விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும்

பரமேஸ்வரன் நாக்பூரில் விமானத்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது.

பத்து நிமிடம் தபால் வாங்க, கொடுக்க என்று பாசஞ்சர் ரயில் மாதிரி நாக்பூரில் நின்று வருவது இந்த விமான சேவையின் தினசரிப் பழக்கமாக இருக்கலாம். அப்படி இறங்கி மீண்டும் டேக் ஆஃப் ஆகும்போது யாராவது குறைகிறார்களா என்று பார்க்க வேண்டாமோ?

ரயில் என்றால் கூட்டம் அதிகமாக, நெரிசலும் மிக அதிகமாக இருக்கக் கூடும். விமானத்தில் மிஞ்சிப் போனால் ஐம்பது பேர் பயணம் வந்தாலே அதிகம். இவர்களில், பாதி வழியில் காணாமல் போனவர்கள் யார் என்று ஒரு நிமிடம் தலை எண்ணிப் பார்த்துவிட்டு, விமானத்தை மறுபடியும் பறக்க வைத்திருக்கலாம்.

என்ன கஷ்டமோ, பரமனை நாக்பூரில் விட்டுவிட்டு அவர் வந்த டில்லி – பம்பாய் பிளேன் பறந்து விட்டது.

கிரிக்கெட் விளையாட பிட்ச் தயார்ப்படுத்திய மாதிரி இருக்கும் இடம். அந்த துண்டு நிலத்திலும் விமானம் இறங்கி குதிரை வண்டி பிடித்து வீட்டுக்குப் போக நாக்பூர்காரர்கள் ஏதோ வரியாகக் காசு கொடுத்து விமான தாவளம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பரமன் என்ற பரமேஸ்வரனைக் கீழே இறங்க அனுமதிக்காமல் விமானக் கதவைத் திறந்து வைத்து, ”நாக்பூர் இறங்கறவங்க எல்லாரும் இறங்குங்க.. மத்தவங்க சீட்டிலேயே இருங்க… பம்பாய் பம்பாய் பம்பாய்…” என்று அழைக்காத குறையாக காத்திருந்த பத்து நிமிஷத்தில் ஒரு சிகரெட் புகைத்து விட்டு மறுபடி ஏறலாம் என்று பரமன் இறங்கி வந்தது தப்பாகப் போச்சு.

சொல்லி வைத்தாற்போல் அவரை மட்டும் அத்துவானக் காட்டில் விட்டுவிட்டு ’போனவன் போனாண்டி’ என்று விமானம் போயே போய் விட்டது.

பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

’இல்லாமல் இருந்தால், பரமு என்ற பரமேஸ்வரா, நீ வெய்யில் படிந்து உஷ்ணமேற்றிய மண் தரையில் புழு போல் ஊர்ந்து கொண்டிருப்பாய். கட்டைகளை வையாதே. அவை இல்லாமல் நீ இல்லை’.

வாஸ்தவம் தான். மனச்சாட்சி இடித்துக் காட்டியது சரிதான். பரமு தன் தாங்குகட்டைகளைக் கடவுள் போல பூஜிக்கிறவர். தாங்குகட்டைகள் எப்போதும் கூடவே உண்டு. தெய்வம்? கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வர வேண்டாமா?

தெய்வத்தை மறந்திருந்த மாசேதுங் எழுதிய சிவப்புப் புத்தகத்தை மராட்டியில் மொழிபெயர்த்து வெறும் நூறு ரூபாய் வாங்கிய பரிதாபமான காலத்தில் அவருக்கு தெய்வம் அருள் புரிய வரவில்லை. ஏழரைக் கோடி பிரதிகள் எல்லா மொழிகளிலும் சேர்த்து பிரசுரமானதாம் அந்தப் புத்தகம்.

சிவப்புப் புத்தகத்தை உடைப்பில் போடு. எங்கே வந்து சேர்ந்திருக்கிறேன், எப்படி ஊர் திரும்புவது என்று தெரியவில்லை. பெண்டாட்டி ஷாலினியும், மகன் திலீப்பும் வீட்டுப் பெரியவரான பரமேஸ்வரன் என்ற பரமன் இல்லாமல் எப்படி இருப்பார்கள்? ஊரெல்லாம் தேடுவார்கள். அழுவார்கள்.

ஒரு வினாடி கண் கலங்கி சுபாவமானார் பரமன். திலீப் அம்மா ஷாலினியையும் தன்னைத் தானேயும் சீராக கவனித்துக் கொள்வான். இத்தனை நாள் கூட இருந்து பரமன் என்ன செய்தார் குடும்பத்துக்கு? அவருக்கே நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தது. மறந்தார் அதை.வேறு என்னென்னமோ போல.

படம் – ஏர் இந்தியா பயண உணவு
நன்றி bangaloreaviation.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன