பெரு நாவல் ‘மிளகு’ – The battle continues, albeit at a low key, as casualties mount

An excerpt from my forthcoming novel MILAGU

காவல் படையில் கூடுதல் சேதம் ஏற்பட, எதிரணியில் பில்கி மாநில அரசர் திம்மராஜு அனுப்பி வைத்த முதல் நூறு பேர் சேர்ந்து போரணியைப் பலப்படுத்தினார்கள்.  அனுபவம் வாய்ந்த அந்த வீரர்கள் நேமிநாதனை மகிழ்ச்சியடைய வைத்தார்கள்.

பிற்பகல்   போரில் முதல் தடவையாக குதிரை ஏறிவந்த ஓர் அரசு காவல்படை வீரரை நோக்கி குறுவாளை வீசி எறிந்தான் எதிரணி வீரன் ஒருவன். அது காவல் படை வீரர் நெஞ்சில் ஆழப்பதிய குதிரையில் இருந்து சரிந்து விழுந்து அவர் உடனடியாக மரணமடைந்தார்.

அந்த முதல் உயிரிழப்பு யுத்தபூமியில் தொடர்ந்த மவுனத்தை விதைத்திருந்தது. தற்காலிகமாக போர் நடவடிக்கைகளை தன்னிச்சையாக இருதரப்பும் நிறுத்தி வைத்து மௌனமாக நிற்க, இறந்த காவலரின் உடல் சாரட் வண்டியில் கோட்டைக்கு உள்ளே எடுத்துப் போகப்பட பீரங்கி மூன்று முறை முழங்க, விட்டுவிட்டு முரசு அதிர்ந்தது.

இரு தரப்பு முரசுகளும் அப்படி துக்கம் கொண்டாட, அதற்கு அப்புறம் ஒரு மணி நேரம் பேருக்காக யுத்தம் தொடர்ந்தது.

நாள் முடிவில் இருதரப்பிலும் தலா முப்பது பேருக்குக் காயம் ஏற்பட்டது. அரசு அணியின் இரவு ஆய்வுக் கூட்டத்தில் சிறு படையணியாக  டய்யூவில் இருந்து போர்த்துகீஸ் ராணுவம் அனுப்பப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

நாளை மறுநாள் ஷெராவதி நதியில் படகுகள் செலுத்தி அவர்கள் வரும்போது வெற்றி சென்னபைரதேவிக்கு என்று முன்கூட்டியே ஊகிக்கப்பட்டது.

இது தவிர தயார்நிலை இரண்டாம் கட்ட படையில் நூறு பேர் போரிடத் தயாராக வந்திருப்பதாகவும், நாளை அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் நஞ்சுண்டய்யா பிரதானி மறுபடியும் பலத்த கரகோஷத்துக்கு இடையே அறிவித்தார்.

போர் தொடங்கி மிர்ஜான் கோட்டைப் பகுதியில் யுத்தம் நடப்பதால், ஹொன்னாவர் நகருக்கு வெளியில் இருந்து தினம் வரும் காய்கறி, இறைச்சி, மீன், பழங்கள், பால் இவை வந்து சேர முடியாமல் நகரில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒற்றர் படை அறிக்கை  கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

ஹொன்னாவர் நகர மக்கள், முக்கியமாக முதியவர்கள் இது குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக அந்த அறிக்கை சொல்லியது. போர் எதுக்கு என்று நகரமே கேட்பதாக இவர்கள் மிகைப்படுத்திச் சொன்னாலும், தட்டுப்பாடு உண்மைதான் என்றும் அறிக்கை சொல்லியது.

ஜெருஸூப்பாவில் கதக் நாட்டிய நிகழ்ச்சி நிறைவுற்று அடுத்து ஹென்னோவாரில் அடுத்த கச்சேரிக்காக அங்கே வந்துகொண்டிருந்த மகத்தான கதக் நாட்டியக்காரி அமீராஜான், நகருக்குள் நுழைய முடியாமல் முற்றுகையால் திரும்பிப் போனதற்கு நகரில் பெரும்பான்மையான ஆண்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர் என்று அறிக்கை மேலும் கூறியது. யாருடைய யுத்தம் இது என்று அவர்கள் உரக்கக் கேட்பதாகவும் அறிக்கை சொல்லியது.

சென்னபைரதேவி விஷம் கலந்த உணவை உண்டு சாகக் கிடப்பதாக ஊரில் பரவிய வதந்தி கூறுவதை பலரும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. சென்னா மகாராணி தன் ஆயுளை முடித்துக்கொள்ள தானே அதை உண்டதாகவும், நேமிநாதன் மனைவியான ரஞ்சனா தேவியால் மறைவாக உணவளிக்கப்பட்டதாகவும் இரண்டு மாதிரி வதந்திகள் பரவியதை அறிக்கை அறிவிக்கிறது.

யுத்த காலத்தில் தினம் காலையில் நாட்டு மக்களை சந்தித்து வதந்திகள் பரவாமல் அரசு தரப்பு செய்தியை தானே தர சென்னா மகாராணி முன்வந்ததை அவை உடனடியாக பாதுகாப்பு காரணம் காட்டி தள்ளுபடி செய்தது. நஞ்சுண்டய்யா அந்தக் கடமையை நிறைவேற்றுவார்.

ஜெர்ஸூப்பா நகரில் வசிப்பிடங்களில் இருந்து தென் கன்னட, ஆந்திர, தமிழ், மலையாள பிரதேசங்களுக்கு மக்கள் குடி பெயர்வது தொடங்கி விட்டதாக அறிக்கை கூறுகிறது.

எனினும் மிர்ஜான் கோட்டைக்கு மிக அருகே அமைந்த ஹொன்னாவரில் அப்படியான நடவடிக்கை ஏதும் தட்டுப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

கோகர்ணம், பட்கல் பகுதிகளில் பதட்டமான வாழ்க்கை தொடர்கிறதாகவும் தெரிவிக்கிறது.  ஆட்ட பாட்டங்களும் கோவில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டிருக்க, அரசு நடவடிக்கை பற்றி செய்தி பகிர்வது மிக அதிகமாகியுள்ளதாகத் தெரியப்படுத்துகிற அறிக்கை நாளை தொடர்வதாக குறித்து முடிவடைகிறது.

pic   medieval European battle

ack explorethearchive.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன