அடக்கியும் அன்றியும் அதற்கும் பயிற்சி : மிளகு நாவலில் இருந்து

an excerpt from my forthcoming novel MILAGU

அடக்கியும் அன்றியும்

மிளகுராணி சென்னபைரதேவியும் அபயராணி அப்பக்கா தேவியும் இருக்கும்வரை டச்சுக்காரர்களின் ஏகாதிபத்யமோ இங்கிலீஷ் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் குள்ளநரித் தந்திரங்களோ இங்கே எடுபடாது என்றார் ஸாமுரின். போர்த்துகீசியர்களும் இந்தப் பட்டியலில் உண்டு என்பதை அவர் தற்காலிகமாக மறந்திருந்தார். பெத்ரோவும் தான்.

திடீரென்று ஸாமுரின் எழுந்தார். எல்லோரும் எழுந்து வணங்கித் தலை தாழ்த்தி இருக்க அவர் பின் அரங்கத்துக்கு நடந்தார். போகும்போது யாரிடமோ காதில் ஏதோ சொல்லிப் போனார்.

”ஸாமுத்ரி மகாராஜாவு அற்ப சங்கைக்கு ஒதுங்கப் போயிருக்கார். பெத்ரோ துரைக்கு ஒதுங்க வேணுமென்றால் உதவி செய்யச் சொன்னார்”. அந்த அரண்மனை ஊழியர் பணிவு விலகாத குரலில் பெத்ரோவுடன் சொன்னார்.

நன்றி இப்போது வேண்டாம் என்று புன்சிரிப்போடு தலையசைத்துச் சொல்லி விட்டார் பெத்ரோ.

லிஸ்பனில் இருந்து அரசாங்க உத்தியோகம் கொடுத்து வெளியே அனுப்பும்போது இந்துஸ்தானி, கொங்கணி வசவுகளைக் கற்பிப்பதோடு, மணிக்கணக்காக சிறுநீர் கழிக்காது அடக்கியபடி வேலையில் ஈடுபடவும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதை அடிக்கடி செய்யக் கூடாது, உடல் நலம் கெட்டுவிடும், அந்த மாதிரி நேரங்களில் தண்ணீர் குடிப்பதைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொண்டு பிறகு அதிகமாக்கலாம் என்ற மருத்துவ ஆலோசனையும் கூட உண்டு.

”எங்கள் அவை இந்த வாரம் செயல்படாது. பத்து நாள் ஓணத் திருநாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்குகின்றன. அனைவரும் ஓணச் சிந்தனைகளில் இருப்பார்கள். என் இஸ்லாமிய கப்பல் தளபதி கூட இங்கே இல்லை, சொந்த ஊருக்குப் போயிருக்கிறார்” என்று சிரித்தார் ஸாமுரின்.

’குஞ்ஞாலி’ மரைக்காயர் ஊரில் இல்லை என்று அறிய நிம்மதியாக இருந்தது பெத்ரோவுக்கு. குஞ்ஞாலி பட்டம் பெற்ற கடற்படைத் தளபதிகள் ஸாமரினோடு சேர்ந்து உக்கிரமாகப் போராடி வேறெந்த அரசும் வியாபாரம் பேசி நாடு பிடிக்க முற்பட்டால் அவர்களின் கப்பல்களை முற்றுகையிட்டுத் திருப்பி அனுப்புவார்கள். சுலைமான் என்ற பெயருள்ள தற்போதைய ’குஞ்ஞாலி’ மரைக்காயர் சென்னபைரதேவிக்கு நல்ல சிநேகிதத்தில் இருக்கப்பட்டவர். அவரை வைத்துக்கொண்டு தனி வர்த்தக ஒப்பந்தம் பற்றிப் பேசுவது தர்மசங்கடமாக இருக்கும் பெத்ரோவுக்கு.

——————————————–
மாமனார் வீட்டுக்குள் பெத்ரோ நுழைந்து மனைவி மரியாவையும் குழந்தைகளையும் பார்த்து ஒரு நிமிடம் பேசினார். இதோ ஒரு நிமிடம் என்று காலணிகளை அவசரமாகக் கழற்றி உதறி விட்டுத் தோட்ட வெளிச்சத்தில் நடந்தும் ஓடியும் போனார்.

மிளகும், பிலிப்பும், சென்னபைரதேவியும், ஸாமுரினும் யாரும் எங்கேயும் போகட்டும். பெத்ரோவுக்கு இப்போது மேலும் தள்ளிப்போட முடியாத வேறு காரியம் இருக்கிறது.

கால்களை நனைத்து சால் வெட்டியதுபோல் சுழித்து ஓட, மரத் தண்டுகளை ஈரமாக்கிச் சுழன்று மண்ணில் இறங்கி, வாழை மரங்களைச் சுற்றி வளைந்து திரும்பி, பாத்தி கட்டி வளர்த்த கீரையை விளிம்பில் தொட்டு நெடி மிகுந்து பெருக, நிறுத்தாமல் சிறுநீர் கழித்தபடி இருந்தார் பெத்ரோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன