பக்லவா ஆசை

பக்லவா ஆசை
——————–
நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நக்யுப் மஹ்ஃபுஸின் ’கெய்ரோ மூன்று நாவல் தொகுதி’ படித்தேன். எகிப்திய தி.ஜானகிராமன் என்று அவரை நான் சொல்லத் தயார்.
சிதறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள், சின்னச்சின்ன சோரங்கள், மனக் குமைச்சல், இசை மேல் விருப்பம் என்று பொதுவான நகாசும், கதை முடிச்சுகளும் தட்டுப்படுகின்றன. மாமியார் மருமகள் சண்டை மருமகளின் அப்பாவை வரவழைத்து நீதி கேட்பதில் நிற்கிறது. சிக்கலான பிரச்சனை. சிர்கேஸிய பாணி கோழிக்கறியை அவர்களில் யார் யாருக்குச் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள் என்று அடித்துக் கொள்கிறவர்களை விலக்கி, நீங்க சொன்னது தான் சரி என்று அவசர நீதி பிரகடனம் செய்து தன் மகளை அவளுடைய மாமியாரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார். அப்போதைக்கு அமைதி நிலவுகிறது.
மஹ்ஃபுஸ் மிதமான நகைச்சுவையோடு சொல்லும் இந்த அத்தியாயம் தவிர சிரிப்பு அபூர்வமான, எனில் சுவையான இந்த நாவல், காலைச் சிற்றுண்டிக்கு கோதுமை ரொட்டி தயாரித்து, ஒரு மத்தியதரக் குடும்பம் கூடியிருந்து உண்பதில் தொடங்குகிறது. முட்டை, பாலாடைக்கட்டி, அவரை, எலுமிச்சை ஊறுகாய் என்று ரொட்டிக்குப் பக்கவாத்தியம் ஒத்து சேர்கிறது. வீட்டுப் பெரியவர்கள் திருப்தியாக சாப்பிட்டு எழுந்த பின்னர் இளைய தலைமுறையும் குழந்தைகளும் உண்ணும் கலாசாரம் அவர்களுடையது.
மறுபடி பிற்பகலில் குடும்பம் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்தபடி காப்பி குடிப்பது விஸ்தாரமாக வருகிறது. போகிற போக்கில் அராபிய இனிப்பு பக்லவாவும் குறிப்பிடப்படுகிறது.
சென்னையில் அந்த துருக்கி-அரேபிய இனிப்பு கிடைக்குமா என்று கூகுள் தேடல் செய்த ஐந்தாவது நிமிடம் டன்ஸோ வினியோக சேவை நிறுவன ஊழியர் வாசல் மணி ஒலிக்க, பக்லவா வந்து சேர்ந்தது. உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா சீவல் என்று தேன்பாகில் சீவிப் போட்டு அவசரமாகப் பிடித்த சுவைக்கட்டியாக அசட்டு இனிப்புச் சுவையோடு பக்லவா இருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
(’புரவி’ மாத இதழில் என் ‘வாதவூரான் பரிகள்’ ஜூலை 2022 பத்தியில் இருந்து)
புரவி வாங்க 99628 14443

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன