காகிதங்கள், மேலும் காகிதங்கள்

குங்குமம் பத்தி – ‘அற்ப விஷயங்கள்’

தினசரிப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு தெருவோடு நடந்தால், பின்னால் இருந்து குரல். ‘ஏன் சார், நான் மாஞ்சு மாஞ்சு சுத்தம் செஞ்சுக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு குப்பை போட்டுக்கிட்டுப் போறீங்களே’.

திரும்பிப் பார்க்கிறேன். தலையைப் தழையத் தழைய வாரி மல்லிகைப் பூ சூடிக் கொண்டு மாநகரத் துப்புரவில் ஈடுபட்டிருக்கும் நீல் மெட்டல் பனாகா நிறுவனப் பெண். அவள் சொன்னது உண்மைதான். அவள் சுத்தமாகப் பெருக்கி குப்பை செத்தை எல்லாம் ஓரமாகக் குவித்திருந்த தெருவில் நான் காகிதம் காகிதமாக உதிர்த்தபடி நடந்துகொண்டிருக்கிறேன். என்ன காகிதம் அதெல்லாம் என்று குனிந்து பார்ப்பதற்குள் செல்போன் அடிக்கிறது. என்னுடையது இல்லை. அந்தப் பெண்ணுடையது. அவள் வாரியலை சுவரில் சாய்த்து வைத்தபடி பேச ஆரம்பிக்கிறாள். ‘சாயந்திரமா? சத்யம் தியேட்டர்லே ஈவினிங் ஷோ ரிசர்வ் செஞ்சு வச்சிருக்கேனே’.
தெருவில் நான் உதிர்த்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்குகிறேன். எல்லாம் ஆர்ட் பேப்பரில் அச்சிட்ட விளம்பரங்கள். நான் வாங்கிய தினசரிப் பத்திரிகைக்கு உள்ளே யாரோ சிரத்தையாகச் செருகி அனுப்பி இருக்கிறார்கள். தாழப் பிடித்தபடி தெருவில் நடந்தபோது உதிர்ந்த இந்தக் காகித மலர்கள் மொபைல் பெண்ணின் பொறுமையை மொத்தமாகச் சோதித்து விட்டிருக்கின்றன.

கொத்தாக அவற்றை ஒரு கையில் அள்ளிக் கொண்டு இன்னொரு கையில் தினசரிப் பத்திரிகையை ஜாக்கிரதையாக சமதளத்தில் இருக்கும்படி பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன். மூக்குக் கண்ணாடியைத் தேடி அணிந்தபடி, கையில் வைத்திருந்த விளம்பரக் காகிதங்களைப் பார்க்கிறேன். பிட்ஸா விற்கும் கடை, தந்தூரி ரொட்டி சுடச்சுடக் கிடைக்கும் பஞ்சாபி தாபா, மாமி மெஸ், ஆம்பூர் பிரியாணி வீட்டில் சப்ளை என்று முழுக்க சாப்பாட்டு ரகம்.

ஒவ்வொரு விளம்பரமாக எடுத்து அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை விளித்தால், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, மீன் குழம்பு, அவியல், புளிசேரி, ருமாலி ரொட்டி, சென்னா பட்டூரா, பட்டர் சிக்கன், காளான் பிட்ஸா, ஆலு பரட்டா என்று வீடு முழுக்க சாப்பாடு அடைத்த அட்டைப் பெட்டிகளால் நிரம்பி விடும். தம் பிடித்து அத்தனையும் சாப்பிட்டு வெறும் அட்டைப் பெட்டிகளை வாசல் குப்பைக் கூடையில் போட்டால் மல்லிகைப் பூ சூடிய பெண் சுத்தப்படுத்த வரமாட்டாள். அவள் மாலைக் காட்சிக்கு சினிமா போக டிக்கெட் எடுத்திருக்கிறாள்.

விளம்பரக் காகிதங்களை மேசை மேல் வைத்துவிட்டுப் பத்திரிகையைப் பிரிக்கிறேன். தனியாக ஒரு அட்டை விழுகிறது. இதுவும் விளம்பரம்தான். வீட்டில் கொசுத் தொல்லை இல்லாமல் இருக்க, ஜன்னலில் எல்லாம் சன்னமான வலை அடைக்க வேணுமாம். சலுகை விலையில் கிடைக்கிறதாம். சாம்பிளுக்கு ஒரு துண்டு வலையையும் அட்டையில் ஸ்டேப்ளர் அடித்து அனுப்பியிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், கடந்த பதினைந்து வருடத்தில் இப்படி கொசுத் தடுப்பு வலைக்கான அட்டை என் தினசரிப் பத்திரிகையிலிருந்து பத்தாயிரம் தடவையாவது உதிர்ந்து விழுந்திருக்கும். அவை ஒவ்வொன்றிலும் இருந்து சாம்பிளாக வந்த வலையை எல்லாம் எடுத்து சேகரித்து வைத்திருந்தால் இன்னேரம் என் வீடு, எதிர் வீடு, பக்கத்து வீடுகளில் எல்லாம் கொசு வராமல் பாதுகாப்பு கொடுத்திருப்பேன். இந்த அண்டை வீட்டார் வாங்கும் தினசரி பத்திரிகையில் இருந்தும் சாம்பிள் கொசு வலை இன்னும் நிறைய விழுந்திருக்கும். அதையும் சேர்த்தால் எங்கள் தெருவையே கொசு தடுப்பு பிரதேசமாக்கி விழா எடுத்திருக்கலாம். ஆமாம், இப்படி இலவசமாக வலையை வெட்டி வெட்டி அனுப்பிய வகையில் அந்தக் கம்பெனிக்கு இழப்பு என்ன? நிகர லாபம் எவ்வளவு?

மேசையைப் பார்க்கிறேன். வரிசையாக அடுக்கி வைத்த இன்னும் சில பத்திரிகைகள். இதெல்லாம் நான் வாங்குவது இல்லையே. எடுத்துப் பிரித்தால் இலவசமாக வீடு வீடாக வீசி எறியப்படும் பேட்டைப் பத்திரிகைகள். ஏழெட்டு வருடம் முன்னால் மாம்பலத்துக்கு ஒன்று, மந்தவெளிக்கு ஒன்று, அடையாறுக்கு இன்னொன்று என்று ஒரு சில பேட்டைப் பத்திரிகைகளே இருந்தன. என் வீட்டுக்கு வந்ததில் ராண்டார் கை வருடக் கணக்காக லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் எழுதுகிறார் என்று நினைக்கிறேன். இப்போது, அந்தப் பத்திரிகையோடு இன்னும் ஏழெட்டு. எல்லாமே எங்கள் பேட்டை செய்திகளை சுடச்சுட வழங்குகிறவை. வாரப் பதிப்புகள்.

எல்லா பேட்டை பத்திரிகையிலும் கொஞ்சம் போல் செய்தி, அந்த ரோடு பழுதாகிக் கிடக்கிறது, இந்தத் தெருவில் நாய் உபத்திரவம், இங்கே தெருவிளக்கு எரியவில்லை போன்ற லோக்கல் செய்திகள். லோக்கல் பாத்திரக்கடை, லோக்கல் நகைக்கடைக்கு நாலு சதுர செண்டிமீட்டர் விளம்பரங்கள். இதை நம்பித்தானா நியூஸ் பிரிண்ட் காகிதம், அச்சுக்கூலி, ஆபீஸ் நிர்வாகம், விநியோகம் என்று செலவு செய்து பேட்டைக்கு ஏழு பத்திரிகை இலவசமாக நடக்கிறது? இவர்களின் பிசினஸ் மாடல் என்ன? இதுபோல் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த முடியுமா?

(கடந்த வாரம் குங்குமத்தில் வெளியானது)
ஆகஸ்ட் 28, 2008 வியாழக்கிழமை காலை 5:00 மணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன