ஒரு சிறு கீற்று – மிளகு வாசனையோடு

A page from the novel MILAGU I am writing now –

சாரதா தெரிசா தன் மகன் மருதுவோடு தங்கி இருக்க லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிப் போனது.

குளிர்காலம் பனிப் பொழிவும் அதிகக் குளிருமாக மெல்லக் கடந்து போகும் வருஷம் இது. நேற்றைக்கு சாயந்திரம் கூட பனிமனிதன் வந்தான்.

”அம்மா வெளியே பனி பெய்யுது. வாங்க, பொம்மை பண்ணலாம்”.

நேற்று மருது வாசலில் இருந்து மூச்சுத் திணறச் சொல்லியபடி குழந்தை மாதிரி ஓடி வந்தான்.

மலையாளத்தில் எழுத்தச்சன் எழுதிய அதியாத்ம ராமாயணத்தை படித்தபடி உட்கார்ந்திருந்தாள் சாரதா.

சாயந்திரம் கனமான இருளாக அப்பிக்கொள்ளப் போகிற சூசனைகள். இவ்வளவும் சாயந்திரம் ஐந்து மணி இருக்கக் கூடும். சுவர்க் கடிகாரத்தில் ஐந்து மணியே தான்.

”வாசலுக்கு வாங்க அம்மா, பனி விழறது நின்னு போயிடும். எடின்பரோ மாதிரி ராப்பூறா பனி பெய்யற ஊர் இல்லே லண்டன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?”

”நான் என்னத்தைப்பா கண்டேன்? பிறந்ததிலே இருந்து யார்க்‌ஷயர், அப்புறம் அம்பலப்புழை. கால்டர்டேல்லேயும் பனிப்பொழிவு அதிகம் தான்”.

அடுத்த வினாடி சாரதாவை இரண்டு கையாலும் இடுப்பில் பிடித்துத் தூக்கி, ஆடை விற்கும் அங்காடியில் மாடல் பொம்மை போல சுமந்து கொண்டு சிரித்தபடி மாடிப்படி இறங்கினான் மருது. வாசலுக்கு முன்னால் சிறு வட்ட வடிவ ஓய்விடத்தில் சிமெண்ட் பெஞ்சில் பூத்தாற்போல் அமர்த்தினான் அவளை.

பெஞ்சில் விழுந்திருந்த பனியைக் கையால் குவித்து அதற்கு முகமும், உடம்பும் உருட்டி உருட்டி உருவாக்கும்போது மருது தன்னையே மறந்திருந்தான்.

மிளகு விலை ஊக வர்த்தகத்தை விட இது எவ்வளவோ பரவாயில்லை என்று தெரிசாவுக்குத் தோன்றியது. எல்லாம் மருது பற்றித்தான்.

இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்களும், ரத்ன கம்பளங்களும், சிறு சிற்பங்களும் என்று தொடங்கி அனைத்து கலைப் பொருட்களும் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உதவித் தலைமை நிர்வாகி.

இது உத்தியோகம். மற்ற நேர ஈடுபாடு வேறே மாதிரி.

கமோடிட்டீஸ் ஃபார்வேர்ட் அண்ட் ஆப்ஷன்ஸ்- COMMODITY FUTURES, FORWARDS AND OPTIONS வர்த்தகம் அது. தானியங்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும், முக்கியமாக மிளகுக்கும், அபூர்வமான மலர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விலை என்னவாக இருக்கும் என ஊகித்து நடத்தும் ஊக வர்த்தகத்தில் வேலை நேரம் தவிர மூழ்கியிருப்பான். மிளகு விலைப் போக்கை கணித்து நடத்தும் வர்த்தகம் மருது செய்வது.

ஊக வர்த்தகம் என்றால் வர்த்தகம், ஊக விளையாட்டு என்றால் விளையாட்டு தான். மிளகு ஒன்று, இரண்டு மாத எதிர்காலத்தில் விற்பனையாகப் போகும் விலை ஊகிக்கப்பட்டு, அது சரியாகவோ, தவறாகவோ முடிய, கணிசமான தொகை கைமாறும். ஒரு நிலைக்கு மேல் சூதாட்டம் தான்.

பனிமனிதன் நன்றி en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன