பெருநாவல் மிளகு – wherein the Emperor of Keladi works out the logistics of the business deal to provide tactical and strategic support to usurp the throne

சரி உடஞ்சாச்சு ஒட்டுமோ ஒட்டாதோ திரும்பி. காலம் தான் பதில் சொல்லணும் கோகர்ணம் கணபதி சொல்லாட்டாலும். அது இருக்கட்டும், உனக்கு அரசாட்சி கைக்கு வர நானும் திம்மப்பனும் ஏன் உதவி செய்யணும் சொல்லு. திம்மப்பன் கிட்டே கேட்டதை ஒரு சௌகரியத்துக்காகத் தனியா நிறுத்திட்டு  என் கிட்டே வந்திருக்கியே உனக்கு உதவி பண்ணனும்னு. செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

நேமிநாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். அவன் சொன்னது – நான் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டறதை நிறுத்தி உங்களுக்கு அந்தத் தொகையை மாதாமாதம் அனுப்புவேன். தொகையிலே பத்து சதவிகிதம் அதிகரிக்கவும் தயாராக இருக்கேன். நீங்க விருப்பப்பட்டால் அந்தத் தொகையை பில்ஜி அதிபர் திம்மப்பாவோடு தேவையானதாக நீங்க கருதும் அளவு பங்கு வைக்கலாம். திம்மப்பாவோ உங்களுக்கு வேண்டிய வேறே பாளையக்காரராகவும் இருக்கலாம். இது முப்பது வருஷத்துக்கு எழுதிக் கையெழுத்து போட்டு கொடுக்கப் போகிற ஒப்பந்தமாகும். அப்புறம் அருகதேவன் அருளாலே அது புதுப்பிக்கப்படும் அல்லது வேறே எதாவதாக எதிர்காலம் வரும். போர்த்துகீசியர்களோடு மிளகு விற்பன ஒப்பந்ததை நானே தொடர்ந்து கவனிச்சுக்குவேன். அந்த விற்பனை லாபத்தை நான் எடுத்துக்கறேனே மாமா.

வெங்கடப்பா நேமிநாதன் அருகில் வந்து, நீ நான் எதிர்பார்த்ததை விட புத்திசாலியா இருக்கேடா நேமி. ஆரியக் கூத்து ஆடினாலும் காசு காரியத்துலே கண் வைப்பேடா ஒக்காளி. அவன் முதுகில் தட்டி சிரிக்க, நேமிநாதன் எழுந்து அவர் காலில் தொட்டு வணங்கினான்.

சரி பார்க்கலாம். இன்னும் ஒரு வாரத்திலே நானே முடிவைச் சொல்லி விடறேன். நீ இதை ரகசியமாக வச்சுக்கோ. இனிப்பு கடை வைப்பாட்டி கிட்டே போய் முதல் காரியமா சொல்லிட்டு இருக்காதே. அவ உனக்கு சகலமும்னு எனக்கும் தெரியும். ஆனா ராஜாங்கம் லட்டுருண்டை பிடிக்கற விஷயம் இல்லே. அவளோடு ராக்கூத்து ஆடினாலும் ராஜாங்கக் காரியத்துலே கண்ணு வையடா மருமகனே. ஓம் சக்தி ஓம். நீ கிளம்பு. நானும் காரியங்களை நோக்கறேன். வெங்கடப்ப நாயக்கர் எழுந்தார்.

இப்போதைக்கு ஒரு பாடம் கேள். புதையல் கிடைத்து பழையவயல்லே பழைய அரண்மனை கட்டி சுற்றுமுற்றும் அறுபது கிராமத்தை வளைச்சு எங்க மூதாதையர்கள் ரெண்டு கவுடர்களும் ஆட்சி பிரகடனம் பண்ணினாங்க. விஜயநகர பேரரசு செயலாக இருந்த காலம் அது. இவங்க ரெண்டு பேரையும் பிடிச்சு ஹம்பிக்கு கொண்டு போனாங்க. அங்கே போகிறபோதே எங்க மூதாதையிலே அண்ணன்காரர் அவரோட தொடுப்பு மூலம் ஒரு செய்தி அறிஞ்சார். உனக்கு அல்வா கொடுக்கற இனிப்புக்காரி மாதிரி அவருக்கு ஒரு கூத்தியாள், அதான்பா, ஆட்டக்காரி, பாட்டுக்காரி. எவனோ ஒரு பாளையக்காரன் விஜயநகரத்துக்கு வரி கொடுக்க மாட்டேன்னானாம். விஜயநகர பேரரசர்  கிட்டே என் மூதாதையர் சொன்னாங்க – நாங்க அவனை உண்டு இல்லேன்னு பண்ணிடறோம். எங்களை பழையவயல்லே கொஞ்சம் போலவாவது இடம் கொடுத்து நிர்வாகம் பண்ண விடுங்களேன். சொன்னது போல் செஞ்சு காட்டினாங்க. நான் இன்னிக்கு ஆட்சியிலே இருக்கேன்னா அவங்க பேச்சு சுதாரிப்பும் கொடுத்த வாக்கைக் காப்பாத்தற நேர்மையும் காரணம். என்மருமகன், நீயும் அப்படி  இருக்கணும். என்ன புரியுதா?

கோவில் மணி ஒலித்தது. எப்போதும் ஒலிப்பது அது. நேமி நெகிழ்ந்து போய்க் கைகூப்பி நாயக்கரோடு போஜனசாலைக்கு வெளியே வந்தான்.

வெங்கடபதி நாயக்கர் வழியனுப்ப வாசல் வரை வந்தார். நினைவாக இலச்சினையை அவனிடமிருந்து வாங்கி காவலாளியிடம் கொடுத்தார். மதியம் இருந்து சாப்பிட்டு போயிருக்கலாமேடா மருமகனே என்று ராகம் இழுத்தார்.

இல்லே மாமா, நீங்க என் மூளைக்கு வேலை கொடுத்திருக்கீங்க. அதே வேகத்திலே செய்ய வேண்டியதைச் செய்யறேன். சந்திப்போம் மாமா உங்க ஆசிர்வாதத்திலே என்று அடக்கமாகச் சொன்னான் நேமிநாதன். சந்திப்போம் என்று அவர் சொன்னபோது எதிரே தனியாக நடந்து வந்த அரண்மனை புரோகிதர் ”சகுனமே சரியில்லே’ என்று முணுமுணுத்துக்கொண்டு அவசரமாகத் திரும்பி வந்த வழியே ஓடத் தொடங்கினார்.

pic astronomy during medieval times

ack en.historylapse.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன