பெரு நாவல் ‘மிளகு’ – The reluctant Time Traveller gliding through space – time continuum

An excerpt from my forthcoming novel MILAGU

சாரி டாக்டர் பிஷாரடி, பேசிண்டே இருந்தபடி உறங்கிட்டேன். ஏசி போட்ட ரூம்லே இப்படி சௌகரியமான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போட்டு  உக்கார்ந்தேன்னும் இல்லாம படுத்தேன்னும் இல்லாம அரைத் தூக்கத்திலே கிடக்கறது பாக்யம்.

தலையசைத்தபடி மனதில் பெயர்களை பட்டியல் போட்டார் – மஞ்சுநாதன் இல்லே மஞ்சுநாத், நேமிநாதன், ரோகிணி, ஜெருஸூப்பா, ஹொன்னாவர்.

அவருக்குப் புரிகிறது நானூறு வருடம் முந்தி ஹொன்னாவரில் ஜீவித்திருந்தவர்கள் இவர்கள். பரமன் அந்தக் காலத்தில் போய் வாழ்ந்திருக்கிறார் இவர்களோடு எல்லாம் உறவும் பகையும் ஏற்படுத்திக் கொண்டு. ஹொன்னாவர். இன்னும் இருக்கிறது இந்தச் சிறு நகரம். ஷராவதி நதி அரபிக் கடலில் கலக்கும் முகத்துவாரப் பிரதேச நகரம் 600 வருடங்கள் பழையது,. ஜெர்ஸூப்பா அல்லது கெர்ஸூப்பா அல்லது ஜெரஸோப்பா அல்லது ஜெருஸப்பா என்று பலவிதமான பாட பேதங்களோடு அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் பெரும் துறைமுக நகராக இருந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது ஜெர்ஸூப்பா. இடிந்த கோவிலும் சதுர்முக பஸதி என்ற நான்கு வாசல்கள் உள்ள  சமணக் கோவிலும், சில பழைய கட்டிடங்களின் சிதைவுண்ட பகுதிகளுமாக ஜெருஸூப்பா இருக்கிறது.

அங்கே எல்லாம் எப்படிப் போனார் இவர்? அதைவிட முக்கியம் அந்தக் காலத்தில் இருந்து எப்படி இந்தக் காலத்துக்குத் திரும்பி வந்தார்?

பிஷாரடி தன் முன்னோரை நினைத்துக் கொண்டார். இன்றைக்கு பரமன் பற்றிக் கிடைத்த தகவல் ஐந்து அல்லது பத்து சதவிகிதம் இருக்கும். மீதி தொண்ணூறு பெர்செண்ட் எப்படி, எப்போது கிடைக்கப் போகிறது?

எதற்குக் கிடைக்கணும்? அவருக்குப் புரியவில்லை. ஏதோ அவரை முன்நோக்கிச் செலுத்துகிறது. அது பேய் மிளகை நானூறு வருடத்துக்கு அப்புறம் கர்னாடகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு வருகின்றது. மிளகு சம்பந்தமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ நடத்திப் போகிறது. ஒரு குழந்தைக் குரலில் அப்பா அப்பா என்று அழைக்கிறது. அந்தக் குழந்தை வீட்டில் இருந்து கடைவீதிக்குத் தனியாக போகிறான்.  சின்னப் பையன், மஞ்சுநாத், ரோகிணியின் மகனா? அப்பா அப்பா என்று பரமனைக் கூப்பிடுகிறானா?. பரமன் அவனுடைய தகப்பனா? ரோகிணியின் கணவனா? அப்போ, நேமிநாதன் யார்?

டாக்டர் வாங்க, வெளியே   போய்ட்டு வரலாம். கார் டிரைவர் வந்திருக்கார். ஏற மட்டும் கொஞ்சம் உதவி பண்ணுங்க போதும். பரமன் சொல்கிறார்.

காந்தம் வைத்து இழுத்தது போல் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் கிருஷ்ணன் கோவிலுக்குக் கார் வந்து நின்றது. சந்நிதிக்கு வெளியே கடைகள் இரண்டு பக்கமும் விளக்குப் போட்டு வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கும் வரிசை.

வாங்கோ பரமன், நான் இருக்கேன், பிடிச்சு ஜாக்கிரதையா கூட்டிட்டுப் போறேன். சட்டையை அழிச்சு காரிலேயே வச்சுடுங்க. போகலாமா?

கோவிலுக்கு உள்ளேயா? பரமன் சிரித்தார்.

ஏன் என்ன விஷயம்?

நான் எப்படி நடக்கறது?

பரமன் சொல்லும்போத உறக்கச் சுவடுகள் பூசிய அவர் முகத்தில் உற்சாகம் தட்டுப்பட்டது.

டாக்டர், பெரிய கோவில், ஜெயின் டெம்பிள், ரெண்டு காலும் முழுசா இருக்க காற்று வாங்கியபடி பிரதிட்சணம் பண்றதை அனுபவிச்சேன், தத்ரூபமா இருந்தது கோவிலும் பிரகாரமும் ஜில்லுனு அடிக்கற காற்றும், ரெண்டு காலும் செயலாக இருந்ததும். வேறே எதோ காலம், எதோ ஊர்.

கோவில் அலுவலகத்தில் இருந்து சக்கர நாற்காலி ஒன்றை  உருட்டிக்கொண்டு கோவில் அலுவலர் வந்தார். பிஷாரடி இதை ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறார் என்று பரமனுக்குத் தோன்றியது.

சமணக் கோவில் அனுபவம் அவர் திட்டமிட்டதில்லைதான். இவ்வளவு தத்ரூபமாக, வேறே ஒரு காலத்தில்? கனவில் வருவதா எல்லாமும்? இதுவும்?

அது என்ன ஊர்லே பரமன்?

எது டாக்டர் பிஷாரடி?

அதான், நீங்க ரெண்டு காலும் முழுசா இருக்க, ஜெயின் கோவில் பிரகாரம் சுற்றி வந்தீங்களே? அது ஹொன்னாவர் தானே?

தெரியலே.  சட்டையை ஏன் அழிக்கணும்? பத்திரமா கார்லே வச்சுட்டு போய் அப்புறம் வந்து போட்டுக்கலாமே என்றார் பரமன். கோவில் ஊழியரும் பிஷாரடியும் சக்கர நாற்காலியில் தூக்கி வைக்க சிரித்தபடி அமர்ந்தார்.

அழிக்கறதுன்னா மலையாளத்தில் கழற்றறது.  தமிழ்லே எரிச்சு கிழிச்சு ஒண்ணுமில்லாம ஆக்கறது. பிஷாரடி சொல்லியபடி சக்கரநாற்காலியை நகர்த்திப் போகும் முன், கோவில் அலுவலகர் முன்வந்து உருட்டிப் போகத் தொடங்கினார்.  அங்கங்கே சிறு படிகள் கடக்க நாற்காலியை உயர்த்தி மீண்டும் இறக்க பிஷாரடியும் உதவினார்.

வாழ்க்கையிலே முதல் தடவையாக இந்தக் கோவிலுக்கு உள்ளே வரேன். சின்னக் குழந்தைலே எங்கம்மா கற்பகத்தோடு மைலாப்பூர் கபாலீஸ்வரன் கோவில் போன ஞாபகம் எல்லாம் வருது.

அவர் மெல்லத்தான் சொன்னார். என்றாலும் பின்னால் வந்த மூதாட்டி அபிப்ராயப்பட்டாள், அம்பலத்தினுள்ளில் சம்சாரம் பாடில்யா ஷமிக்கணும்.

கோவில் சந்நிதியில் நிற்கும்போது பரமன் கண்மூடி மஞ்சுநாத் என்றார்.   குழந்தே என்றார் அவர் அடுத்து. பிஷாரடி அவர் அருகே நகர்ந்து என்ன சொல்கிறார் என்று கவனிக்கத் தொடங்கினார்.

ஆனாலும் பரமன் அப்புறம் ஏதும் சொல்லவில்லை. எடக்கா வாசித்து அம்பலத்து மாரார் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்க  அந்த இசை அம்பலத்து வெளியில் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தது.

சந்தனமும், துளசியுமாக இவர்கள் சந்நிதியில் தொழுது திரும்ப வரும்போது வெடிவழிபாட்டு சத்தம். என்ன அது என்று பக்கத்தில் போய்ப் பார்க்க ஆர்வம் காட்டினார் பரமன். வெடி வழிபாடு என்றார் பிஷாரடியும் ஆர்வத்தோடு.

வெடி வெடிச்சு வழிபடறதா?

பரமர் விசாரித்தார். அதேதான் என்றார் பிஷாரடி. அடுத்த நிமிடம் வெடித்தரைக்கு சக்கர நாற்காலி நகர்ந்தது.

ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தார் பிஷாரடி. யாராவது வந்தால் வெடி சத்தத்தையும் வழிபாட்டையும் அவர்கள் செலவில் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்ததற்கு மாறாக வந்த மூன்று பேரும் வெடிச் சத்தம் இலவசமாகக் கிடைக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அலுத்துப்போய் கிளம்பினார்கள்.

மகா கஞ்சர்கள் என்றார் பிஷாரடி பரமனிடம். சின்னக் குழந்தை மாதிரி அவருக்கு வெடிச்சத்தம் வேண்டியிருந்தது. யாரும்   தரவில்லை என்றால்   வெடிக்காரனிடம் வெடிக்காசு தரப் போகிறேன் என்றபோது பரமனுக்குத் தலை சுற்றலாக இருந்தது. வேணாம் போகலாம் என்று அவர் சொல்வதற்குள் பிஷாரடி வெடி வழிபாட்டுக்காரன் பக்கம் நடந்து விட்டார்.

ராத்திரி குல்ஃபி ஐஸ் விற்கிறவன் கூம்புகளில் அடைத்துத் தரும் பனிக்கூழ் மாதிரி வெடிமருந்து நிரம்பிய கூம்புகள் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

வேணாம் என்று பரமன் இன்னொரு தடவை சொல்வதற்குள் பலமான வெடிச்சத்தம். வானத்திலிருந்து பெரிய பறவை கீழே இறங்குது போல் ஏதோ இறங்கி வந்து வெடிக்காரன் மேல் விழுந்தது. அது நக்னமான ஒரு வயசனின் உடம்பாக ஆக இருந்தது. கைகால் உயர்த்திக் கண் திறந்து உசிரோடிருந்தான் அவன்.

வெடிவழிபாட்டுக்காரன் முகம் மாறி வேறொருத்தனாக இருக்க, இடதுகால் சுண்டுவிரல் நைந்து போனதாக அவன் கதறியழுதான். பரமன் போதும் என்றார்.   வயசனும், கால் விரல் போனதாக வெடித்தரையில் தேடி எதையோ கையில் எடுத்து கதறிய மற்றையவன் வெடிக்காரனும் இல்லாமல் போய் தற்கால வெடிக்காரன் வெடி வெடிக்கத் தயாராக நின்று கொண்டிருந்தான்.

பிஷாரடி ஓடி வந்து பரமன் கையைக் குலுக்கினார். சொல்லுங்க சார், எப்படி அதை செஞ்சீங்க? You are a brilliant  time traveller.

பரமன் குழம்பிப்போய் இருக்க, பிஷாரடி மேலும் சொன்னது – இப்போ பார்த்த பத்து வினாடி நேரம் 1850-ம் வருஷம் இதே இடத்திலே இதே மாதிரி வெடி வழிபாடு நடந்தபோது ஏற்பட்ட அசம்பாவிதம். சின்னச் சங்கரன் சாரோட பாட்டி பகவதியம்மாள் பெரிய சங்கரன் ஐயாவை கல்யாணம் செஞ்சுக்கிட்ட நாள்னு நான் சங்கரன் குடும்பம் இங்கே அம்பலத்துலே வழிபட ஒரு மாதம் முந்தி வந்தபோது சொன்னேனே அன்னிக்குத்தான் கல்யாண தினம். இது கல்யாணத்துக்கு தொட்டு முன்பு அந்த குடும்பத்திலே ஆலப்பாடு வயசன் பறந்து கொடிமரம் நனைச்சுட்டு வெடியோடு சேர்ந்து மூத்திரம் வடிய வெடிக்காரன் மேலே விழுந்த கணம்.

பிஷாரடி மூச்சு விடாமல் பேசினார். பின்னும் தொடர்ந்தார்.

பரமரே, எப்படி அந்த வினாடிக்கு துல்லியமா கூட்டிப் போனீர்?

பிஷாரடி கேட்க அது காதில் விழவில்லை பரமனுக்கு. அவருடைய உள்செவியில் மட்டும் கேட்டது, அப்பா அப்பா என்று ஒரு குழந்தைக் குரல். வெடிமருந்து சேமித்து வைக்கும் கிடங்கு வாசலில் நின்று கூப்பிடும் சிறுவனுடையதாக இருந்தது அது.  பரமன் கவனம் சிதறாமல் உடல் பதறி சக்கர நாற்காலியில்  குமைந்து கொண்டிருந்தார்.

பரமன், என்ன ஆச்சு? ரோகிணி, நேமிநாதன், மஞ்சுநாத், ஹொன்னாவர், ஜெருஸூப்பா. எதாவது தோணுதா? மஞ்சுநாத், நேமிநாதன், ஹொன்னாவர்.

இல்லை என்றார் பரமன். தலை சுற்றி சக்கர நாற்காலியில் அவர் குழைந்து கிடக்க கோவில் அலுவலரும் பிஷாரடியும் வெடித் தரையில் இருந்து அவரை நகர்த்திப் போனார்கள்.

Pic chineese fan

Ack wikimedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன