Sculptor Chistle Ensemble – ‘மிளகு’ பெருநாவலில் இருந்து

உளிகள் விடிந்தது முதல் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.

தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது.

பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது.

சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப போய், சலிக்காமல் அந்த ஒரே பாட்டைப் பாடுவது போன்ற இரைச்சல். நூறு இருநூறு சிற்பிகள் சிற்பம் செதுக்கும் கூட்டு ஒலி.

பட்கல்லிலும், கோகர்ணத்திலும், ஜெருஸோப்பாவிலும், ஹொன்னாவரிலும். உள்ளாலிலும், உடுப்பியிலும், மால்பேயிலும், கார்வாரிலும், புட்டிகேயிலும் அச்சு அசலாக ஒரே மூலத்தின் பன்முகத்தன்மையிலமைந்த சதுர்முக பஸதிகள் ஒரே நேரத்தில் எழுந்து வருகின்றன.

இவற்றில் சில சென்னபைரதேவியின் அரசாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைவதில்லை. அந்தந்த குறுநிலங்களின் மன்னர்கள் சென்னா பஸதி கட்டுவதை பார்த்து நல்ல பெயர் வாங்க அவர்களும் கட்டத் தொடங்கினார்கள்.

கருங்கல் பாளங்களை எடுத்துக் கிடைமட்டமாக நிறுத்திக் கூரையாக்கி, கருங்கல்லைத் தரையாக்கி, கருங்கல்லைச் சுவராக்கி, ஒவ்வொரு பஸதியும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாதபடி கல்லில் செதுக்கிய ஒற்றைக் கவிதையின் பிரதிகள் போல இருக்கும்.

பஸதிகளின் சுவர்களிலும் கூரையிலும் சின்னச் சின்னதாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்படும். இந்துஸ்தானம் முழுவதிலும் இருந்து வந்த சிற்பிகள் காட்சி வைக்கும் விரல் திறமையும், உளிகொண்டு செதுக்கும் சிற்ப மேன்மையும் அதிசயமானது.

சென்னா பஸதிகளை உளியின் ஒலிகொண்டு தான் நினைவு கொள்வாள். அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை இந்த மிளகு மூதாட்டிக்கு உற்சாகமும் ஊக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.

சயன கிருஹத்துக்கு வெளியே சென்னா வந்தபோது ஓரமாக உட்கார்ந்திருந்த நாகசுவர இசைக் குழு மிக இனிமையாகக் காலையில் இசைக்கத் தகுந்த ராகமான மலையமாருதத்தை இசைக்கத் தொடங்கியது. நேற்று பூபாளம் வாசித்த குழு அது. அதன் முந்திய தினம் பௌளி என்ற இந்துஸ்தானி ராகம். தினசரி மங்கல இசையோடு துயில் உணர்ந்து, இரவு உறங்கும் முன் ஒரு மணி நேரமாவது இசையில் அமிழ்ந்து கண்மலர்கிறாள் சென்னா. நேற்றிரவு புல்லாங்குழல் மென்மையாக தாலாட்ட பஹாடி ராகத்தின் ஒலிகளோடு மலைச் சிகரங்களையும் மலையடிவாரங்களையும் சென்னா சுற்றிவந்தாள்.

“இசையோடு எழுந்து இசையோடு துயின்று வாழ்க்கை இசைமயமாகட்டும். தினம்தினம் ஏற்படும் அழுத்தத்துக்கும் இறுக்கத்துக்கும் ஒவ்வொரு எலும்பும், நரம்பும் பாதிப்பு ஏற்றுப் பிணங்கி நிற்காமல் அவை இரவில் அமைதியாக ஓய்வுகொள்ளட்டும். துயில் எழுந்து சாந்தமாக நாள் முழுக்க இயங்கட்டும். இசை எப்போதும் மனதில் உங்களோடு லயிக்கட்டும்” –

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன