நாலு வரிக் கடிதத்திலும் ஒரு நகைச்சுவை – அவர் தான் சுஜாதா

இன்று சுஜாதா சார் பிறந்தநாள்.

 

சாஹித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘சுஜாதா’ நூலுக்கான முதல் வடிவத்திலிருந்து –

 

——————————————-

சந்திப்பு – சென்னை 1995

 

அவர் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை முடிந்து வந்திருந்த நேரம். காலில் நீளமாக வடு. அறுவை சிகிச்சைக்காக அவரைக் குத்திக் கிழித்திருந்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

 

ரெண்டாம் பைபாஸ் வெற்றிகரமாக முடிந்து அதற்கப்புறம் ரகளையாக இருபது வருடத்துக்கு மேல் அட்டகாசம் செய்து கொண்டிருந்த யாரையோ பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் சுஜாதா.

 

அவர் சிரிக்காமல் சொன்னாலும், எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எங்களால் என்றால், நானும், மறைந்த நண்பர் ‘ஆய்வு வட்டம்’ வெ.கிருஷ்ணமூர்த்தியும்.

 

அந்த நேரத்தில் சந்திப்புகளைத் தவிர்த்து வந்தாலும், ’வெ.கியோடு கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேச முடியுமா’ என்று தொலைபேசிக் கேட்டதும், ‘யாரு, நா.வானமாமலை மாணவர் தானே, கூட்டிட்டு வா, நானே பார்க்கணும்னு இருந்தேன்’ என்று உடனே சம்மதித்தார். வாரக் கடைசியில் போயிருந்தோம்.

 

நொபோரு கராஷிமா என்ற ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர், சோழர் கால வாழ்க்கை முறை, மற்றும் ராஜராஜன் காலத்தில் நடந்த உழவர் கலகம் பற்றி எழுதியிருந்தார். அதைப் பற்றிப் பேச்சு சுழன்று கொண்டிருந்தது. அங்கிருந்து, திருவரங்கம் கோவிலில் அந்நியர் படையெடுப்பு, கோபுரத்திலிருந்து விழுந்து உயிர் விட்டவர்கள், சிவகங்கை சரித்திரத்தில் மருதுநாயகம் என்ற கான்சாகிபின் பங்கு என முழுக்க வரலாறாகப் பேசிக் கொண்டே போனார் சுஜாதா.

 

திருமதி சுஜாதா நாசுக்காக, ’போதும், சிரமப் படுத்திக் கொள்ள வேணாம்’ என்று குறிப்பால் உணர்த்த, நானும் வெ.கியும் எழுந்து கொண்டோம். கைகாட்டி அமர்த்தினார் சுஜாதா. ஆனாலும் என்ன, எழுந்தது எழுந்ததுதான்.

 

‘இதெல்லாம் வரவர எப்போவாவது தான் பேசக் கிடைக்கறது. முக்கால் வாசி நேரம் சினிமாக் கதை வசனம் எப்படி எழுதறீங்க, அவர் ஏன் இப்படிச் சொன்னார், ஏன் இந்தப் படம் ஓடலே, எவ்வளவு பணம் கொடுப்பாங்க இந்தப் பேச்சு தான். கான்சாகிப் சண்டை புத்தகம், நா.வா பப்ளிஷ் பண்ணியிருக்கார்னீங்களே, இருந்தா அனுப்புங்க, படிச்சுட்டுத் தரேன்’

 

விடைபெறும் போது சொன்னார் சுஜாதா. அவருக்குப் பின்னால் சாப்பாட்டு மேஜையில், உயர ஸ்டூலில், மர ஷெல்பில், சோபா ஓரமாக என்று அவர் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை போன காலத்தில் வந்து குவிந்திருந்த புத்தகங்களைப் பார்த்தபடி வெளியே வந்தோம்.

 

’தெளிவான பார்வை, ஆழ்ந்த படிப்பு, அபூர்வமான மனிதர்’.

 

வெ.கி சொன்னார். ஆச்சரியத்தோடு பார்த்தேன். அவர் சாதாரணமாக யாரையும் பாராட்ட மாட்டார்.

 

சந்திப்பு – சென்னை 1999

 

தாய்லாந்தில் இருந்து, நடுவில் இங்கே வந்தபோது, ஒரு மாலைப் பொழுதில் அம்புஜம்மாள் தெரு போனேன்.

 

‘என்ன, லேசா வெயிட் போட்டிருக்கே?’

 

‘சிவப்பு மாமிசம், சார்.. வேறே சாய்ஸ் இல்லே’.

 

‘லீன் மீட், போன்லெஸ் சிக்கன்.. தயிர் கிடைக்கலேன்னா பல்கேரியன் யோகர்ட் பிசைஞ்சு தயிர் சாதம்.. தேடினா கிடைக்கும்’. ட்ரேட்மார்க் சுஜாதா சிரிப்பு.

 

நினைவாகக் கேட்டார், ’கான்சாகிப் சண்டை என்ன ஆச்சு?’

.

’வெ.கி காலமாயிட்டார் சார்’.

 

வெ.கி என்னிடம் புத்தகம் கொடுத்திருந்ததையும் அதை நான் கைமறதியாக எங்கேயோ வைத்துவிட்டதையும் சொல்லவில்லை.

 

தாய்லாந்து திரும்பினதும் ரெண்டு நாள் சுஜாதா அறிவுரையைக் கடைப்பிடித்து, பல்கேரியன் தயிர் சாதம். அப்புறம், திரும்பவும் சிவப்பு மாமிசம்.

 

இலக்கியத் தேடல், வரலாற்று விவாதம், தொழில் நுட்ப அறிவு மேம்படுத்துதல், எழுத்து, வாசிப்பு என்று எல்லாமே வாழ்க்கைக்கு அப்புறம் தானே.

 

வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு நாடு, வெவ்வேறு ஊர் என்று அலைந்து கொண்டிருந்த போதும், தொலைபேசி, மின்னஞ்சல் என்று எப்படியாவது மாதம் ஒருமுறை அவரைப் பிடித்து விடுவேன். நேரில் பேசுகிற அதே நேசமும், கண்டிப்புமாகத் தொடர்பு கிடைக்கும்.

 

நான் படித்த ஒரு கவிதையை அனுப்ப, ’கண்ட குப்பையை அனுப்பி நேரத்தை வீணாக்காதே’ என்ற திட்டு கிட்டியதும் உண்டு. என்ன எழுதினாலும், பேசினாலும், கான்சாகிப் சண்டை பற்றி விசாரணை இல்லாமல் இருக்காது. வெ.கி கொடுக்கலை என்று பொய் சொல்ல மனம் வராமல் நான் சுற்றி வளைத்துக் கட்டி ஏதேதோ பேசியே அடுத்த பத்தாண்டு போனது.

 

அடுத்து வீடு மாற்றும்போது யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றிய நாலைந்து புத்தகத்தைக் களைய வேண்டியிருந்தது. உலகம் யூனிக்ஸை விட்டு வெகு தூரம் முன்னே போய்விட்டதால் அவை தேவையே இல்லை.

 

யூனிக்ஸ் புத்தகங்களோடு, வெ.கி கொடுத்த ‘கான்சாகிப் சண்டை’ இருந்தது. பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டேன். சுஜாதாவை சந்திக்கும்போது கொடுக்க வேண்டும்.

 

அஞ்சலி – சென்னை 2008

 

மேஜை மேல் வைத்த மொபைல் சத்தமில்லாமல் அதிர்கிறது. இதுதான் இதுதான் என்று ஏதோ துக்கத்தை எதிர்பார்த்து எடுத்த கை நடுங்குகிறது. “சுஜாதா சார் காலமாகி விட்டார்”. நண்பரான பத்திரிகை ஆசிரியரின் குரல் எதிர்முனையில். தொடர்ந்து பேச ஏதுமில்லாததுபோல் நீண்ட நிசப்தம். ‘சரி’. எதுவும் சரியில்லைதான். ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டுமே. சொன்னேன்.

 

மூன்று தலைமுறைகளைத் தொடர்ந்து வசீகரித்து வரும் சுஜாதாவின் எழுத்து ரகசியம் என்ன? எழுத்தில், இலக்கியத்தில், அறிவியலில் அவருக்கு இருந்த தீராத காதல். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படிப்பதில் காட்டுகிற அதே ஈடுபாட்டை நானோ டெக்னாலஜியின், ஸ்டெம் செல் உருவாக்கும் மருத்துவ நுட்பத்தில் காட்டுவார் அவர். காலத்தோடு கைகோர்த்துச் செல்லும் எழுத்து பாணி அவருடையது. மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டர் கற்பழித்தது என்று கதை எழுதி தலையில் ராட்சத பல்புகள் சுழல ஒரு யந்திரம் நடந்து வருவதாகப் படம் போட்ட காலத்திலேயே அவர் கதையிலும் கட்டுரையிலும் நாம் தொட்டு உணரக் கூடிய கம்ப்யூட்டரைக் காட்டினார்.

 

பஞ்சாயத்து போர்ட் நூலகத்தில் பத்திரிகை படிக்கக் கிடைக்கிற கிராமப்புற, சிறு நகர இளைஞர் கூட்டத்துக்கு அவர் இப்படிக் காட்டியது கம்ப்யூட்டரை மட்டுமில்லை. ஷியாம் பெனகலின் ‘அங்கூர்’, பாபு நந்தன் கோடுவின் ‘தாகம்’ போன்ற ஆர்ட் சினிமாக்களை, ஞானக்கூத்தன் கவிதைகளை, எம்.பி.சீனிவாசன் சேர்ந்திசையில் ஆயிரம் கார்ப்பரேஷன் பள்ளிச் சிறுவர்களை. ஒரே குரலில் ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்று பாரதி பாடலைப் பாடவைத்த அற்புதத்தை, சால்வடார் டாலி, பிகாசோவின் ஓவியத்தை, பீட்டில்ஸின் ‘செர்ஜண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட் கிளப்’ இசை ஆல்பத்தை, ஹோலோகிராமை, ஆழ்வார் பாசுரத்தை.

 

எதைத்தான் விட்டார் அவர்?

 

எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார் –

 

‘என்னது? ஐம்பத்து ரெண்டெல்லாம் வயதில் சேர்த்தியா? ஏன் அதற்குள் வேலைக்கு குட்பை சொல்லி விட்டு இலக்கிய சேவையில் முழுமூச்சாக இறங்க நினைக்கிறாய்? எழுபத்துரெண்டு வயதில் இன்னும் நான் பார்ட் டைம் கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்கிறேனே? வேறு எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டில் மனைவிக்கு ஒரு ஏழெட்டு மணி நேரம் தனிமையில் நிம்மதி கிடைக்குமில்லையோ?’

 

நாலு வரிக் கடிதத்திலும் இந்த நகைச்சுவை தான் சுஜாதா.

 

2

 

 

 

 

 

 

 

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன