மெட்டுக்கு பாட்டெழுதுவீரா? – 1975 நாவலில் இருந்து

“சினிமா மெட்டுலே பாட்டு எழுதுவீங்களா?” பேங்க் கவுண்டருக்கு அந்தப் பக்கம் இருந்து இந்த விநோதமான கேள்வி எழுந்தபோது அங்கே கிட்டத்தட்ட இருபது பேர் நெருக்கி அடித்து நின்றுகொண்டிருந்தார்கள்.

எலக்ட்ரிக் மாரிமுத்து தான் என்னை இப்படிக் கேட்டவர். கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் கேஷியரிடம் போய்விட்டார்.

மாதத்தின் முதல் வாரம் என்பதால் கரண்ட் சார்ஜ் என்று அழைக்கப்படும் மின்சாரக் கட்டணம் எல்லாத் தெருக்களிலும் இருந்து நிறைய வசூலாகி இருக்கும். அதெல்லாம் பேங்கில் தினசரி கொண்டு வந்து கட்டிவிட வேண்டும். மாரிமுத்து பரபரப்பாகச் செயல்படும் காலம் அது.

அதற்கு அப்புறம் மூன்றாம் வாரத்தில் பக்கத்து கிராமங்களில் பம்ப்செட் மோட்டார் மின்சாரக் கட்டணம் செலுத்தச் சொல்லி அலைய வேண்டியதும் அவர் வேலை. கட்டாவிட்டால் பரவாயில்லை. யார் யாரிடம் கேட்டார் என்று தகவல் வைத்திருக்க வேண்டும் என்பது ஆபீசில் அவருக்கு இடப்பட்ட அரச கட்டளையாம்.

அது கிடக்கட்டும். நான் சினிமா மெட்டில் பாட்டெழுதும் நபராக அவருக்கு ஏன் தோன்ற வேண்டும்?

இலக்கியப் பத்திரிகைகளுக்கு அதிக பட்சம் பதினைந்து வரிகளில் புதுக் கவிதை எழுதி அனுப்பி அது பிரசுரமானால் தெரிந்தவர்கள் வந்தவர்கள் போனவர்களுக்கு பிரதியைக் காட்டிக் கொண்டு போட்டி பேங்கில் ஒரு நண்பர் உண்டு. ஒரு தடவை எல்லோரையும் கூப்பிட்டு ஆனந்த பவானில் டிபன் வாங்கிக் கொடுத்து அந்த வாரம் அச்சில் வந்த அவர் கவிதையை எச்சில் கையோடு உரக்கச் சொன்னார் –

‘நீ அருகில் இருந்தால்
ஒரு நாள் கூட
ஒரு நொடியாக நகர்கிறது.
நீ இல்லாத ஒரு நிமிடம்
ஒரு யுகமாகிறது’.

அல்வாவை அசைபோட்டபடி மற்றவர்களோடு சேர்ந்து நானும் கைதட்டி மகத்தான கவிதை என்று மனசறிந்து பொய் சொன்னேன் அப்போது. அதற்குத் தண்டனையாகத்தான் தான் மெட்டுக்குப் பாட்டெழுதும் ஆளாக இப்போது அடையாளம் காணப்பட்டேனோ.

”சார், கதை-வசனம்-பாடல் செஞ்சிருக்கீங்களா?”

அளவு குறைவாக வீசப்பட்ட பந்து அது. சந்திரசேகரின் சுழற்பந்து வீச்சைக் கவனமாகத் தடுத்தாடும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அல்வின் காளிசரண் போல, ஜாக்கிரதையாகக் கவுண்டருக்கு அந்தப் பக்கம் குனிந்து பார்த்தேன். நாலடியாராக வெடக்கன் நின்று கொண்டிருந்தார்.

காசினிப்பட்டியில் பள்ளிக்கூட வாத்தியார் அவர். கணக்கு திறக்க வந்தது நாலு மாதம் முன்பு. VEDAKAN என்று கணக்குத் திறப்பதற்கான படிவத்தில் பெயரைப் பார்த்து மிஸ்டர் வெடக்கன் என்று பாஸ்புக் தரும்போது கூப்பிட்டேன். அந்தப் பக்கம் இருந்து சகலரும் ஒரே குரலில் முழங்கினார்கள் – வேதக்கண். வேதக்கண் .. வேதக்கண்..

அதுதான் அவர் பெயராம். இங்கிலீஷ் ஏமாற்றிய நாள் அது.

வேதக்கண் வாத்தியாருக்குப் படிப்பதில் அப்படி ஒரு ஈடுபாடு. தோளில் துணிப்பையில் எப்போதும் ஏதாவது புத்தகமும் பத்திரிகையும் யாராவது எங்காவது விநியோகித்த பிட் நோட்டீசும் அங்கே பத்திரமாக இருக்கும். புத்தகம் ஒருநாள் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் ஆக இருந்தால் மறுநாள் கருங்குயில்குன்றத்துக் கொலையாக இருக்கலாம். அல்லது தமிழ்வாணனின் பேய் பேய்தான். எல்லாம் நூல்நிலையப் புத்தகங்கள்.

“லைப்ரரியிலே போய் கண்ணை மூடிக்கிட்டு அலமாரிப் பக்கம் போவேன். ஏதோ ஒரு அலமாரி, அங்கே கண்ணை மூடிக்கிட்டு எடுத்த ஏதோ ஒரு புத்தகம்”.

இரண்டு நாள் அதை நடுவில் எங்காவது இருந்து படித்து இன்னும் நடுவிலேயே இருக்கத் திரும்பிக் கொடுத்து விடுவார். அவர் படிக்கும் பத்திரிகையும் அவர் தேர்வு இல்லை.

“கடையிலே போய்த் தமிழ்ப் பத்திரிகை தாங்கன்னு கேட்பேன். என்ன கொடுக்கறாங்களோ அதைப் படிச்சுடுவேன்”

“ஆமா, சமயத்திலே அது இந்துநேசனா இருக்கும்”, காத்திருந்து கிடைத்த சைக்கிள் கேப்பில் யாரோ குதிரை வண்டி ஓட்டினார்கள். இந்தப் பக்கத்துக் குடிமக்களுக்கே குசும்பு ஜாஸ்தி. உடம்போடு ஒட்டிப் பிறந்தது.

வேதக்கண் படிக்கிறாரோ என்னமோ, இந்துநேசனை நேசிக்கிற கூட்டம் நாங்கள். எமர்ஜென்சி கால பத்திரிகை சென்சார் ஒரு தடவை கூட இந்துநேசனைத் தடை செய்யவில்லை என்பதிலிருந்தே அதன் மகத்துவம் புரியும்.

வேதக்கண் வாத்தியாரும் அவருக்கு முன்பாக எலக்ட்ரிக் மாரிமுத்துவும் என்னிடம் விசாரித்தது ஏதாவது குசும்பு தானோ என்று நான் குழம்பிப் போய் நிற்க, பக்கத்தில் சீரக வாடை.

மேனேஜர் தான். சீரணம் சீராக சீரகம் சாப்பிடுங்கள் என்று, வேறு யார், பள்ளிக்கூட தமிழாசிரியர் கம்பநாட்டார் தான் எதுகையோடு அறிவுரை கொடுக்க, மேனேஜர் பக்கத்தில் வந்தாலே அஞ்சறைப்பெட்டி வாசனை.

”பாட்டு கட்டுவீரா?”

பாரதியார் பாரதிதாசனை சீரகம் மணக்கக் கேட்க, “நீங்களுமா சார்” என்றேன்.

“பின்னே உங்க பேரு போட்டிருக்கு?”

மேனேஜர் நாலாக மடித்த ஒரு நோட்டீஸை ஜிப்பா பையில் இருந்து எடுத்து நீட்டினார்.

அது நோட்டீஸ் என்று சொன்னால் சகலரும் ஆட்சேபிப்பார்கள். இந்தப் பக்கம் இருபது அம்சமும் அந்தப் பக்கம் ஐந்து அம்சமும், நடுவில் அம்மா, மகன், லோக்கல் பிரமுகர்களின் பயத்தில் உறைந்த தலைகளும், திடீரென்று நினைவுக்கு வர ஒரு விநாயகர். பிளந்த மார்பில் ஏசுநாதர். மூன்றாம் பிறைச் சந்திரன், நட்சத்திரம். கல்யாணப் பத்திரிகை போல கந்தர்வர்கள் வேறே றெக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தார்கள். எல்லாவற்றோடும் கீழே நடுத்தர சைஸில் தமிழ்நாட்டு அரசுச் சின்னமான கோபுரம், அதற்கு நேர் மேற்கே மத்திய அரசின் சிங்கச் சின்னம் அடித்திருந்தது.

சிங்கங்கள் எல்லாம் வாயை இறுக மூடிக் கண்ணையும் அடைத்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. பெரிய எழுத்தில் தலைப்பு : இருபது – ஐந்து திட்டக் கலைவிழா.

மாநில மத்திய அரசு நிறுவங்கள் பங்கு பெறும் இருபது அம்சத் திட்டக் கலைவிழா – நாடகம், நாட்டியம், இசை, பொம்மலாட்டம், மாறுவேடம்..

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன