குறுநாவல் – பகல் பத்து ராப்பத்து- ஒரு பிள்ளை.. செயல் ஓய்ந்து போன வயதில் வைத்துக் காப்பாற்ற ..நாலு எழுத்து படித்து.. நல்லதாக உத்தியோகம் பார்த்து.. செருப்பு போட்டுக் கொண்டு.

குறுநாவல்  பகல் பத்து ராப்பத்து  அத்தியாயம் 5

’மணி என்ன நசீம்பாய்?’

 

சாந்தாபாய் பின்கழுத்து வியர்வையைத் துடைத்தபடி கேட்டாள். யாருக்கோ பாட்டில் கழுவுகிற பிரஷ் எடுத்துக் கொடுத்தபடி மூன்று விரலைக் காட்டினான் அவன்.

 

மூன்று மணி.

 

ஏதாவது சாப்பிட்டால்தான் கொஞ்சம் போலாவது தெம்பு வரும்.

 

பணம் வைக்கிற தகர டப்பாவைப் பார்த்தாள். பரவாயில்லை…அறுபத்தைந்து ரூபாய்க்கு வியாபாரமாகி இருக்கிறது.

 

கிளம்புகிறதுக்குள் ஒரு இருநூறு தேறினால், ஜம்னாதீதி முகத்தில் விட்டெறியலாம்.

 

சாப்பிடறே.. புடவையை வழிச்ச்சுட்டுக் குத்த வைக்கறே..

 

சாப்பிடாத வயிறு இரைகிறது. கத்திக் கத்தித் தொண்டை வரண்டு, கொண்டு வந்த தண்ணீர் எல்லாம் குடித்து முட்டிக் கொண்டு வருகிறது.

 

‘எந்த நிமிஷத்தில் என்னப் பெத்தியோ ..என் அம்மா.. வெய்யிலிலும் மழையிலும் தெருவில் கிடந்து லோல்படுகிற ஜன்மமாகிப் போனேனே… கண்டவளும் வாய்க்கு வந்தபடி பேசும்படியா…தலைக்கு மேலே கூரை கூட சொந்தம் இல்லே..காசு தராட்ட அதுவும் கிடையாது.. வெளியே விரட்டினா, கால் இல்லாத புருஷனோடு எங்கே போய் ஒதுங்க?’

 

குடிசை தங்க வேண்டும். கால் இல்லாவிட்டால் பரவாயில்லை. கங்காதரை ஆயுசு வரை வைத்துக் காப்பாற்ற எந்த ஏச்சு கேட்டாலும் பரவாயில்லை.

 

‘வெளியே எறிவேன்.. உன் தட்டுமுட்டு சாமானை.. உதவாக்கரை புருஷனை..’

 

கங்காதரா உதவாக்கரை? ஜம்னாதீதியின் நாக்கு அழுகிப்போக. கங்காதரின் அருமை சாந்தாபாய்க்குத் தான் தெரியும்.

 

‘மாதா சந்தோஷி.. கருணை காட்டு…ரொம்ப அதிகமாக் கேட்கலை.. வீட்டு வாடகை.. அப்புறம் அரை வயிறு சாப்பிட.. வேறே எதுவும் வேணாம்…’

 

என்ன கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரிதான்..

 

பொதுக் கழிப்பறை ரொம்ப தூரம். வேறு வழியே இல்லை. போயே ஆக வேண்டும்.

 

இந்த தாட்டியான சிந்திக்காரியோ மதராஸியோ கோலக்குழல் வாங்குவாளா?..இல்லை.. இவள் ரயிலைப் பிடிக்க ஓடுகிறவள்..

 

‘நசீம்பாய்..கொஞ்சம் பாத்துக்க.. பத்து நிமிஷத்திலே வரேன்..’

 

‘கல்லா பணத்தை எடுத்துட்டுப் போ.. கடையை மட்டும் பாத்துக்கறேன்..ரூபாய்க்கு நாலுன்னு தரட்டா?’

 

நசீம் கண்ணைச் சுருக்கிக்கொண்டு சிரிக்கிறான். முகத்தின் அம்மை வடுக்களை மீறி, அந்த சிரிப்பு வசீகரமாக இருக்கிறது.

 

‘ஏன் …எல்லாத்தையும் சாக்கோட தந்து கையிலேயும் பத்து ரூபா வச்சுக் கொடுக்க வேண்டியதுதானே.. ‘

 

பணத்தை மடியில் முடிந்தபடி சொன்னாள்.

 

‘சாந்தாபாய்..இருபத்தஞ்சு பைசா சில்லறையா வச்சுக்க.. முழு ரூபா கொடுத்தா மீதி கிடைக்காது..’

 

சாந்தாபாய் போகிற காரியம் உலகத்துக்கே தெரியும் இப்போது.

 

நசீம் சமையத்தில் இப்படித்தான். சின்னப் பிள்ளை போல. மனசு நல்ல மாதிரி. களங்கம் தெரியாத கண். சாந்தாபாய் குனிந்தாலும் நிமிர்நதாலும் மற்றவர்களின் பார்வை போகிற போக்கு அவன் பார்ப்பதில் இல்லை..

 

‘வாயை மூடிட்டு வியாபாரத்தைப் பாரு நசீம்..’

 

‘வாயை மூடிட்டு வியாபாரமா? அதுக்கு ராத்திரி ஒன்பது மணிக்கப்புறம் இங்கே பவுடர் அப்பிக்கிட்டு ஒரு கூட்டமே நிக்கும்.. உனக்கு ஒண்ணும் தெரியாது பாவம்..போற ஜோலியை முடிச்சுட்டு சீக்கிரம் வா..’

 

சாந்தாபாய் தலையில் அடித்துக் கொண்டு நடந்தாள்.

 

வெய்யில் மசமசவென்று முதுகில் ஊர்கிறது. விக்டோரியா டெர்மினஸின் சாயங்காலப் பரபரப்புக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.

 

வரிசையாக வந்த மூன்று லாரிகள் போக வழிவிட்டு ஒதுங்கி நின்றாள்.

 

லாரி நிறைய ஜனம். ஆஸாத் மைதானம் பக்கம் மெல்லக் குவிகிற கூட்டம்…

 

என்ன தலை போகிற விஷயமோ…

 

பத்திரிகை ஆபீஸ் வாசலில், உள்ளே இருந்து வருகிற எல்லோரையும் கைப்பையைத் திறந்து காட்டச் சொல்லிப் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தவன் சாந்தாபாயைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரிக்கிறான்.

 

சாங்க்லியானால் என்ன.. பம்பாய் ஆனால் என்ன.. எங்கேயும் மனுஷர்கள் தான்.. பரிச்சயமானால் சிநேகமாகிறார்கள்.

 

பஸ் ஸ்டாப்பில், மஹாலட்சுமி கோயில் போவதற்காகப் பழுத்த மராத்திய சுமங்கலிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

எப்போது தான் மஹாலட்சுமி கோவில் போனது? சாந்தாபாய் நினைத்துப் பார்த்தாள்.

 

சினிமா போல, அதுவும் கல்யாணமான முதல் வருஷம் தான்.

 

பிரபாதேவியில் கூட்டத்தில் நெருக்கியடித்து சித்தி வினாயகர் கோயிலுக்கும் அப்புறம் மஹாலட்சுமிக்கும்…

 

ஐந்து நிமிடத்தில் கும்பிடுகிறேன் என்று பெயர் பண்ணி, கோயிலுக்குப் பின்பக்கம் அவசரமாக இழுத்துக் கொண்டு போய்…

 

சுடுகிற பாறையும், கலங்கி முடைநாறும் கடல் நீரும், இரையும் கடலுமாக இதுபோல ஒரு பகல் நேரத்தில் பாறை மறைவில் சரித்து…

 

தாராவியில், சகதி நாறும் குச்சில் எத்தனையோ தடவை அப்புறம் முழுசாக அரங்கேறிய லாவணிதான் அது…

 

இரண்டு காலும் போனாலும், தவழ்ந்தபடி வந்து ஆழ்ந்து தூங்குகிறவளைத் தட்டி எழுப்பி, மேலே படர்ந்து.. இன்னும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

 

கோபி கிருஷ்ணா.. கோகுல கிருஷ்ணா.. வீட்டில் கங்காதர்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறான்.

 

வீடு.. இருக்கிற குடிசையே நித்திய கண்டத்தில்.. தவழ குழந்தைதான் பாக்கி…

 

கங்காதருக்குக் கால்போகும் வரை பெரிசாகத் தெரிந்த விஷயம்.. இப்போது மூச்சு நின்று விடாமல் இழுத்துப் பிடிப்பதே பிரச்சனை..

 

ஒரு பிள்ளை.. செயல் ஓய்ந்து போன வயதில் வைத்துக் காப்பாற்ற ..நாலு எழுத்து படித்து.. நல்லதாக உத்தியோகம் பார்த்து.. செருப்பு போட்டுக் கொண்டு.. டக்டக் என்று கம்பீரமாக..

 

‘என்ன தீதி .. சாயாவிலே லால்பரி ஊத்திக் குடிச்சியா?’

 

ஷூ பாலீஷ் செய்கிற பையன். தடுமாறி மேலே விழுந்தவளைப் பார்த்துப் பல்லெல்லாம் தெரியச் சிரித்தான். வயசுக்கு மீறின பார்வை…

 

‘சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்..’

 

அவன் பக்கத்தில், மீசை முளைக்கத் தொடங்கியிருந்த விடலை, கை இரண்டையும் கிண்ணம் போல் குவித்துக் கொண்டு பாடியது, கழிப்பறை வாசல் வரை கேட்டது.

 

சாந்தாபாய் காறி உமிழ்ந்தாள்.

—————————————————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன