பெரு நாவல் ‘மிளகு’ – That’s how the onion made a surreptitious entry into the kitchen of Nanjundan Prathani

An excerpt from my forthcoming novel

எழுபத்தைந்து                    1606 ஹொன்னாவர்

கடந்த மார்க்கஷீர, புஷ்ய மாதங்களில் – தமிழ் மார்கழி, தை மாதங்கள் – தட்சிண கன்னடத்தில் மங்களாபுரி என்ற மங்களூரு, மைசூரு, , மலையாளக் கரையான ஆலப்புழை, திருவனந்தபுரம், தமிழ் பிரதேசங்களான மதுரை, தஞ்சாவூர், ஆந்திரத்தில் பெஜவாடா, கர்னூல், அனந்தபூர், உத்தர ஹிந்துஸ்தானமான அவத் என்ற லக்னௌ முதலான நகரங்களில் இருந்து ஜெருஸுப்ரா நகருக்கு வந்து போன நாட்டியக்காரிகளின் எண்ணிக்கை முப்பத்தேழு. இவர்கள் சதுர், மோகினி ஆட்டம், குச்சிப்புடி,கதக் என்று பலவித நாட்டிய வகைகளில் தேர்ந்தவர்கள்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சி வீதம் ஜெருஸுப்பாவில் இப்படியான பொழுதுபோக்கு  நிகழ்வுகள் நடந்திருப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

ஜெருஸூப்பா ஒற்றர் துறை அறிக்கை இப்படித் தெரிவித்தது.

பிரதானி நஞ்சுண்டய்யா தினமும் ராச்சாப்பாடு நேரத்தில் அன்றைக்கு நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், கேட்டது, பார்த்தது என்று அவருடைய அறுபத்தேழு வயது மனைவி ஹொன்னம்மாவிடம் சொல்லுவது வழக்கம்.

முழுவதும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவருக்கே சில விஷயங்கள் நினைவு இருக்காது. பார்த்ததும் கேட்டதும் முழுசாக இருக்காது. எழுபத்திரெண்டு வயசாகி விட்டதே. இத்தனை நாள் காலம் தள்ளியதே முர்தேஷ்வர் சிவபிரான் கிருபையால்.  இருப்பதற்கு நொட்டைச்சொல் சொன்னால் சிவன் அதையும் இல்லாமல் செய்து விடுவான். எதற்கு வம்பு.

என்றாலும் அந்தப் பழுது, விஷய கனம் எல்லாம் கடந்து சொல்ல வந்ததை ஹொன்னம்மாவிடம் சொல்வது எதற்காக என்றால் காரணம் இருக்கிறது. அவருக்கோ அவரோடு ராஜ்ய சபையில் அந்த விஷயம் குறித்து விவாதம் செய்த மற்ற பிரதானிகள், உப ப்ரதானிகளுக்கோ, நிறைய மரியாதையோடு சொல்கிறதாக, மகாராணி சென்னபைரதேவிக்குமோ பிடிபடாத ஏதாவது ஒரு முக்கியமான கோணம் ஹொன்னம்மா வாயிலிருந்து கேள்வியாக அல்லது ஒரு வாக்கியமாக வந்து விழும்போது நஞ்சுண்டய்யா அசந்துதான் போவார்.

இப்படி நிகழ்ந்தால் அடுத்த நாள் காலையில் அரசவைக்கு சற்று சீக்கிரமாகவே போய், மற்ற விஷயங்கள் பற்றிப் பேச்சு எழும் முன், பணிவோடும் பிரியத்தோடும் நேற்று நாம் விவாதித்த இந்த விஷயம் பற்றி இன்னும் ஒரு பார்வையைத் தவற விட்டுவிட்டோமோ என்று ராத்திரி உறங்கப் போகும்போது நினைவு வந்தது. காலையில் எழுந்து மறக்கக் கூடாதே என்று மேல்துண்டில் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டு காலையில் எழுந்து முடிச்சு மறந்து போக, அதை எடுத்துக் கொண்டு நடக்க, எதற்கு முடிந்து வைத்தேன் என்று அடுத்த நினைவு படுத்தலுக்கு சிந்தனையை உள்ளிட்டு, நான் சொல்ல வந்தது என்ன என்றால் –

ராணி சென்னபைராதேவி முதல் அவையில் கடைக்குட்டி அதிகாரி வரை அவர் சொல்வதை சிலாகிப்பது வழக்கம். எல்லாப் புகழையும் அப்போது நஞ்சுண்டார் வழித்து எடுத்துக் கொள்வதும் வழக்கம் என்றாலும் ஹொன்னம்மா அது சுபாவமானது தானே என்று எடுத்துக் கொண்டு விடுவதால் நாற்பது வருட தாம்பத்தியம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

இன்றைக்கு ராத்திரி ஊத்தப்பம், சப்பாத்தி, ஹுளி உப்பிட்டுவோடு நாட்டியக்காரிகளின் ஜெர்ஸூப்பா விஜயம் பற்றிய அறிக்கை சாப்பிடும்போது பகிர்ந்து கொள்ள எடுத்து வைக்கப்பட்டது பிரதானியால்.

பக்க வாத்யம் என்ன எல்லாம் பண்ணியிருக்கே என்று ஹொன்னம்மாவை வழக்கம்போல் விசாரித்தார் நஞ்சுண்டர். அவள் சமையல் செய்யக் கரண்டியைக் கையில் எடுத்து இரண்டு மகாமகம் ஆச்சு என்பதும் சமையல் வேலைக்கு நிற்கிற ஆணும் பெண்ணுமான, கூடவே புருஷன், பெண்டாட்டியான தமிழ் பிராமண ஜதை அதை எல்லாம் வேளை தவறாமல் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதும் நஞ்சுண்டய்யாவுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் சாப்பாட்டு மேஜையில் ஹொன்னம்மாவைத்தான் அவர் எதற்கும் கூப்பிடுவார்.

தமிழர்கள் கைவேலை என்பதால், சக்கரை பொங்கல், பால் பணியாரம், அக்கார வடிசில் என்று தமிழ்ப் பலகாரம் அடிக்கடி தலைகாட்டுவது நஞ்சுண்டய்யா, ஹொன்னம்மா தம்பதிக்குப் பிடித்திருந்தது. இன்றைக்கு அப்படியான சிறப்பு தமிழ் ஆகாரம் இல்லைதான் என்று தெரியப்படுத்தப்பட நஞ்சுண்டாருக்குச் சிறிய ஏமாற்றம்.

என்ன சமைத்தார்கள் ஊத்தப்பம், சப்பாத்தி, ஹுளி  உப்பிட்டுவோடு?

சாஸ்திரத்துக்கு மிளகு விழுது ஒரு துளியும், ஒரு மண்டை வெல்லமும் குழைத்த மிளகுத் துவையல் தொட்டுக்கொள்ள என்று கேட்டு பரபரப்பானார் நஞ்சுண்டய்யா. உஸ் உஸ் என்று நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு துவையலில் ஊத்தப்பத்தை பிரட்டும்போது ஹொன்னம்மா அவர் அருகில் வந்து தயங்கி நின்றாள்.

என்ன ஹொன்னு? துவையல் உரைப்பாக இருக்கேன்னு விசனப்படறியா? போகுது. அபார ருஜியா இருக்கே. அது போதும்.

சிலாகித்தபடி ஆகாரத்தைத் தொடர, ஹொன்னம்மா அவரிடம் ரகசியமாகச் சொன்னாள் – எப்படி இருக்கும்னு பார்க்க நான் ஊத்தப்பத்திலே வெங்காயம் நெய்யிலே வறுத்து அரிஞ்சு தூவி வார்க்கச் சொன்னேன். தப்புதான். மன்னிச்சுக்குங்க. நம்ம வீட்டிலே வெங்காயம் நுழைஞ்சிருக்குன்னு விசனப்பட வேண்டாம். இன்னிக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும்தான் என்றாள் பவ்யமாக.

மகாதப்பு மகாதப்பு. இந்த கிரஹத்துலே மாமிசம் துல்யமான வெங்காயமா? மகாதப்பு. எங்கெ அந்த வெங்காய ஊத்தப்பம்? உடனே எடுத்துட்டு வா. அழிச்சுடலாம்.

சமையல் பரமேஸ்வர ஐயரும் பார்யாள் லட்சுமியும் ஓட்ட ஓட்டமாக உடம்பு பதற ஒரு தட்டில் இரண்டு வெங்காய ஊத்தப்பங்களோடு வந்து குற்றவாளி தோரணைகளோடு நின்றார்கள்.

என்ன பார்க்கறீர் ஐயரே, அந்த சனியனை என் எலையிலே போடுங்கோ. நிர்மூலம் பண்ணிடறேன். எனக்காச்சு அதுக்காச்சு என்று முழங்கியபடி வெகு சந்தோஷமாக உண்ண ஆரம்பிக்கும் முன் பெரிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். ஹொன்னம்மாவும் முகத்தில் தீற்றியிருந்த பயம் போக அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள்.

Pic Onion dinner

Ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன