ஹரித்ரா நதி நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

நண்பர் ஆர் வி எஸ் எழுதிய ஹரித்ரா நதி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.

 

1960-களில் கலைமகள் மாத இதழில் ’எங்கள் ஊர்’ என்ற தலைப்பில் பல துறை சார்ந்த சாதனையாளர்கள் எழுதிய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தபோது அவை வாசகர்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. பிறந்து வளர்ந்த ஊரையும், அங்கே என்றோ ஆடி ஓடி ஓய்ந்த பிள்ளைப் பிராயத்தையும் நினைவு கூரும் இந்தக் கட்டுரைகள் பின்னர் புத்தகமான போதும் பெரும் வரவேற்பை அந்நூல் பெற்றது.

நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ’என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக்  கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு.

பின்னாட்களில் சுஜாதா ஸ்ரீரங்கத்துத் தேவதைகளைத் தம் பால்ய காலமான 1935-45களிலிருந்து மீட்டெடுத்து வசீகரமான எழுத்தில் ஆவாஹனம் செய்ய, இந்த ழானர் புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன். இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்விஎஸ் மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் என்று அன்புடன் நாங்கள் விளிக்கும் வெங்கடசுப்ரமணியன் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார்.

1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ரா நதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்விஎஸ். நினைவுகளும் கனவுகளும் தர்க்கத்துக்கு உட்பட்ட எந்த வரிசையிலும் வராது என்பதால் ஒரு அலையில் அவர் பத்து வயதுப் பையனாகவும், அடுத்ததில் பதின்ம வயதும் தொடர்வதில் பனிரெண்டு வயதாகவும், அடுத்து பதினேழு வயதுமாக நேர்த்தியான எழுத்துத் தோரணம் பின்னிக் கொண்டு செல்கிறார்.

சுவாரசியமான மனிதர்கள் புத்தகமெங்கும் பரவி, நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறார்கள்.

இறுக்கிப் பிடிக்கும் சட்டையுடன் தரை பெருக்கும் பெல்பாட்டம் கால்சராய் அணிந்த  இளைஞர்களும், பாவாடை தாவணி அணிந்து கைக்குட்டையை இடுப்பில் செருகிய இளம் பெண்களும் நிறைந்த உலகம் அது. காலைக் காட்சியில் மலையாள சினிமாவும் இடையில் ஐந்து நிமிடம், வயது வந்தவர்களுக்கு மட்டுமான தேசலான நீலக் குறும்படமும் அமர்க்களப்பட்ட ஹரித்ரா நதிக் கரை சினிமா கொட்டகையில் அந்த இளைஞர்கள் விலக்கப்பட்ட கனியான  அத்திரைப்படத்தையும் அடித்துப் பிடித்துப் பார்த்து பெரியவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

வற்றிய குட்டையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர் அணி, அவர்களை விசிலடித்து உற்சாகப்படுத்தத் தனி ரசிகர் கூட்டம், அமைதியாக இருந்து ஊக்கம் தரும் ஒரு சில சியர்கேர்ள்ஸ் கன்னியர் என்று எண்பதுக்களின் மன்னார்குடி கிரிக்கெட் பந்தயக் காட்சி புத்தகத்தின் பக்கங்களில் எழுகிறது.

கிரிக்கெட் இல்லாத நேரங்களில் இவர்கள் இந்தி படித்து ஹிந்தி பிரசார் சபாவின் ப்ராத்மிக் பரீட்சையில் பாஸ் செய்கிறார்கள். அது ஒன்றும் கஷ்டமில்லையாம். கேள்வித் தாளில் ஒவ்வொரு கேள்வியாக, வார்த்தைகளை முன்னே பின்னே மாற்றிப் போட்டு விடைத்தாளில் எழுதினால் ப்ராத்மிக் பாஸ்!

கிரிக்கெட் பந்தயத்தில் ஜெயித்துப் பரிசு வாங்கிப் பங்கு போட்ட ஹரித்ரா நதி கிரிக்கெட் கிளப் (HCC) அந்தப் பரிசுப் பணத்தில் சுற்றுலா போகிறது. வேளாங்கண்ணி கடற்கரையில் ஐந்து ரூபாய் கொடுத்து குதிரை சவாரி போகிற கிரிக்கெட் வீரன்,  வேகமாகப் போக வேண்டும் என்று குதிரையை வயிற்றில் உதைக்க அது பதிலுக்கு இவனை இடுப்புக்குக் கீழே மெயின் பாயிண்டில் உதைத்துத் தள்ளி விடுகிறது. சிரிப்பதா, அனுதாபப் படுவதா? சிரித்துக் கொண்டே உச்சுக் கொட்டலாம் தான்!

ராசியானது என்று கருதப்படும் வீட்டு மாடிகளில் கூடி பரீட்சைக்குப் படிக்கிறார்கள் மீசை அரும்பும் பருவத்தில் இந்தப் புத்திளைஞர்கள். உள்ளம் கவர்ந்த தாவணிக் கன்னியோடு ‘அழிரப்பரில்’ ஐ லவ் யூ எழுதி அவசரமான காதல் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் தீபாவளிக்குப் புதுசாக நீல உடை உடுத்தால், அண்ணலும் புத்தம்புது நீலச் சட்டை போட்டிருப்பதாக அமைந்த அதிசயம் கண்டு காதல் வெற்றி அடையும் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். வெற்றியடைந்ததா என்று ஆர்விஎஸ் சொல்வதில்லை. எதற்கு அந்தத் தகவல்?

நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ரா நதிக் கரை வீதி. ஆர் வி எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம்.

ராத்திரி எட்டு எட்டரைக்கே ஊர் தூங்கி விடும். ஹரித்ரா நதியும் சலனமே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும். லோக்கல் பஸ் கடகடத்து, அழுது வடியும் சில விளக்குகளோடு, ஒன்றிரண்டு பயணிகள் ஜன்னலில் தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருக்க பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஊர்ந்து போகும்.

அந்த நதிக்கரையில் அக்கறை மிகுந்த பெரியவர்கள் வீட்டுச் சிறுவர்கள் மேல் அலாதி பிரியம் வைத்தவர்கள். கொஞ்சம் தொலைவில் இருக்கும் பள்ளிக்குப் போக சைக்கிள் டிரைவர் ஏற்பாடு செய்து, வாடகை சைக்கிளில் தினம் கொண்டுபோய்ப் பள்ளியில் விட்டு, மாலையில் திரும்பக் கூட்டி வரச் செய்கிறார்கள். அப்புறம் சைக்கிள் ஓட்டுதல் தேர்ந்து அந்தச் சிறுவர்கள் தொட்டதெற்கெல்லாம் – ‘கொல்லைக்குப் போகக்கூட’- சைக்கிள் மிதித்து ஊரை வலம் வருவதை ரசிக்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

பேக்கரி கடைக்காரரிடம் ஐம்பது காசு கடன் வாங்கி வெள்ளரிப் பிஞ்சு வாங்கிச் சாப்பிட்ட சிறுவனை வன்மையாகக் கண்டித்து அந்தக் கடனை உடனே அடைத்து நல்வழி காட்டுகிறவர்கள் அவர்கள்.

மார்க்கோனி கால வால்வ் ரேடியோவில் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் கமெண்டரி ஒலிபரப்பு கேட்டபடி டென்னிஸ் ராக்கெட் நரம்பு பின்னும் சாமி – யார் எப்போது ஸ்கோர் கேட்டாலும் முகம் சுளிக்காமல் சொல்வார் அவர். ‘பார்த்து ரொம்ப நாளாச்சே. பேசிக்கிட்டிருப்போம்’ என்று டாக்டரைச் சந்திக்க வந்தவர்களிடம் அரட்டைக்கு அடிபோடுகிற கம்பவுண்டர், யார் வீட்டுக் கிணற்றில் என்ன விழுந்தாலும் உள்ளே சாடி எடுத்துத் தருகிற, நீர்ப் பிரவாகத்தில் முழுகி இறந்து போகிற சாமானியர், மாதக் கணக்காக ஒரே சொல்கட்டை வாசிக்கச் சொல்லிப் படுத்தும் மிருதங்க வாத்தியார், டிவிஎஸ் 50 வாகனத்தில் வலம் வந்து டெலிவிஷன் ஆண்டென்னா நிர்மாணிக்கும், கீச்சுக்குரல், கறார் பேச்சு தொழில்நுட்ப விற்பன்னர்… எத்தனை வகை  ஹரித்ரா நதி மனுஷர்கள்!

இவர்களை எல்லாம் ஒரு நமுட்டுச் சிரிப்போடு ஆர்விஎஸ் பரிச்சயப்படுத்தும் தொனி ரசிக்கத் தகுந்தது.

சுவாரசியமான மனிதர்களும் மட்டக் குதிரைகளும் மட்டுமில்லை, மற்ற ஜீவராசிகளும் அங்கங்கே ஹரித்ரா நதியோரம் தலை காட்டுகின்றன. ’தலைக்கு மேலே உத்திரத்தில் ஸ்பிரிங்க் போல் ஐந்தாறு முறை மேனியைச் சுற்றிக்கொண்டு கைப்பிடியளவு காத்திரமான வெள்ளி செயின் போல்   அவ்வப்போது தலைகாட்டி’, ”நாகராஜா கண்ணுலே படாம மண்ணுலே போ”, என்று வீட்டு மனுஷர்கள் பேச்சு வார்த்தை நடத்த, ஒப்புக்கொண்டு திரும்பிப் போகும் பாம்புகள் அவற்றில் உண்டு.

ஹரித்ரா நதியின் மேல்கரையில் ஒரு அழகான குடிசை வாசலில் கறுப்பு நிறத்தில், வயிற்றில் வெள்ளைக் கலரில் திட்டுத் திட்டாய்த் தீவு படங்களோடு காளைகள் புல் மேய்ந்து கொண்டிருக்க பச்சைக் கூண்டு வண்டியின் நுகத்தடி புல்தரையை முத்தமிட்டபடி முன்னால் சாய்ந்திருக்கும். வான்கோவோ கான்ஸ்டபிளோ தீட்டிய ஓவியம் போல ஒளிரும்  நிலவெளி அது.

மார்கழி முழுவதும் வேட்டியை மடித்துக் கட்டி அண்டர்வேர் நாடா தெரிய, முந்திரிப் பருப்பும் நெய்யும் பெய்த பொங்கல் செய்து அள்ளி எடுத்து கிள்ளிக் கொடுக்கும் கோவில் பரிசாரகரும், அம்மன் பாட்டு இசைத் தட்டுகளை கோவில் பிரகாரத்தில் ஒலிபெருக்கும் அழுக்கு லுங்கி அணிந்த சவுண்ட் சர்வீஸ் காரரும், வைகுண்ட ஏகாதசி கழிந்து சொர்க்க வாசல் திறந்து ராஜகோபாலப் பெருமாள் சேவை சாதிக்க, வெளியே ஆண்டாள், கண்ணன், அனுமன் என்று வேடம் புனைந்து சில்லரைக்குக் கை நீட்டுகிறவர்களும் வரும் கோவில் காட்சிகளுக்கும் ஹரித்ரா நதியில் பஞ்சமில்லை. நதிக்கரை நாகரிகத்தில் கோவில்களும் விழாக்களும் தனியிடம் பெற்றவை அன்றோ.

பங்குனித் திருவிழாவில் ராஜகோபாலன் திரு உலா கண்டு மனதைப் பறிகொடுத்தவர்கள் இந்த நதியோரத்து பெரிசுகளும் பொடிசுகளும்.

”கையிலே சாட்டையும் சிகப்புக் கல் ரத்தினம் பதித்த ஜிகுஜிகு பேண்டும் இடுப்பிலே தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும் தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும் நெஞ்சுலெ பச்ச பசேல்னு மரகத பதக்கமும் கொழந்த மாதிரி சிரிச்ச முகமும் கொஞ்சமா சாஞ்சு நின்னுண்டிருக்கிற ஒய்யாரமும்.. நம்மூர் கோபாலன் அடடா அழகு கொள்ளை அழகுடா ..”.

பாட்டி மெய் சிலிர்த்து வர்ணிக்கும், வெறும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் உலா வந்த கோபாலனின் திருக்கோலம் இது. கண்ணாடியோ கண்ணோ இல்லாமலேயே ஐம்பது வருஷங்கள் கோபாலனைப் பார்த்துப் பழகிய பாட்டியின் மனக்கண் காண்பித்த கோலாகலமான காட்சியல்லவா!

நூல் முழுக்க தூலமான ஒரு கதாபாத்திரமாக ஹரித்ரா நதி வருகிறது. அது நிறைந்து பொங்கிச் செல்லாவிட்டாலும், தேங்கியிருந்தாலும், வரண்டு நீர்த்தடமின்றிக் கிடந்தாலும், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் இடம் பெறுகிறது. ’நதியில் குளிக்காமல் இருந்து காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்வதை விட, அதிகாலை அந்த நீரோட்டத்தில் குளித்து காய்ச்சல் வந்தாலும் பரவாயில்லை’ என்று டாக்டரிடம் சொல்லும் சாரதாப் பாட்டி போன்ற மறக்க முடியாத பாத்திரங்கள். வைத்தியனுக்குத் தர வேண்டியதை நேரில் போய்க் கொடுத்தாலே நோய் அண்டாது என்பது அவருடைய நம்பிக்கை. அது வீண் போவதில்லை.

ஹரித்ரா நதி படித்துக் கொண்டிருந்தபோது என் பாலப் பருவத்தையும் மீட்டெடுத்தேன் என்றால் யாரும் நம்பப் போவதில்லை. ஆனால் அது உண்மை. எங்கள் செம்மண் பூமியில் சாதாரணமாக உலவும், நான் மறந்தே போயிருந்த சொல் – கோட்டம். இது கோணல் என்ற பொருளில் வரும். சைக்கிள் ஓட்டிப் போகும்போது எதாவது காரணத்தால் வண்டி தரைக்குச் சாய்ந்தால், முன் சக்கரத்தை கால் நடுவே பற்றி, ஹேண்டில் பாரை இப்படியும் அப்படியும் அசைத்துச் சக்கரம் கோணல் ஆகியிருப்பதை நேராக்குதல், கோட்டம் எடுத்தல் எனப்படும். ஆர்விஎஸ் அவர் பாலபருவத்தில் புது சைக்கிள் வாங்கியபோது, அக்கறையுள்ள சைக்கிள் விற்பனையாளர் மெல்லத்தான் சைக்கிளை ஒப்படைக்கிறார், சோதனை செய்து, கோட்டம் இல்லை என்று உறுதிப் படுத்திக்கொண்டு. எனக்கும் ஆர்விஎஸ்ஸுக்கும் ஒரே பெஞ்ச் மட்டுமில்லை, கோட்டமில்லாத ஒரே சைக்கிளும் கூடத்தான்.

ஆர்விஎஸ் எழுத்திலும் எந்தக் கோட்டமும் இல்லை. எடுத்துக்கொண்ட விஷயத்தில் ஆத்மார்த்தமாகத் திளைத்து அன்போடு வாசகரோடு பங்கு போட்டுக் கொள்கிறார். புத்தகத்தை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்துக் கீழே வைக்கச் செய்ய அவரால் முடிகிறது. ஹரித்ரா நதியின் வெற்றி அங்கே தான் இருக்கிறது.

அன்புடன்

இரா.முருகன்

 

நூல் ஹரித்ரா நதி

ஆசிரியர்  ஆர்.வி.எஸ்

பதிப்பு கிழக்கு பதிப்பகம்

ஆண்டு  2022

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன