகவதி தோட்டத்துக்கு ஓடினாள். சோறு தான் இப்போது இவளுக்கு மருந்து.

 

சர்ப்பக்காவில் சலசலப்பு கேட்டது.

 

யட்சியா? பாம்பா?

 

பகவதி காற்றில் அலையும் விளக்கொளியில் கண்ணை இடுக்கிப் பார்த்தாள்.

 

யட்சி போல நாணிக்குட்டி. மேலே பற்றிப் படர்ந்த பாம்பாக நீலகண்டன் நம்பூதிரி.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன