நாவல் மிளகு : கொல்லைக்குப் போனாலும் கூட்டு வேண்டாம்

A small extract from my novel MILAGU on the anvil

கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள்.

மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள்.

எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய குளித்துச் சுத்தமாகத் தெரியும் சமையல்காரர்கள் காலை உணவைப் பாகம் செய்து கொண்டிருந்தார்கள். ஆளோடி இறுதியில் ஒரு ஓர அறை ஆகாயத்தைப் பார்தது கூரை இல்லாமல் நீண்டிருக்க, அங்கே பணி எடுக்கிறவர்கள், உபயோகிக்கப்பட்ட பாத்திரங்களைக் தேய்த்துக் கழுவித் தூய்மைப் படுத்தித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

குசினி வாசலில் நின்றபோது பிரதம சமையல்காரர் ஒரு வினாடி தன் உதவியாளனிடம் அடுப்பைக் காட்டிச் சொல்லியபடி ராணிக்கு மரியாதை செலுத்த ஓடி வந்தார்.
”எல்லாம் சரியாக நடக்கிறது தானே?”

”ஆமாம் அம்மா”.

”காலை உணவு என்ன சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்”?

”இட்டலிகளும் தோசையும் துவையலும் பாகம் செய்துகொண்டிருக்கிறோம் அம்மா. வெண்பொங்கலும் வெந்துகொண்டிருக்கிறது. இன்று வெள்ளி என்பதால் பூஜை நைவேத்தியமாகப் படைக்கப் பலாப்பழப் பாயசமும் சமைத்து வைத்தாகி விட்டது அம்மா. நீங்கள் சொன்னபடி குறைந்த அளவு சர்க்கரையே சேர்த்துச் செய்தோம்.

துரை அவர்கள் காணிக்கையாகத் தந்த கொய்யாப் பழங்களையும் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கிறோம்”.

”ரொம்ப நல்லது. எனக்கு வேண்டிய தினசரி பானம் அனுப்புகிறீர்களா?”

”நிச்சயமாக அம்மா. உங்கள் தினசரி வழக்கப்படி எலுமிச்சைச் சாறும் தேனும் வென்னீரில் கலந்து வைத்திருக்கிறது. இன்று தேன் சேர்க்க வேண்டாம் என்றால் தேனில்லாமல் கருப்பட்டிக் கூழ் சேர்த்த இன்னொரு குவளையும் உண்டு. இரண்டையும் தங்கள் திருமனசுப்படி அனுப்புகிறேன்”.

”தேனை நாம் விலக்கவில்லை. அடிகளார் வந்தபோது அவருக்கு விலக்கு என்பதால் சொன்னோம். இப்போது தேன் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்”.

மண்டபத்தில் நேமிநாதன் நின்றபடி சென்னா வரக் காத்திருந்தான். வலதுகைச் சுட்டி விரலில் வெள்ளைத் துணியால் கட்டி வைத்திருந்ததை முதுகுக்குப்பின் மறைத்துக் கொண்டாலும் சென்னா கண்ணில் அது படத் தவறவில்லை. தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள் சென்னா.

”வணக்கம் அம்மா, நன்றாக உறங்கினீர்களா? நேற்று முன் தினம் அவ்வப்போது எட்டிப் பார்த்ததே அந்தக் குத்திருமல் கட்டுப்பட்டதா? வயிறு சீரணப் பிரச்சனை இன்றி சீராக இயங்குகிறதா?”

அவன் சொல்லச் சொல்ல ஆம் என்று தலையசைத்தாள் சென்னா. வயிறு பற்றிய ஆம் உதிர்த்த உடன், அவனை இருக்கச் சொல்லி விட்டு தாதியைப் பார்த்தாள் சென்னா.

”கொல்லைக்குப் போக கூட்டு எதுக்குன்னு பழஞ்சொல் தமிழ்லே உண்டு. ஆனா எனக்கு அறுபது வயசாகி எல்லா சீக்கும் வந்து சேர்ந்திருக்கு. கொல்லையிலே கழிப்பறையிலே கொண்டு போய் விட்டு காத்திருந்து திரும்பக் கூட்டிவர தாதி இருந்தால் மனசு ஆறுதலோட இருக்கு. சுத்தப்படுத்தறதெல்லாம் நானே தான் இதுவரைக்கும் செய்துக்கறது. வெறும் துணைதான். நான் போயிட்டு தோட்டம் போறேன். நேமி, நீ எட்டரைக்கு காரியாலயம் வந்துவிடு”

மிர்ஜான் கோட்டை

படம் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன