மதுரை அரசர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரும், போர்த்துகல் அரசரின் தலைமைப் பிரதிநிதி இமானுவேல் பெத்ரோவும், ராத்திரி விருந்தும்

வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து

ராத்திரியில் மன்னரோடு சந்திப்பு மிக சுவாரசியமானது என்றேன் மதுரை மகாராஜா முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்களிடம், இட்டலியை கோழிக் குழம்போடு வாயில் இட்டுக் கொண்டு. விஜயநகர அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எங்கும் மெலிந்த இட்டலிகள் உண்ணக் கிடைக்கும். அவற்றின் நான்கு சேர்ந்து ஒன்றாக மதுரை அரண்மனையில் உண்டேன். நல்ல வெள்ளை நிறம், சற்றே அதிகம் உப்பு இட்டு வேகவைத்த, சூடான இட்டலிகள் அவை. அடுத்து இரண்டு தோசைகளை கொத்திச் சமைத்த இறைச்சியோடு உண்டேன். கைமா என்ற பெயர் அந்த இறைச்சிக்கு.

மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் என்னிடம் கூறியது இந்தப்படி இருந்தது –

”ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரி ஒன்பதுக்கு நகைக்கடையில் திருநாண் என்ற தாலியும், மற்ற நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாமும் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கிவந்து, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி வைத்து, காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து, காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம். வேறு எந்த ஊரிலும், லிஸ்பனில் கூட இந்த வசதி இருக்காது”.

கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் தன்மையை விளக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. வித்தியாசமான ஊர்தான். அவரிடம் சொன்னேன். விநோதமான பதில் அளித்தார் அவரானால் –

”என்ன செய்ய, நாங்கள் மதுரைக்காரர்கள், கொஞ்சம் விஷமக்காரர்கள். எங்கள் தாத்தா மகாராஜா விஸ்வநாத நாயக்கர் ராயசம் ஆக, என்றால் எழுத, படிக்க அரசருக்கு உதவியாக இருக்க ஒரு படிப்பாளியை நியமிக்கத் தீர்மானித்தார். தேர்ந்தெடுக்க, ரெண்டு முரட்டு நாயக்கர் பய்யன்களை வரச் சொன்னார் – ரெண்டரைக்கு ஒருத்தன் வரட்டும். மூணுக்கு இன்னொருத்தன்
.
”பகல் ரெண்டரைக்கு வந்து காத்திருந்து ராஜாவை சந்திக்க முடியாமல் திரும்பிப் போய்ட்டார் முதல் ஆள். ராஜாவோட விஷயம் – விஷமம் தெரிஞ்ச ரெண்டாவது ஆள் மூணு மணிக்கு தானே, பகல்லே மூணு மணியாக இருக்காது. ராத்திரி மூணு மணிக்குப் போய்ப் பார்க்கலாம்னு ராத்திரி மூணு மணிக்கு அரண்மனை போனா, விஸ்வநாத நாயக்கர் வந்து உக்காந்திருக்கார்! உடனே உத்தியோகம். அந்தப் பய்யன் ராயசம் உத்தியோகத்தில் முப்பது வருஷம் சிறப்பாக இருந்து, எங்க அப்பா காலத்திலே ஓய்வு பெற்றார்”.

நாயக்கர் ரொம்ப சுவாரசியமாகப் பேசியபடி கை அலம்பி அரண்மனை முக மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தோம்.

தெற்கு கடற்கரையிலே எதுக்கு முத்துக் குளிக்கற இந்திய, தமிழ் பேசற பிரஜைகள் கிட்டே போர்த்துகல் வரி வாங்கணும்? நீங்க நாகப்பட்டணத்திலே அந்த சமுத்திர புத்திரர்களான பரதவர்கள் மீன் பிடிக்க வரி கட்டணும்னு வச்சது மாதிரி இது அபத்தமில்லையா? தடாரென்று கேட்டார் நாயக்கர்.

pic Thirumalai Naicker Mahal

ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன