தகழி எழுதாத ஆத்ம கதா – சுஜாதா எழுதிய புதுக் கட்டுரை

தகழியின் ஆத்மகதை

தகழியின் ‘ஆத்மகத’ படிக்கக் கிடைத்தது. சொல்லப் போனால் தகழி இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை. ‘பால்யகாலம்’, ‘வக்கீல் ஜீவிதம்’, ஓர்மயுடெ தீரங்ஙளில்’ என்ற அவருடைய மூன்று வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்புகளை ஒட்டு மொத்தமாக ஆத்மகதையாக்கி இருக்கிறார்கள். 1959 வரையான தன் வாழ்க்கைச் சரிதத்தைக் கால வரிசை மீறிய கட்டுரைகளாக அதுவும் பத்திரிகைத் தொடர்களாக எழுதியிருக்கிறார் தகழி. வாழ்ந்த காலத்திலேயே சர்வதேச அளவில் மிகப் பிரபலமான எழுத்துக்காரனாக ஆனதால் கடைசி நாற்பது வருடங்கள் திறந்த புத்தகமாகி இருக்குமோ என்னமோ.  என்றாலும் ஆத்மகதையில் சொல்லப்பட்ட பாதி வாழ்க்கையே அலாதி சுவை.

நூறு வருடத்துக்கு முந்திய அம்பலப்புழை பகுதி எப்படி எல்லாம் இருந்தது என்று கற்பனை செய்தேனோ அப்படியே, அதற்கு மேல் அழகாக தகழியின் எழுத்தில் விரிகிறது. முக்கியமாகப் பசுமை மணக்கிற தகழி கிராமம். இப்போது இருப்பதை விட இன்னும் பசுமையாக, இன்னும் மழை பெய்து கொண்டு, ஓலைக் குடையைச் ‘சூடி’க்கொண்டு, கொதும்பு வள்ளத்திலும் வஞ்சியிலும் பயணம் செய்து கொண்டு.

அம்பலப்புழை பள்ளிக்கூடத்துக்கு மதிய உணவாகச் சோறு அடைத்த தூக்குச் சட்டியோடு நடந்து தனியான ஒரு இடத்தில் அதை வைத்து விட்டுப் பிள்ளைகள் பாடம் படிக்க உட்கார்ந்த மழைக்காலம் அது. மதியம் சாப்பிட எடுத்த பாத்திரங்களில் சோறை மறைத்து அடை அடையாக ஊரும் எறும்புகள். மேலோட்டமாக அப்படியே வழித்து எறிந்து விட்டு மீந்ததை அவர்கள் சாப்பிட உட்கார்கிறார்கள்.  பள்ளிப் பிள்ளைகள் ஜன்னல் வழியே வீசி எறிந்த எறும்புச் சோற்றுக்காக வெளியே இன்னும் சில குழந்தைகள் காத்து நிற்கின்றன. கையில் வாங்கி வாயில் எறும்பு கடிக்கக் கடிக்கத் திணித்துக் கொண்டு மெல்லுகின்றன. கடல்புரம் செம்படவர்களின் குழந்தைகள் அவை. மழைக்காலத்தில் கடலில் மீன் பிடிக்க முடியாமல் கரையில் பட்டினி கிடக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவை.

தகழியில் 1920களில் புதிதாக முளைத்த ஒரு கடையை ஊரே முன் நின்று எதிர்த்து அடைக்க வைத்த கதையைச் சொல்கிறார் தகழி. இது கள்ளுக்கடை இல்லை. கள்ளுக்கடை எந்தக் காலத்திலும் கேரளத்தில் அடைக்கப்பட்டதாக  நினைவு இல்லை. தகழி கிராமத்தில் தோன்றி மறைந்தது வெறும் தோசைக் கடை. தோசை சாப்பிட வீட்டில் காசு திருடிக் கொண்டு வருகிற பிள்ளைகள் காரணமாக ஊரில் சிறு திருட்டு அதிகரித்ததால் கடையை இழுத்துப் பூட்ட  வைத்திருக்கிறார்கள்.

‘அரையணாவில் நாலில் ஒரு பாகத்துக்குக் கொஞ்சம் கூடுதலான’ அந்தக் கால நாலு காசுக்கு ஒரு தோசை, ஒரு குவளை சுக்கு மல்லிக் காப்பி’ என்று கணக்குச் சொல்கிறார் தகழி. அவர் கட்டுரை எழுதிய காலத்துக்கு அப்புறம் அரையணாவும் காலமாகி விட்டது. அம்பலப்புழையும், கட(ல்)புரமும், முக்குவர்களும், கடலும் கூட மாறியாகி விட்டது.


வாட்ஸ் அப்பில் நாலைந்து பேர் ‘சுஜாதா மாயவரம் காளியாகுடி ஓட்டலைப் பற்றி எழுதியது’ என்று நீளமான ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள். வரவர சுஜாதா புதியதாக நிறைய எழுத ஆரம்பித்து விட்டார்…

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன