18. துபாஷ் ராமோசி ராயன் 1745 புதுச்சேரி – சில குறிப்புகள் (என் நாவல் ராமோஜியம்)

an excerpt from my novel RAMOJIUM – novel available in Kizhakku Padhipagam stall in Chennai Book Fair 2022

முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானாmல் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை   என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?

அந்த மனுஷனைப் பாவம் வாரம் முழுக்க, நாள் முழுக்க மதாம் தியூப்ளே துரைசானியம்மாள் கையில் கொட்டையை வாகாகப் பற்றி நெறித்து ’ஆடுறா ஆடு, கிழட்டு குரங்கே ஆடு, தியூப்ளே குரங்கே ஆடு’ என்று ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறாள். அதிலெல்லாம் இருந்து தப்பித்து, கொஞ்சம் தென்னங்  கள்ளு, கொஞ்சம் ஓய்வு, கொஞ்சம் அதிகார ஆர்ப்பாட்டம் என்று பொழுது போக்கிவிட்டுத் திரும்ப, தியூப்ளே  துரை முரட்டாண்டி சாவடிக்கு வந்து விடுவது வழக்கம்.  ஊர் ரொம்ப இஷ்டமாகி, அதன் பெயரையே தியூப்ளேசு பேட்டை என்று தனதாக மாற்றினார் அவர்.

தோப்பு மண்ணும், மர நிழலும், பறவைகளின் சத்தமும், பக்கத்தில் சிறிய நீர்த்தடமாகச் சுற்றி நடக்கும் ஓடையும், கடலில் இருந்து புறப்படும் காற்றும், சுத்தமான சூழ்நிலையுமாக அவருக்கு மிகவும் பிடித்துப்போன பிரதேசம் அது. அதை அசுத்தப்படுத்த அவரால் முடிந்ததனைத்தும் செய்வார், ஆமாம்.

இந்த வாரக் கடைசி சனிக்கிழமை இது. இன்று காலை ஏழு மணிக்கு மதாம் அசதியோடு தூங்கிக் கொண்டிருக்கும்போதே, துரை சாரட்டை சித்தம் செய்து வைக்க ஏற்பாடு செய்து விட்டார்.  ஆனால் நாம் நினைப்பது போலவா  நாள் நடக்கும்? பிரஞ்சு கவர்னர் தியூப்ளே துரைக்கு எத்தனை பிரச்சனைகள்!

துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளை உடம்பு சரியில்லாமல் போன பிறகு துரையின் பிரதான வேலையான கபுறு கேட்டல் என்ற தகவல் கேட்பது தடைப்பட்டுப் போயிருக்கிறது.

பிள்ளைவாள் பார்த்துப் பார்த்து கவர்னர் துரை  உத்தியோக ரீதியில் தெரிந்து கொள்ள வேண்டிய பிரத்தியேக கபுறு, மற்றபடி உளவு வார்த்தை, ஊர் வம்பு, ஹேஷ்யம், அனுமானம், ஹாஸ்யம் எல்லாம் அனுதினமும்  வந்து இருந்து விஸ்தாரமாக  முகவார்த்தை சொல்லி,   அனுப்பிவித்துக்கொண்டு போவார். லிகிதமாகவும் சிலதை எழுதி அனுப்பி வைப்பார். அது பிள்ளைவாள் சுகவீனம் அடைந்த பிற்பாடு, எப்போதும் போல்  தியூப்ளே துரைக்கு  கிடைக்க மாட்டேன் என்கிறது. கிடைத்தாலும் உடனடியாக வந்து சேர்வதில்லை.

 

ஆனந்தரங்கம்பிள்ளை ஒற்றை மனுஷ்யராக ஆள் அம்பு குதிரை நிர்வகித்து இத்தனையும் திரட்டுகிறதை மற்றவர்கள் செய்தால் பல பேர் அதுக்கு வேண்டியிருக்கும்.

சர்க்கார் கபுறுக்கு ஒருத்தன், ஊர் வம்புக்கு ஒருத்தன், உளவு வார்த்தைக்கு ஒருத்தன், உளறுமொழிக்கு இன்னொருத்தன் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒருத்தனாக நியமித்தால் புதுச்சேரி பிரஞ்சு சர்க்காரின் கஜானா காலியாகி விடும்.

மேலும், எவனுக்கும் சர்வ வியாபகமான அறிவோ, சமத்காரமாகவும், சட்டென்று பதில் சொல்வதாகவும் மதிநுட்பமோ கிடையாது. வெற்றிலையும் பாக்கும் நாள் முழுக்க மென்று மென்று அசமஞ்சமாகத்தான் அரையில் சொறிந்தபடி அவனவன் வேலைக்கு வரான். பல் துலக்கும் நேரம் தவிர, அப்படி ஒன்று இருந்தால், பல் துலக்கும் நேரம் தவிர, சம்போக நேரம் அடங்கலாக இவர்கள் வெற்றிலை பாக்கு மெல்லாத பொழுது இல்லை.

ஈதெல்லாம் சேர்ந்து தியூப்ளே துரையின் சனிக்கிழமை விடுமுறை நாளைப் பாழ் பண்ணுவதாக ஆக்கியது. புறப்பட்டதுமே அவருக்கு நிலைமை சரியில்லாமல் போனது. சாரட் ஓட்டுகிறவனும் கூடவே லொங்குலொங்கென்று கையில் ஈட்டியோடு ஓடி வரும் நாலு பயல்களும் நவாப் மோஸ்தரில் சலாம் செய்து, அதிலே ஒரு முட்டாள் ”முரட்டாண்டி சாவடிக்கு போக எல்லாம் துரை சித்தப்படி தயார்” என்றபோதே அவருக்குக் கட்டோடு பிடிக்காமல் போனது.

இந்த கிராமத்துப் பெயர் முரட்டாண்டி சாவடி என்று இந்தப் பயல்கள் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை. தியூப்ளே பேட்டை என்று ஒரு வருடம் முன்னால் ஊர்ப் பெயரை மாற்றி கவர்னர் துரை தன் பெயரைச் சூட்டினாலும் அதை ஒருத்தனும் லட்சியம் செய்வதில்லை.

சொல்லக் கஷ்டமாக இருப்பதாக அவனவன் சலித்துக் கொண்டபோது தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளே பேட்டை, தூப்ளே  பேட்டை, துப்ளேப் பேட்டை என்று கொஞ்சம் அங்கே இங்கே தட்டிக்கொட்டி மாற்றிப் பெயரை உச்சரிக்கவும் அனுமதி கொடுத்தாகி விட்டது. இருந்தும் இன்னும் நீட்டி முழக்கி மொரட்டாண்டி சாவடி என்று தான் சொல்கிறான்கள்.

நிகழ்ந்து போன  குரோதன வருடம் வைகாசி மாதத்தில் ஒருநாள் சாயங்காலம் முனிசிபல் கவுன்சிலில் இருந்து கவர்னர் அவரது மாளிகைக்கு வந்தார். அலமுசு பண்ணிவிட்டு (காப்பி குடித்து) கவர்னர் துரை இருந்துகொண்டு துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளையிடம் சொன்னது என்னவென்றால் –

”ரங்கப்பா இதொண்ணும் சரியில்லை, கேட்டாயா.. இந்த சாமானிய ஜனங்களுக்கு பெரிய இடத்து வார்த்தை ஏதும் அர்த்தமாகுவதில்லை. எனவே கடுமையான நடவடிக்கை எடுத்து அதைப் புரிய வைக்கப் போகிறோம் இனி”.

உத்தரவாகணும் என்று பிள்ளையவர்கள் வாய் பார்த்திருக்க துரை சொன்னது –

”இந்த நாள் தொடங்கி இனி எப்போதும் முரட்டாண்டி சாவடி என்று யாரும் பழைய பெயரைச் சொல்லக் கூடாது என்று உத்தரவு போடுவோம். பிடிவாதமாகவோ, வாய் மறதியாகவோ முரட்டாண்டி சாவடி என்று சொன்னவன், சொன்ன ஸ்த்ரி காதை அறுத்து,  நாக்கில் மாட்டுச் சாணத்தைத் தடவி புதுச்சேரி பட்டண எல்லையில் விடுத்து, மறுபடி உள்ளே வரவொட்டாமல் செய்ய வேண்டியது”.

அந்த யோசனைக்கு ஆனந்தரங்கம்பிள்ளையவர்கள் இருந்து கொண்டு தகுந்த உத்தரமாகச் சொன்னது-

”மெத்தவுஞ்சரி. கவர்னரவர்கள் இந்த விஷயத்துக்காக காதை அறுப்பது என்று புறப்பட்டால் அறுந்து விழுகின்ற காதுகளை எடுத்து அகற்றி வைக்க சிப்பந்தி, தொட்டி வகையறா என்று நிறையத் தேவைப்படும். இன்னொன்று யார் இப்படி சொல்கிறான் என்று கேட்டுக்கொண்டு சுற்றிவர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ருசுப்பிக்க சாட்சிகளை தயார் செய்ய வேண்டும். இந்த சின்ன காரியத்துக்கு அத்தனை பிரயத்தனம் தேவை இல்லையே”.

அந்த மட்டில் அங்கே வந்த மதாம் துரைசானியம்மாள் துரைக்கும் தனக்கும் கபே கொண்டு வர குசினிக்கார குப்பையா செட்டியிடம் உத்தரவிட்டுவிட்டு இருந்து கொண்டு, ஆனந்தரங்கப் பிள்ளையிடமும், அவர் முகாந்திரம் கவர்னரிடமும் மொழிந்ததோ இந்த விதத்தில் இருந்தது –

”காலையில் சாவடியிலோ நெல் விளையும் வயலிலோ, கள் இறக்கவும், குடிக்கவும் போகும் தென்னந்தோப்பிலோ ஜனங்கள் கூடும்போது சுவாமியை ஸ்மரிக்கிறதுபோல் பத்து தடவை எல்லோரும் சேர்ந்து ”தியூப்ளெக்ஸ் பேட்டை, தியூப்ளெக்ஸ் பேட்டை” என்று உச்ச ஸ்தாயியில் சொல்லி அதன்பிறகு அவனவனுக்கான கிரமத்தில் புத்தி செலுத்த வேண்டியதென்று சட்டம் போடலாம். வீடுகளிலும் காலையில் உலையேற்றும்போது இதேபடி ஸ்திரிகளும், வயசு ரொம்ப ஆகி வீட்டோடு கிடக்கிற கிழங்களும் ஓசை எழுப்பப் பண்ணாலாம்.

”இதற்கு அப்புறமும்  முரட்டாண்டி சாவடி என்று உச்சரிக்கிறவன் பல்லை ஒரு தடவை சொன்னதற்கு ஒன்று வீதம் உடைத்துப் போடலாம்.

”ஷாம்பினா பாதிரியார் இந்த மாதிரி தண்டனைகளை அவிசுவாசிகளுக்கு அளிக்க பரீஸிலிருந்து தளவாடம் வாங்கி வந்திருக்கிறார். பல் உடைக்கும்போது சத்தத்தை பெருக்கி கேட்க நன்றாக உள்ளது. பல் உடைபட்டவன் தீனமாக அலறுவதும் கேட்க நேர்த்தியாக உள்ளது”.

அப்போது துரையவர்கள் இருந்து கொண்டு சொன்னது –

”பெயரை மாற்றிச் சொல்வதில் தான் நாம் கருத்து செலுத்த வேண்டுமே தவிர, பழைய பெயரைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து தண்டிப்பதில் நேரம் செலுத்தினால், நமக்கு சித்திரவதையில் தான் நாட்டம் என்று புலனாகிவிடும். ஏற்கனவே பாதிரியார் அவிசுவாசிகளுக்கு இதுபோல் தண்டனை தர ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் பிரசங்கித்தது ஊரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாம். இதிலே முரட்டாண்டிச் சாவடிக்காகப் பல் உடைப்பதையும் சேர்த்து இன்னும் கஷ்டமாக்க வேண்டாம். என்ன ரங்கப்பா நீ நினைப்பது என்ன?”

ஆனந்தரங்கம் பிள்ளை அதற்கு பதிலாகச் சொன்னது-

”நானும் அது தான் சொல்ல உத்தேசித்தேன். வேலியில் போகிற ஓணானை எதுக்கு இடுப்பில் எடுத்து விட்டுக் கொள்ளவேணும் என்று இங்கே பழமொழி ஒன்று உண்டு. மதாமுக்கு தமிழ் புரியுமென்பதால் தெரிந்திருக்கக்கூடும்”.

மதாம்  அபூர்வமாக தே (டீ) வேணாமென்று வைத்து கபே பருகியபடி இருந்துகொண்டு இதுக்கு உத்தரமாகச் சொன்ன யோசனை பின்வருமாறு இருந்தது –

”அங்கங்கே தெருவிலே கூட்டம் போட்டு பெயர் மாற்றத்தை ஜனங்களின் புத்திக்குக் கொண்டு போகணும் ரங்கப்பா. அப்படியே பயப்படுத்தணும்”.

அந்த யோசனை இன்னும் நடப்பாக்கப்படவில்லை. நேற்றுக்கூட மதாம் ஞாபகப்படுத்தினாள். கவர்னர் துரைக்கு ஆயிரம் ஜோலி. முரட்டாண்டி சாவடி புத்தியில் முன்னால் வந்து நிற்கவில்லை நேற்று வரை. காரணம் இதுதான் –

கிறிஸ்துவ மதப் பிரசாரம் போல் தெருக்கோடியில் கூட்டம் கூட்டிப் பேச ஆட்கள் வேண்டும். கவுன்சில் உத்தியோகத்தில் இப்படி யாரும் இல்லாத காரணத்தால் வெளியே ஆட்களைத் தேட வேண்டும்.  குறைந்த செலவாக ஆளுக்கு நாலைந்து துட்டு, ஒரு தினத்துக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இலவசமாகக் கொடுத்து விடலாம்.

அது ஒரு பிரச்சனையைத் தீர்க்கிற வழிமுறையாக இருக்கும்.

மற்றபடி சில லிகிதங்களை இங்க்லீஷில் எழுதுவிக்கவும், கபுறு வந்ததில் தமிழை, வேறே அந்நிய பாஷையை கவர்னரிடம் பிரஞ்சில் சொல்லவுமாக,   துவிபாஷி தேவை. ஆனந்தரங்கம் பிள்ளை மறுபடி ஆரோக்கியம் கொள்ள இன்னொரு மாதமாவது ஆகும் என்றார்களாம்  பிள்ளையின் வைத்தியர்கள். தாற்காலிகமாக ஒரு துபாஷை வேலைக்கு தயார் பண்ண வேணும். பிள்ளைக்கு வேண்டியவர்களில் யாரையாவது அவரே ஒரு மாதம், பத்து நாளுக்கு விரல் சுட்டலாம்.

துரை இளநீரை ஒவ்வொன்றாக சீவித்தரச் சொல்லி குடிக்க தொண்டையும் கழுத்தும் கண்ணும் குளிர்ந்ததாக தோன்றியது. பின்னால் பூட்ஸ் அணிந்த கால்களின் சத்தம். இளநீரைத் தரையில் தவறவிடாமல் இறுகப் பற்றி மடியில் இருத்தியபடி திரும்பிப் பார்த்தார் அவர். வந்தவன் மெய்க்காப்பாளன் ஆன முசியெ அந்த்வான் மொர்சேன். தமிழ் கற்ற கும்பினி பிரஞ்சுக்காரன் அவன்.

”என்ன மொர்சேன், கள்ளு எடுத்து வரவா என்று கேட்கிறான்களா? வேணாம். இவ்வளவு சீக்கிரம் கள்ளு குடித்தால் அப்புறம் எனக்கு தூக்கம் வந்துவிடும். மதியத்துக்கு நண்டும், இறாலும் சமைத்து அனுப்பச் சொல்லியிருக்கிறேன். தூங்கினால் அதெல்லாம் வீணாக, பசியும் அசதியுமாக சாயந்திரமே ஆகிவிடும்.. கள்ளை பகலுக்கு ஒரு மணி நேரம் தள்ளி எடுத்துவரச் சொல்”.

”மன்னிக்க வேணும் முசியே கவர்னதோர், கவர்னர் அவர்களே, உங்களைப் பார்க்க ஒரு துபாஷி வந்திருக்கிறார். தமிழ்க்காரர். சோமாசி ராயரென்றோ ராமோசி ராயர் என்றோ பெயர் சொன்னார்”.

தியூப்ளே நெஞ்சுக்குக் குறுக்கே பூணூல் தரிப்பது போல் அபிநயம் செய்து காட்டி, வந்தவன் பிராமணனா என்று விசாரித்தார். நூல் எதுவும் கண்ணில் படவில்லை என்றான் எய்ட் தெ காம்ப் அந்த்வான் மொர்சேன்.

”நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று வந்த இடத்திலும் தொல்லைதானா? நாளைக்கு.. நாளைக்கு வேண்டாம், ஞாயிற்றுக்கிழமை. கோவிலுக்குப் போக, பூசை வைக்க நேரம் போய்விடும். பனிரெண்டு மணிக்கு மறுபடி முரட்டாண்டி.. நாசம்.. தூப்ளெக்ஸ் பேட்டைக்கு வருவேன் மிச்சமீதி ஓய்வெடுக்க. அவனை திங்கள்கிழமை என் பீரோவுக்கு (ஆபீசுக்கு) வரச் சொல்லு”.

கவர்னர் துரையவர்கள் சலித்துக்கொண்டார். முரட்டாண்டி நாக்கை விட்டு இறங்க மாட்டேனென்கிறது.

”மன்னிக்கணும் முசியே,  இந்த துபாஷ்  முசியே ரங்கப்பிள்ளே அனுப்பி வச்சவராம். அவரை   முரட்டாண்டி சாவடியில்   வந்து பார்க்கச் சொன்னீர்களாம் ப்ரபோ”.

திரும்பவும் முரட்டாண்டி. எய்ட் தெ காம்ப் அனர்த்தம் விளைவித்ததை உணர்ந்து உடனே பேச்சை நிறுத்தினான்.

இப்படி தன் சொந்த நாக்கே, பக்கத்தில் இருந்து குற்றேவல் செய்கிறவர்களே, சொன்ன பிரகாரம் கேட்காதபோது ஊர்க்காரன் காதை எங்ஙனம் அறுப்பது? தியூப்ளே துரை முகம் சுளித்துக் கொண்டார்,

அவர் இன்னொரு இளநீரை எடுத்தபடி, அந்த மனுஷரை வரச்சொல்லு என்று சொல்லி, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். துணிக் கூடாரத்து நீலத் துணி படுதாவாகவும் சுவராகவும் கூரையாகவும் காற்றில் சலசலத்தது.

”உம் பெயர் என்ன?”

கவர்னர் தியூப்ளே துரை வடக்கு பிரான்சில் லாந்த்ரொசி பிரதேசத்தில் பேசப்படும் பிரெஞ்சு மொழி உச்சரிப்பில் ராமோஜியைக் கேட்டார்.

”ராமோஜி பத்துஜி ராவ்”.

ரொம்ப பெரிசா இருக்கே என்றார் ழோசப் பிரான்ஸ்வா தியூப்ளே.

தன்னை ராமோஜி அல்லது ராமோ என்று கூப்பிடலாம் என்று அடக்கத்தோடு பதில் சொன்னபோது சர்வ ஜாக்கிரதையாக அவனும் வடக்கு பிரான்ஸ் உச்சரிப்புக்கு மாறினான். துரை முகம் துளி சந்தோஷத்தைக் காட்டியது.

”குடும்பம் எப்படி? கல்யாணம் ஆனவரா நீர்?”

ஆம் என்று பணிவோடு சொன்னான் ராமோஜி.

“பெண்டாட்டியையும் ரெட்டை பிறவிகளான எட்டு வயது மகள்கள் இருவரையும் ஆறு வருஷம்  முன் படகுப் பிரயாணத்தின்போது பறி கொடுத்தவன் நான். தனியனாக என் வாழ்க்கை போகிறது பிரபோ”.

தியூப்ளே தலையைக் குலுக்கியபடி துக்கம் அபிநயித்தார். தேவனுக்கு மகிமை என்று அவருடைய கரங்கள் யந்திரமாக விரிந்து வானத்தைப் பார்த்து நொடியில் தாழ்ந்தன.

”வெனீஸ் நகர் காணக் கூட்டிப் போயிருந்தீரோ?”

“இல்லை மகாப்ரபு, சந்திரநாகூர் காட்டுவதற்காகக் கூட்டிப் போனபோது   படகு மூழ்கி ..”

ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான். துரை அவனை நோக்கினார்.

”நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?”

துரை விசாரித்தார். இன்னொரு இளநீர் வெட்டப்பட்டு அவர் வாய்க்குள் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. மரியாதைக்குக் கூட இரும் என்றோ இளநீர் குடிக்கிறீரோ என்றோ விசாரிக்கவில்லை துரை.

அது கிடக்குது. வந்தது வந்தாய், நான் கேட்கக் கேட்கப் பதில் சொல்லிக்கொண்டு என் காலைப் பிடித்து விடு என்று சொல்லாமல் இருந்தாரே, அதுவரை விசேஷம்தான்.

“புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து அந்நிய நாடுகளில் விற்கிறவர்களில் நானும் ஒருவன், ஐயா”

”பிரஞ்சு எங்கே பயின்றீர்?

”நான் காரைக்கால் காரன். காரைக்காலை துமா துரை மராத்தி மன்னரிடம் இருந்து விலைக்கு வாங்கியபோது அங்கே ப்ரஞ்சு கலாசாலையும் நாகரிகமும் பரவி வந்தது. நான் அப்படி ஒரு கலாசாலையில் தான் பிரஞ்சு படித்தேன்” என்றான் ராமோஜி.

”ராமோசி ராயர் … ராமோசி இது போதும் உம்மைக் கூப்பிட”.

உத்தரவு முசியே என்று வணங்கினான் ராமோஜி. அப்போதிருந்து அவன் ராமோசி ராயன் ஆனான்.

”ரங்கப்பிள்ளை வரும்வரை அவர் வேலையில் கொஞ்சம் பங்கு போட்டுக்கொள்ளும். அவரால் செய்ய முடியாமல் போகிறவற்றை அனுமதி பெற்று   நீர் எடுத்துப் பாரும்”.

”யார் அனுமதி, கடவுளே?”

”ரங்கப்பிள்ளை தான், வேறு யார்? நீர் முதல் நாள் என்பதால் என்னோடு இவ்வளவு நேரம் நின்று பேச முடிகிறது.  சரி வேலைக்கு வந்தீர். முதல் வேலை இது… இன்னும் ஒரு மாதத்தில் நாட்டியம், பாட்டு, பேச்சு மூலமாக தியூப்ளே பேட்டை பெயரை பிரபலமாக்கணும். நீர் என்ன செய்வீரோ தெரியாது. ஊர்ப் பெயரை முரட்டாண்டி என்று யாராவது சொன்னால் காது அறுபடும் என்பதையும் புரிய வைக்கணும். இன்னும் முப்பது நாளில் உம்மைக் கேட்பேன். இதெல்லாம் நடக்க முடியாமல் போனால் உம் காதையும் அறுத்து பட்டணத்துக்கு வெளியே துரத்தி விடுவேன்”.

கிராதக துரை.

”உமக்கு சம்பளம் எல்லாம் முசியே  பிள்ளை மூலம் தெரியப்படுத்தப்படும்”

”உத்தரவு முசியே துரையவர்களே”

வேலை பார்த்துக் கிட்டும் பணம் ராமோஜிக்குத் தேவையில்லை.   ஆஸ்தி உண்டு. அது போதும். ஆனால் வேலையில் வரும் பெயர் அவனுக்கு வேண்டியுள்ளது. ஒரே ஒரு நாள் பிரஞ்சு ராஜாங்க உத்தியோகம் என்றாலும்.

”கேட்க விட்டுப் போச்சே. உமக்கு எப்படி முசியே ரங்கப்புள்ளே பரிச்சயம்? அவர் மராத்தி ராயர் இல்லையே. தமிழராச்சுதே”

”ஐயா, அவர் என் காலம் செய்த தந்தையாருடைய நல்ல சிநேகிதர். இரண்டு பேரும் ஆரம்ப நாட்களில் கூட்டு வியாபாரமாக புடவைக் கிடங்கு வைத்து சாயமேற்றி விற்பனைக்கு வெளிதேசம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்”.

”நல்லது. நீர் சரியாக காரியம் செய்யாவிட்டால் முசியே ரங்கப்புள்ளே மூலம் தண்டனை தருவோம். போய் நாளைக்கு வாரும்”.

அப்படி ராமோஜி அனுப்பிவித்துக்கொண்டு போனான். போகும் போது மனசு தியூப்ளே சொன்னதை அசை போட்டது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் துரை? நாட்டியத்தையும் சங்கீதத்தையும் ராமோஜியே ஒரு மாதத்தில் கற்றுக்கொண்டு பாடி ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? இது ஆடிப் பாடினதோடு முடிவடைகிற சமாச்சாரம் இல்லையே. சாகித்தியம் வேறே வேண்டி இருக்கிறது. அதைக் கேட்டு, ஆட்டம் பார்த்து ஜனங்கள் முரட்டாண்டிச் சாவடி என்ற பெயரையே மறந்துவிட வேண்டும். கோஷ்டியாக, அல்லது தனித்து, தியூப்ளே பேட்டை என்று ராகமாலிகையில் பாட வேண்டும். தில்லானா ஆட வேண்டும். எல்லாம் ஒரே மாதத்தில் நடந்து விடணுமாம்.

இதை அப்படியே  ராமோஜியின் குருநாதர் ஆனந்தரங்கம்பிள்ளை அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருப்பதால் அவர் வீட்டுக்குப் போனான் ராமோஜி. உப்பரிகையில் கடற்காற்று ஏற்று மெல்ல உலவிக் கொண்டிருந்தார் அவர். ரொம்பவும் தளர்ந்திருந்தார். அவர் நடைக்குப் பாந்தமாக பின்னால் வெற்றிலைப் படிக்கத்தோடு ஒரு சிப்பந்தி போய்க் கொண்டிருந்தான்.

பிள்ளைவாள் உடம்பு என்ன வந்தாலும், ஒரு வெற்றிலையும், கொஞ்சம் பாக்கும் மென்றால் மெச்சப்பட்ட நிலைமை அடைந்து விடுவார். இரண்டு வாரமாக வெற்றிலையைக் கண்ணில் காணாமல் ஆக்கி விட்டான் வைத்தியன். அது அவரை சாய்ந்து விட்டது.

ராமோஜி வணங்கியபடி நின்றான். உள்ளே வாரும் என்று தலையை அசைத்தார் பிள்ளைவாள்.

மாடிக்குப் போவதில் ராமோஜிக்கு மனதில் ஒரு இடைஞ்சல் இருந்தது. பிள்ளைவாள் என்னதான் தனவந்தரும், பெரிய உத்தியோகஸ்தரும், அப்பாவின் அத்யந்த சிநேகிதரும் ஆனாலும், வாரக் கணக்கில் குளிக்காத மனுஷர். பக்கத்தில் போனால் வாடை அடிக்கத்தான் செய்யும்.

அதுவும், சுரமும் வேறே என்னவோ ரோகமுமாக இருக்கக் கூடியவர் என்பதால், பக்கத்தில் போனாலோ அல்லது அவருக்கு பின்னால் நின்றாலோ தொற்றுநோயாக அது நம்மையும் பீடிக்கக் கூடும். அப்புறம் ராமோஜி இடத்துக்கு துபாஷியை எங்கே தேட? காது அறுக்க கம்பியோடு தியூப்ளே துரை வேறே பின்னால் நிற்கிறார்.

அதைச் சொல்லணுமே ரங்கப்பிள்ளைவாளிடம். மேலே போகாமல் கீழேயே நின்று வர்த்தமானம் எல்லாம் சொன்னால் தெருவில் போகிறவனும், வீட்டுக்குள் குற்றேவல் செய்கிறவளுமெல்லாம் இதைக் காதில் வாங்கி வேறெங்காவது யாரோடாவது பகிர்ந்து கொள்ளக் கூடும்.

”நான் மேலே வரலாமா?” என்று பிள்ளைவாளிடம் பணிவோடு கேட்டான் ராமோஜி.

”வேணாமய்யா, நானே கீழே வருகிறேன்.. அங்கே என் குரிச்சியில் இருந்தால் தான் ராஜாங்க விஷயம் வகையறா நினைக்கவும் எழுதவும் தோதுப்படும்”.

ராமோஜி வாசலில் போட்டிருந்த பிரம்மாண்டமான நாற்காலிக்கு முன்னால் நிலைக் கண்ணாடியை ஒட்டி ஓரமாக நின்றான். பிள்ளை கீழே வர பத்து நிமிஷமானது. தளர்ந்த உடம்பு ஒத்துழைக்காவிட்டாலும் அவரே படி இறங்கினார்.  அலமுசு பண்ணிக் கொள்கிறீரா என்று ராமோஜியைக் கேட்டார். அவர் காப்பி குடிக்கிறாயா என்று விசாரித்தால் நிறைய நாட்குறிப்பாக எழுத வேண்டி இருக்கும். சில சமயம் பிரதி எடுக்கவும் நேரும்.

”வயணங்கள் சொல்லும், முரட்டாண்டி சாவடிக்குப் போயிருந்தீராமே”.

பிள்ளைவாள் விசாரித்தார். அவர் முரட்டாண்டி சாவடி என்று சொல்ல, ராமோஜி சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

எதற்கு சிரிக்கிறீர் என்று தெரியும் என்றபடி அவரும் அடக்க முடியாமல் சிரித்தார்.

துரைத்தனத்து கபுறு எல்லாம் பிள்ளைவாளுக்குக் கூறினான் ராமோசி ராயன் என்ற ராமோஜி.

”இதென்ன ஆரியக்கூத்து? பெயரை இஷ்டத்துக்கு மாற்றி வைப்பார்களாம். அதை ஜாக்கிரதையாக அதே படிக்கு புதுப் பெயரில் சொல்லாவிட்டால் கசையடியாம், அபராதமாம், காதறுப்பாம். ஒவ்வொருத்தர் பின்னாலேயும் கவர்னர் மாளிகை, காதறுக்கக் கத்தியோடு சேவகர்களை அனுப்புமா?”

”பெரியவர்கள் மன்னிக்கணும். இந்த பெயர் விஷயத்தில் துரை உறுதியாக இருக்கறபடியால் தான், நானும் கொஞ்ச நாள் உங்கள் பெயரைச் சொல்லி தற்காலிகமாக சர்க்கார் உத்தியோகஸ்தனாக இருக்கேனே” என்றான் ராமோஜி.

அதுவும் மெத்தச் சரிதான் என்றவர் போன வாரம் விட்ட இடத்திலிருந்து நாள் குறிப்பு  எழுதலாமா என்று கேட்டார். ஒரு வாரம் எழுதலியே என்றான் ராமோஜி.

“அது ரொம்ப இல்லை, ராஜாங்கம் இல்லாத சம்பவங்கள் தான் எழுத வேண்டியது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்” என்றார் அவர்.

இந்த வாரத்தில் ராஜாங்கமாக இல்லாமல் என்னவெல்லாம் நடந்தது இந்த நாள் குறிப்பில் எழுதி வைக்க என்று புரியாமல் ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்த்தான் ராமோஜி.

”கள்ளுக் குடித்து விட்டு கும்பினி ஒஃபிசியே (ஆஃபீசர்) ஒருத்தன் நல்ல மீனாக பத்திருபது வாங்கி வா என்று சிப்பந்தியை சந்தைக்கு அனுப்பிச்சு வைத்து, அவன் வாங்கி வந்த மீன் நல்லதாக இல்லையென்று அடித்து உதைத்த விஷயம் அய்யா” என்றார் பிள்ளைவாள்.

இதென்ன கூத்து என்று  முக வார்த்தையாக அவர் சொல்வதை எதிர்பார்த்திருந்தான் ராமோஜி. இது அவனுக்குக் கதை சொல்ல மட்டும். எழுத வேறே மாதிரி தமிழில் நீளநீளமாக வாக்கியங்கள் அமைத்து அவர் சொல்வதை அதே வேகத்தில் எழுத வேண்டியிருக்கும். எழுதினதைப் படிக்கச் சொல்லி அங்கங்கே அவர் திருத்தம் இருந்தால் சொல்வதால், எழுதிய பிரதி ஏறக்குறையப் பிழை இன்றி அமைந்து போகும்.

”அப்புறம் இந்த லச்சை கெட்ட சோல்தாத்து விவகாரம். கேட்டீரோ”, பிள்ளை உற்சாகமாகத் தொடர்ந்தார்.

”புலோ தோன் என்றோ என்னமோ பெயர் விளங்கான். பரீசில்  இருந்து வந்தவனில்லை. காப்பிரி. தீவில் இருந்து வந்தவன். அவன் என்ன செய்தானா, நேற்று சாயங்காலம் வாணரப்பேட்டை தோப்பில் தென்னங்கள் மாந்தி அதே படிக்கு   தியாகு முதலியார் தெருவில் திறந்து கிடந்த ஒரு வீட்டில் நுழைந்திருக்கிறான். பதினைந்து வயசு சொல்லத்தக்க ஒரு பெண்ணுக்கு அவளுக்கு தாயார் வயதில் இன்னொரு ஸ்திரி தலைமயிரில் பேன் பார்த்துக் கொண்டிருக்க இவன் குடிபோதையிலே உடுப்பை களைந்து விட்டு, சாடி விழுந்து அந்தப் பெண்பிள்ளைகள் ரெண்டு பேரையும் முத்தமிட்டு சந்தோஷமாக இருப்போம். ரெண்டு பேரும் வாங்களடி என்று ஆரம்பித்து இன்னும் அசங்கியமானதாக வார்த்தை எடுத்து விட அவர்கள் கூகூ வென்று கூக்குரலிட்டு வாசலுக்கு ஓடி வந்தார்களாம். வந்து, திரும்ப அங்கே கதவை சாத்தி, வெளியில் இருந்து பூட்டும் இட்டார்கள். பக்கத்து வீடுகளில் இருந்து ஆண்கள் திரண்டு வந்து காப்பிரி சொலுதாதுவை (சிப்பாய்) அடித்து, இரண்டு பல்லையும் உடைத்து, கிரிமாசி பண்டிதன் அதிகாரத்தில் இருக்கும் சாவடியில் கொண்டு போய்த் தள்ளி விட்டார்களாம். கும்பினி சொலுதாதுக்கு இனியும் இங்கே காவல் இருக்க சந்தர்ப்பம் தராது அடுத்த கப்பலில் கோலனிக்கு திரும்ப அனுப்பும் முன்பு அவனுக்கு பத்து சாட்டையடியாவது தரணும் என்று தெருக்கார மனுஷர்கள் என்னிடம் முறையிட வந்து, நான் உடம்பு சரியில்லாமல் போனதால் வீட்டில் சொல்லிப் போனார்கள். துரைக்கு சமாசாரம் தெரியுமோ என்னமோ. இதை மட்டும் இன்று எழுதினால் போதும்”.

அவர் நிறுத்தாமல் பேசியதால் களைப்படைந்து காணப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன