பெரு நாவல் ‘மிளகு’ – 1606 AD The story of a iconic half naked fakir, Paraman told his son

நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி

குழந்தை என்னோடு அவ்வளவாக ஒட்டவில்லை. எப்போதும்போல்தான் இது. அப்பாவை பிரிந்த துக்கம். அவனுக்கு அப்பா என்பது பரமன் என்று பேசத் தெரிந்த காலத்திலேயே சொல்லிக் கொடுத்தாகி விட்டது.

நேமிநாதனுக்கு அவன் மகன் என்பதில் அக்கறை இல்லை. அவனுக்கு நேமி தான் தகப்பன் என்பது இன்றுவரை தெரியாத உண்மை. அது தெரிய வரும்போது அவனும், நானும், நேமியும் பரமனும் என்ன ஆகியிருப்போமோ.

ஞாயிறு முழுக்க அப்பா அருகில் இல்லாத துக்கத்தை அழுது தீர்த்தான் மஞ்சுநாத். தெருநாய்களும், வீட்டில் வளர்க்கும் பூனையும்,  முயல்களும் பட்டாம்பூச்சிகளும் அவன் கவனத்தை அடுத்துக் கவர மஞ்சுநாத் தானே தனக்கான விளையாட்டுகளை இவற்றோடு சேர்ந்து வடிவமைத்துக் கொண்டான். அவன் வயதுக்கு இது அதிகமான பக்குவமும் சுய அறிவும் கலந்த முன்னெடுப்பு.

அவனை ஜெரஸோப்பாவில் விட்டுவிட்டு திங்களன்று  நான் ஹொன்னாவர் திரும்பும்போது, வீட்டு ஊழியர்களோடு இருப்பதில் சந்தோஷம் அடைந்ததாகவும், ஒரு வாரம் முழுக்க இருக்க எந்த கஷ்டமும் இல்லை என்றும் என்னிடம் குழந்தை மஞ்சுநாத் சொன்னபோது அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்க எந்தத் தாயும் போல்   பாசத்தால் செலுத்தப்பட்டேன்.

நான் பிடிவாதமாக பிரியம் காட்டாது அவன் தலை தடவி உச்சந்தலையில் முத்தமிட குனிய அவன் நகர்ந்திருந்தான்.

சாப்பாடு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை அவனுக்கு. சமாளித்துக் கொள்வான்.

ராத்திரியில் உறங்கும் முன் ஒரு கதை சொல்ல யாராவது வேணும். அது பரமனப்பாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் குழந்தை மஞ்சுநாத்.

கறுப்பன் என்பதால் கோச் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்ட ஒரு உயரமான மெலிந்த மனிதனைப்  பற்றி நிறையக் கதை சொல்லியிருக்கிறார் பரமன் அப்பா.

சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்து காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும் மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும் அரசாங்கக் காவலர்கள் மூர்க்கமாகத் தடி கொண்டு தாக்கியும் அதெல்லாம் பொறுத்து, திருப்பி அடிக்காமல் வரிசை வரிசையாகப் பிடிவாதமாக உப்பெடுக்க முன்னால் நகர்ந்த அந்தக் கிழவனையும், அவனுடைய சகாக்களையும் பற்றி மஞ்சுநாத் சொன்ன ஆர்வம் எனக்கே அந்தக் கதை கேட்கத் தோன்றியது.

போகட்டும். அரைக்கிறுக்கன் பரமன் சொன்ன கதைக்கு கால் ஏது வால் ஏது? உப்புக் கிழவன் கதை எல்லாம் குழந்தையை முக்கால் கிறுக்கன் ஆக்கிவிடும்.  அவனுக்கு பயம் போக பிசாசுக் கதைகள் சொல்ல வேண்டும்.

போகட்டும். இனிமேல் இரண்டு பேரும் சந்திக்கப் போவதில்லையே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன