எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து – ஹொன்னாவர் நகரில் ஒரு பகல்பொழுது

ஹொன்னாவர் நகரின் பகல் நேரம் பொறுக்க முடியாத சூட்டோடு மெல்லக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஆயிற்று வெளியே போகிறபோது இந்தியர்கள் போல் மேல் குப்பாயத்தை, உள்சட்டையைத் துறந்து மாரில் சந்தனம் பூசிக்கொண்டு தெருவோடு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக, சுகமாக இருக்கும் என்று பெத்ரோ நினைத்துப் பார்த்தார். கள்ளிக்கோட்டை கிராமப் பகுதியில் பெண்களும் அப்படிப் போவார்களாம். மழைக் காலத்தில் கூடவா அப்படி நடந்து போவார்கள்?

இன்னும் இரண்டு வாரம் போனால் மழைக்காலம் வந்து விடும். மழை வந்தாலும் அடித்து விட்டு அது அவ்வப்போது ஓயும்போது வெப்பம் கூடுமே தவிரக் குறைவதில்லை. மழை அழிச்சாட்டியமாகத் தொடர்ந்து ஒரு வாரம் ராப்பகலாக அடித்துப் பெய்தால் தான் நிலம் குளிர்ந்து ஈசல்கள் பறக்கத் தொடங்கும். அந்தப் பொழுதுகள் மிளகுப் பயிர் வளரத் தேவையான வெப்பமும், நீர்வளமும் கொடுப்பவை என்று பெத்ரோ அறிந்திருந்தார்.

இரண்டு வாரம் முன் மிளகு திரளும் நேரம் வந்து சேர்ந்ததாக கடைத்தெருவில் பேச்சு எழுந்தபோது கொஞ்சம் முன்னால் நிகழ்ந்து விட்டது என்று வயதான வணிகர்கள் சொன்னார்கள். ஒரு நாள் பின்னாடி நிகழக் கூடாது. ஒரு நாள் முன்னாலும் நிகழ்ந்து விடக் கூடாது. அதன் குணத்தையும் விலைபோகும் பணமதிப்பையும் ஒரு கைப்பிடி மிளகை முகர்ந்து பார்த்தே நிச்சயிக்கக் கூடியவர்கள் அவர்கள்.

கள்ளிக்கோட்டையில் மழை ஹொன்னாவரை விட, ஜெர்ஸோப்பாவை விட அதிகமாகப் பொழியும். வெப்பமும், ஈரமும், வெள்ளப் பெருக்கும் இங்கே இருப்பதை விட இன்னும் குறைந்தது மூன்று மடங்காவது இருக்கும். கறுப்பு குறுமிளகு மலபார் இனமாக அங்கே விளைவது தான் உலகிலேயே உச்ச பட்ச விலைக்கு விற்கப்படுவது. பெத்ரோவின் மாமனார் குடும்பத்தில் ஒரு பகுதி போர்ச்சுகல் தலைநகரம் லிஸ்பனில் வாசனை திரவியங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதில் நூறு வருடத்துக்கு முன்பிருந்தே ஈடுபட்டவர்கள். வாஸ்கோ ட காமாவுக்கு ஐரோப்பாவில் இருந்து கடல் வழியாக ஆப்பிர்க்கக் கண்டத்தைச் சுற்றி நன்னம்பிக்கை முனை தொட்டு மேற்கில் திரும்ப இந்தியா வரும் என்று கண்டறிய கப்பல் பயணம் மேற்கொள்ள பண உதவி செய்த அரசர்கள், பிரபுக்கள், பெரும் வணிகர்களில் அவர்களும் உண்டு.

பெத்ரோவின் மாமனார் சந்தியாஹோ வேறு யார் பெயரிலோ கள்ளிக்கோட்டையில் நிலம் வாங்கினார். நிலத்தில் மிளகு பயிர் செய்யக் கூலிக்கு ஆளமர்த்தினார். சாகுபடி செய்து வந்ததை வாங்குவதாகப் பெயர்பண்ணி விற்பனை விலை நிர்ணயித்தார். அந்தத் தொகையில் ஒரு சிறு விழுக்காடு தொழிற்கூலியாகக் கொடுத்து மீதி எல்லாம் எடுத்துக்கொண்டார்.

சென்னபைரதேவி மகாராணி இந்தக் குற்றம் ஒன்றைத்தான் கண்டு பிடித்திருக்கிறாள். சந்தியாஹோ லிஸ்பனில் இருந்து இங்கே வந்ததே மறைவாக இப்படி வாசனைப் பொருள் விவசாயத்தில் ஈடுபட்டு குறைந்த விலைக்கு மிளகு கிடைக்க வழி செய்யத்தான். அவருடைய கடியார விற்பனைக் கடையும் போர்த்துக்கீசிய வெள்ளிப் பாத்திரங்கள் விற்கும் கடையும் முட்டை வியாபாரமும் இந்த மிளகு மறைவு சாகுபடிக்கு முன்னால் திரை போடத்தான்.

அந்த கடியாரக் கடையில் தான் ஐந்து வருடம் முன்பு பயிற்சி பெறும் ராஜப் பிரதிநிதியாக இந்தியாவில் கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தபோது மரியாவை முதலில் சந்தித்தார் பெத்ரோ. சந்தியாஹோவின் ஒரே மகள்.

இடுப்பு கடியாரம் ஓடவில்லை என்று ஒக்கிட எடுத்துப் போனபோது அரச பிரதிநிதியாக இன்னும் சில மாதங்களில் பதவி ஏற்கப் போகிறவர் பெத்ரோ என்று தெரிந்த சந்தியாஹோ ஒரேயடியாக உபசாரமும் மரியாதையும் செய்தார் அப்போது. நீ யாராக இருந்தால் எனக்கென்ன, கடியாரம் ஒக்கிட கொடுக்க வந்திருக்கிறாய். சரி செய்தால் காசு தருவாய். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போவதில்லை என்று அலட்சிய பாவம் காட்டியவள் மரியா.

அடுத்த ஆறு மாதத்தில் அவள் பெத்ரோவின் ஆகிருதியிலும் தன்மையான குரலிலும் நடத்தையிலும் மனதைப் பறிகொடுத்தாள். அவளுடைய அதிகாரமான அழகில் ஈர்க்கப் பட்டார் பெத்ரோ. வயது வித்தியாசம் மூன்று வருடங்கள் இருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை.

பெத்ரோவை விட மரியா மூன்று வயது மூத்தவள். மாதாகோவில் மதகுரு கல்யாணத்துக்கு முன் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து திருமண நிச்சய ஓலை வாசிக்கும்போது இந்த வயது வித்தியாசத்தைச் சொல்லி யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்க, மரியா எழுந்து நிற்காமல் இருந்தபடியே சொன்னாள் –

அச்சன், இது என் கல்யாணம். பெத்ரோவோட கல்யாணம். இதுலே யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? இருந்தா எழுந்திருக்கச் சொல்லுங்க. இப்பவே ரெண்டு கன்னத்திலும் அறைய கை துருதுருக்கிறது.

அப்புறம் ஒருத்தன், ஒருத்தி எழுந்திருக்கவில்லையே. பெத்ரோவுக்கு இப்போதும் மரியாவின் அலாதி துணிச்சலைப் பற்றி ஆச்சரியம் அடங்கவில்லை.

மரியா பிள்ளைப்பேற்றுக்காக கள்ளிக்கோட்டை போய் ஆறு மாதமாகிறது. போகும்போதே அவரை நாடி பிடித்த மாதிரி சரியாகக் கணித்து மிரட்டி விட்டுப் போயிருக்கிறாள் –

ஓலா சென்ஹார் பெத்ரோ! நான் இல்லாத நேரத்தில் வேலைக்காரப் பெண்பிள்ளை, குசினிக்காரி, அடுத்த, எதிர் வீட்டுப் பெண் என்று சந்தோஷமாக ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டாம். திரும்பி வந்ததும் தெரியாமல் போகாது அதொண்ணும். அப்போது உம் உறுப்பு உம்மிடம் இருக்காது. வெட்டிப் போட்டுவிடுவேன். ஜாக்கிரதை.

ஹொன்னாவர் கடைத்தெருவில் சாரட் போகும்போது தீடீரென்று தன் இடுப்புக்குக் கீழ் அவசரமாகத் தொட்டுக் கொண்டார் பெத்ரோ. அவருக்குப் பின்னால் சாரட்டில் பாதுகாப்பாக நின்று வந்த ஊழியன் குழம்பிப் போய் துரை, கடியாரம் உங்கள் குப்பாயத்தில் இருக்கிறது என்று கூவினான்.

நல்ல வேளை மரியாவின் மிரட்டல் அவனுக்குத் தெரியாது. தெரிந்திருக்காது. ராட்சசி சொல்வதோடு நிற்க மாட்டாள். முழுக்க நனைந்தே போனார்.

வீட்டு வாசலில் கஸாண்ட்ராவும், தோட்டக் காரனும், எடுபிடிகள் இருவரும் காத்திருப்பதைப் பார்த்தபோதுதான் வாசல் கதவைக் காலையில் பூட்டி விட்டு சாரட் ஏறியது நினைவு வந்தது.

சாதாரணமாக தன் தனி அறையைப் பூட்டி வைத்துவிட்டு மற்றபடி வீட்டை கஸாண்ட்ரா அல்லது அவள் இல்லாதபோது மூத்த வேலைக்காரர் ஒருத்தரின் நிர்வாகத்தில் விட்டுத்தான் போவது வழக்கம். இன்றைக்குப் புறப்படும்போது கஸாண்ட்ராவோ, மற்ற வேலைக்காரர்களோ வராமல் போனதாலோ என்னமோ பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

“பூட்டிட்டு போயிட்டீங்களே எஜமான்” என்றான் தோட்டக்காரன் அபத்தமாகச் சிரித்தபடி. “உன்னை உள்ளே வச்சுப் பூட்டாமே போனாரே, சந்தோஷப்படு என்றாள் கஸாண்ட்ரா.

ஜோக் அருவி Pic Jog Falls (near Gerusoppa) Ack Wikimedia Commons

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன