பெரு நாவல் ‘மிளகு’ – loud thinking about kitchen cabinet

எல்லாரும் கேட்கற கேள்வியா எதுவும் நான் கேட்கப் போறதில்லே. நான் கேட்க நினைச்சது இதுதான். நீங்க எங்க எல்லார் மாதிரியும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆகி, ராணியாகவும் இருந்தால் இப்போ ராஜாங்கம் நடத்தற மாதிரி தான் செய்வீங்களா இல்லே அது வேறு விதமா இருக்குமா?

ஒரு வினாடி அமைதி.

வேறு விதம்னா, அரண்மனை சமையல்கட்டுலே வாழைக்காய் புளிங்கறி பண்ணிக்கிட்டு சபைக்கு கரண்டியோட ஓடி வந்து, ’மிளகு விக்கற விலையை படிக்கு காலே அரைக்கால் வராகன் கூட்டி உத்தரவு போடறேன். போர்த்துகல்லே இருந்து வரவேண்டிய நிலுவை தொகையை இது பாதிக்குமா? கொஞ்சம் இருங்க. கடுகு தாளிச்சு கொட்டினது கரிஞ்சு  வருது. வாடையடிக்கறதே தெரியலியா? புளிங்கறி பண்ணி முடிச்சுட்டு வந்துடறேன். சமத்தா இந்த விஷயத்தை சர்ச்சை பண்ணுங்க’ன்னு மறுபடி சமையலறைக்கு ஓடி. இப்படி நிர்வாகமும் சமையலும் மாறிமாறிச் செய்வேனோ என்னமோ.

சென்னா அதைச் சொன்ன விதத்தை எல்லோரும் ரசித்தார்கள். சமையல் அறைக்குள் நுழைந்திருக்காவிட்டாலும் மிளகு ராணிக்குச் சமையலும் கைகண்ட விஷயம் தான் என்பதை அவள் பதில்   உணர்த்தியது.

மிளகு ராணி குசினி ராணியாகவும் இருக்கணுமா?

ஹொன்னாவர் கருமானின் மனைவி துடுக்கும் நட்பும் சிரிப்புமாகக் கேட்க, சென்னபைரதேவி மகாராணி சிரித்துவிட்டாள். எல்லோரையும் பார்த்து சொன்னாள் –

கல்யாணம் செஞ்சுட்டிருந்தா இப்ப இருக்கற சூழ்நிலை நிச்சயமாக மாறி இருக்க வாய்ப்பு இருக்கு. ஒரு கல்யாணமாகாத பெண் உலகத்தைப் பார்க்கறதுக்கும் கல்யாணமான பெண் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும். கல்யாணமாகி குழந்தை குட்டி பெற்று அதுகளையும் கட்டியவனையும் பராமரித்துக்கொண்டு, அதோடு ராஜாங்க காரியங்களையும் கவனிக்கறது கஷ்டம் தான். ஒண்ணு வேணும்னா செய்திருப்பேன். சமையல்கட்டை பெரிசாக்கி சமைச்சுக்கிட்டே அரசியல் பேசி நிர்வாகம் பண்ணியிருப்பேன். சமையலும் பண்ணியிருப்பேன். அப்புறம் ஒண்ணு. எனக்கு சரியாக சமைக்க தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டிருப்பேன். நான் பதவிக்கு வந்தபோது வயது பதினாறு.   கொங்கணி மட்டும் பேச எழுதத் தெரியும்.  கன்னடம் எழுதத் தெரியாது. போர்த்துகீஸ் தெரியாது. மடில்டா சொல்லிக் கொடுத்தாள். அவள் என் அப்போதைய தாதி. எனக்கு உற்ற சிநேகிதி. அந்த சிநேகம் தான் காசிரையை இங்கே வரவழைச்சிருக்கு. காசிரையோட அம்மா   தான் மடில்டா.  என் தாதி.

காசிரை அடக்கமாகச் சிரித்தாள்.

ஜெருஸோப்பா சங்கு வளையல் வியாபாரி மகள் விலாசினி சொன்னாள் – குசினி அரசாங்கம் நல்லா இருக்கும். பிரதானி கத்தரிக்காய் அரிஞ்சு கொடுப்பார். தளபதி கொத்துமல்லி ஆய்ந்து ரசத்துலே போடுவார். உப பிரதானி புளிங்கறியிலே உப்பு போட்டிருக்கான்னு ஒரு துளி வாயில் போட்டுப் பார்த்து தீர்ப்பு சொல்லிட்டே, பசதி கட்ட ஆன செலவு இத்தனை இன்னிக்கு மிளகு வித்த காசிலே செலவழிச்சதுன்னு கணக்கு சொல்வார்.

சென்னா அந்தப் பெண்ணை சிரிப்பு விலகாமல் பார்த்துக் கேட்டாள் – நீ நம்பறியா, மிளகு விற்று வரும் பணம் முழுக்க கோவில் கட்ட, பசதி கட்ட செலவு செய்யறோம் அப்படின்னு?

நிச்சயம் இல்லேம்மா. விசாலம் சொன்னாள். நீங்க அம்மா பராசக்தி. வரவை எல்லாம் வச்சு கோவில் கட்டி, ’பசியோடு குழந்தைகளைத் தூக்கிண்டு வந்து கும்பிட்டுப் போ. போகிற வழிக்குப் புண்ணியம்’னு சொல்ல மாட்டீங்க. நீங்கன்னு இல்லை, எந்த பெண்ணும் கல்யாணம் ஆனாலென்ன ஆகலேன்னா என்ன அப்படி முடிவெடுக்க மாட்டோம்.

சென்னா சிரித்தபடி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் மெல்லச் சொன்னாள் –

எல்லா கோவில், பசதி கட்டறதுக்கும் பாதி செலவுக்கு மேலே செல்வந்தர்கள் கொடுத்த கொடையில் இருந்து எடுத்துக்கொள்ளப் படுகிறது.

அம்மா, வேறே மாதிரி இந்த கட்டடம் கட்டித்தர உதவி செய்யலாமா? கடலில் தினம் சென்று மீன்பிடித்து வரும் செம்படவர் கோரியின் மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட காத்தி கேட்டாள். ஐம்பது வயது இருக்கலாம். மீன் காயவைத்து காயவைத்து நகக் கண்ணிலும், கைவிரல்களைச் சுற்றியும் மீன்கள் என்ற உயிரினங்கள் அவளோடு உடலாறக் கலந்திருக்கின்றன என்பதை சென்னா மகாராணி அறிவாள்.

காத்தியம்மா, வேறே எப்படி உதவலாம்? காசிரை கேட்டாள். ஒரு வினாடி மௌனமாக இருந்து காத்தி சொன்னாள் –

கோவில், பசதின்னு சொன்னா, பசு நினைவு வருது. களஞ்சியத்தில் நெல்லும்,  படைக்க உபயோகப்படுத்தற பாத்திரங்களும், சில கோவில்களிலே படிப்படியாக பால், நெய், பழக்கூழ், வெண்ணெய், மணம் வீசும் சந்தனம், இளநீர் தேங்காய், தேங்காய் துருவி வரும் தேங்காய்ப்பூ இப்படி சாமான்யர்களில் இருந்து பணம் படைத்தவர்கள் வரை நேர்ந்து கொண்டும், வழக்கமாகத் தருவதுமான காணிக்கைகள், இதெல்லாம் கோவில் என்றால் நினைவு வரும். பசதி என்றாலும் கிட்டத்தட்ட இதெல்லாம் நினைவு வரும்.

நிச்சயமாக என்றாள் மிங்கூ. எல்லா வழிபாட்டு இடங்களிலும் இவற்றைக் காணிக்கை செலுத்த வழிமுறை உண்டே என்றாள் காசிரை. சென்னா அவர்கள் இரண்டு பேரையும் பொறுத்திரு என்று கை காட்டி, காத்தியைப் பார்த்தபடி இருந்தாள்.

என்னமோ சொல்ல ஆரம்பிச்சியே, அதை சொல்லு என்கிற முகபாவம். காத்தி கோவிலில் நிற்பதுபோல் எழுந்து கிழக்கு பார்த்து நின்று கைகுவித்துப் பாதிக்கண் மூடித் தோத்திரம் போல சொன்னாள் –

அத்தனை காணிக்கையையும் ஒரு துணுக்கு, ஒரு சொட்டு, ஒரு துளி வீணாகாமல் பயன்படுத்திக்கொண்டால் என்ன?

என்றால்? புருவம் உயர்த்திப் பார்வையால் கேட்டாள் சென்னா.

ஒரு நாளைக்கு பத்து படி பால் அபிசேகத்துக்கு வந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு படியை அபிஷேகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு பக்தரிடமிருந்து அபிசேகத்துக்கான பால் வாங்கும்போது அதில் பத்தில் ஒரு பங்கை வைத்து அபிஷேகம் செய்து மீதியைச் சேர்த்து வைக்கலாம். வைத்து? தினசரி என் மாதிரி ஏழைப் பெண்கள், கைக்குழந்தை உள்ள ஏழைப் பெண்கள் தினம் கோவிலுக்கோ பசதிக்கோ வந்தால் கிரமமாக ஆளுக்கு இரண்டு குவளையோ மேலுமோ சேர்ந்த பாலை பிரசாதமாக வழங்கலாம். அப்புறம் ஒண்ணு.

சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னா.

வெறும் பாலை மட்டும் இல்லை. அரிசி மாவு, ராகி, கம்பு, பாசிப்பயறு, முந்திரி, வாதுமை, ஏலக்காய் இப்படி காணிக்கை வர்றதை சேர்த்து அரைச்சு சத்துமா ஆக்கி பால் விட்டுக் கரைச்சுத் தரலாம். காணிக்கையை பிரசாதமாக்கறது பாலுக்கு மட்டுமில்லை, தேன், பஞ்சாமிருதம், இளநீர், வாழைப்பழம், மாம்பழம் என்று சாப்பிடக்கூடியதான, தினசரி வந்து சேரும் எல்லா காணிக்கைக்கும் தான். கூடுதலாக வந்து சேரும் காணிக்கை எல்லாம் இப்போது எப்படி பிரயோஜனப்படுகிறதோ எனக்கு தெரியலீங்க. என்ன பண்ணலாம்னு யோசனை, கோரிக்கை அது மட்டும் என்னுது.

சென்னா காத்தியை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள்.

 

படம் போர்த்துகீஸ் உணவு

நன்றி விக்கிபீடியா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன