பெரு நாவல் ‘மிளகு’ – And quiet flows the Sharawathi

An excerpt from my forthcoming novel MILAGU

காலை ஜெருஸோப்பா செல்லும் வழியில் மிர்ஜான் கோட்டைக்குப் போய் ராணியை நலம் விசாரித்தார் நஞ்சுண்டய்யா.

நஞ்சுண்டரே வாரும், உம்மைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யுத்தம் வந்தாலும் வராவிட்டாலும் நூறு ஆயுசு உமக்கு என்று முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு உபசார வார்த்தை சொன்னாள் மிளகு ராணி.

ஏதாவது ராத்திரியோடு ராத்திரியாக நல்ல திருப்பம் உண்டாயிருக்குமோ என்று அறிய ஆவலம்மா என்று நிஜ ஆர்வத்தோடு கேட்டார் நஞ்சுண்டய்யா.

அப்படி இருந்தால் நானும் மகிழ்வேன் என்றாள் சென்னா.

நான் உம்மை நினைத்துக்கொண்டது ஜெருஸூப்பா போகும்போது என் சாரட்டிலேயே நீங்களும் வந்தால் பயண நேரத்தில் திட்டங்களை விவாதிக்கலாமே என்றுதான். செய்யலாமே என்றார் நஞ்சுண்டர்.

அவருக்கு ஒரு கெட்ட அல்லது சுபாவமான நல்ல பழக்கம் பத்து அடி சாரட்டில் நகர்ந்தால்கூட உறங்க ஆரம்பித்து விடுவார்.  போய்ச் சேரவேண்டிய இடத்தில் இறங்கும்போது தெளிவாக, சுறுசுறுப்பாக இருப்பார்.

ராணியம்மாவோடு போனால் உறக்கத்தை எப்படி விரட்டுவது? அதோடு போர்க்காலத் திட்டங்களை வேறு பேச வேண்டும் என்கிறாள் மகாராணி.

ஈசன் பாடு ராணி பாடு, சரி என்று சொல்லியாகத்தானே வேண்டும்? சரி என்றார் நஞ்சுண்டய்யா பிரதானி. கிளம்பி நேரே போகாமல் கோட்டைக்குள் எட்டிப் பார்க்க அப்படி என்ன இருக்கிறது என்று தன்மேலேயே கொஞ்சம் கோபமும் ஏற்பட்டது.

நேற்று ராத்திரி சாப்பிடும்போது மனைவி ஹொன்னம்மாவிடம் பிரஸ்தாபித்திருந்தால் வேண்டாம் என்று காரண காரியம் கூறி தடுத்தாட்கொண்டிருப்பாள். அப்படி இல்லை என்றிருக்கிறது, என்ன செய்ய?

நஞ்சுண்டர் கோட்டை உத்தியோகஸ்தன் மூலமாக ரதசாரதியை திரும்பிப்போய் கோட்டைக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடி வரும்படி சொல்லி அனுப்பினார்.

நம்முடைய ஆட்கள் எத்தனை பேர் என்று சாரட்டில் போகும்போது திடுதிப்பென்று நஞ்சுண்டய்யாவை வினவினாள் சென்னா மகாராணி.

மூவாயிரத்து இருநூற்று முப்பத்தாறு பேர் என்று நினைவில் இருந்து சொன்னார் நஞ்சுண்டய்யா.

என்ன சொல்கிறீர் நஞ்சுண்டரே, நிஜமாகவா? இத்தனை பேர் எங்கே இருக்கிறார்கள்? கோட்டையில் மூவாயிரம் பேர் இருந்தால் நாம் எல்லாரும் வெளியே போக வேண்டி வருமே. சென்னா சிரித்தாள்.

இவர்கள் இங்கேதான் வட கன்னட பிர்தேச கிராமங்களில் வசிக்கிறவர்கள். ஊதியம் கிடையாது. தயார் நிலைப் பணமாக மாதம் இருபது வராகன் பெறுகிறார்கள். கூப்பிட்டால் யுத்தத்துக்கு வந்து விடுவார்கள்.

கூப்பிட்டீர்களா?

கூப்பிட்டு விட்டோம். நூற்று பதினெட்டு பேர் வரத் தயாராக இருக்கிறார்கள். மீதி? எல்லோரும் ஒன்று பெஜவாடா, பெனுகொண்டா போயிருக்கிறார்கள் அல்லது மதுரை, திருச்சிராப்பள்ளியில் காவல் பணிக்குப் போயிருக்கிறார்கள். மாமியாருக்கு வளைகாப்பு, மாப்பிள்ளைக்கு காது குத்து இப்படி காரணம் சொல்லி சிலர் தில்லி, அவௌத் என்ரு போயிருக்கிறார்கள்.

எப்படி இவர்களைப் படை திரட்டப் போகிறீர்கள்? அடுத்த மாதம் பிறந்ததும் தயார்நிலைப் பணம் வாங்க கருவூலத்துக்கு வருவார்கள். அப்போது பிடித்துக் கோணிச் சாக்கில் கட்டிப் போட்டு விடுவீர்களா? சென்னா சிரித்தாள்.

நாளை பக்கத்து கிராமங்களில் தண்டோரா போட்டு தயார்நிலைப் பணம் பெறுகிறவர்கள் எல்லோரும் நாளை மறுநாள் கட்டாயம் கோட்டைக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்படிச் செய்யலாமா?

நஞ்சுண்டய்யா பிரதானி இரண்டாயிரத்து சொச்சம் பேரை எப்படி எங்கே அடைத்து வைத்து சாப்பாடு கொடுப்பது என்று நினைக்கையிலே விதிர்விதிர்த்தார்.

தண்டோரா போட்டு அரச உத்தரவுப்படி இவர்கள் வந்து சேர்ந்தாலும் அதே பிரச்சனை தான் இருக்கும்.

இருக்காது என்று அவர் மனதுக்குள் இருந்து ஹொன்னம்மா சொன்னாள் – கோட்டை அகழி, எதிரே பெரிய வெற்றிடம் இங்கெல்லாம் அவர்களை இருக்க வைத்து கோட்டை போஜனசாலையில் அரிசிச் சோறும் புளிக் குழம்பும் வாழைக்காய் கறியும் உணவு கொடுத்து சண்டைக்குப் போகத் தயாராக்கலாமே. அந்த முக்கியமான இடத்தை எதிரணிப் படை சூழ்ந்து நெருக்க திட்டமிட்டாலும் அதை இல்லாதாக்கி விடலாம்.

இதை நிச்சயம் சென்னபைரதேவி ராணியிடம் சொல்ல வேண்டும்.

நிமிர்ந்து ராணியைப் பார்த்தார் அவள் உறங்கிவிட்டிருந்தாள்.

ஜெருஸோப்பா நெருங்க நெருங்க நஞ்சுண்டருக்குப் படபடப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.  இரண்டாயிரம் பேரை ஒன்றரை நாளில் என்ன பயிற்சி கொடுத்து கையில் வாளைக் கொடுத்து யுத்தம் செய்ய அனுப்புவது?

இவர்களுக்கு ஆடி ஓடி சாடும்போது உடலில் தடை செய்யாமல் எப்படி வஸ்திரம் அணியத் தருவது?

யுத்தத்தில் ஜெயித்தால் வேறே மாதிரி புத்தி போகாமல், அதாவது நம் பக்கத்தில் இருந்து நமக்கு எதிராக போர் செய்து குழப்பம் உண்டாக்கும் சிந்தை ஏற்படாது ஜெயித்ததற்குப் பரிசு தந்து ஊக்கப்படுத்துவது, தோற்று ஓடி வந்தால் அந்தப் பெரும்படையை அல்லது நூறும் இருநூறுமாக திரும்பி வந்தவர்களைக் கவனிப்பது, மருத்துவச் செலவு.

நஞ்சுண்டருக்குத் தலை சுற்றியது. பத்து கல்யாணம் ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தி விடலாம். ஒரு சிறிய யுத்தம் நடத்துவது பெரும்பாடு.

Pic Sharavathi river

Ack wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன