நெம்பர் 40, ரெட்டைத் தெரு – க்ரேஸி மோகன்

 

க்ரேஸியின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்

இந்த 2008-ம் ஆண்டு பல விதத்தில் எனக்கு முக்கியமானது. மூன்று வருட இடைவெளிக்கு அப்புறம் மறுபடி ஒரு இசை விழா, சென்னை சங்கமம் என்று மகிழ்ச்சியாகத் தொடங்கி, பிப்ரவரி மாதம் சட்டென்று ஒரு மாபெரும் துயரத்தோடு முடிவுக்கு வந்தது – சுஜாதாசார் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் மனது நம்ப மறுக்கிறது. தனிப்பட்ட முறையிலும், தமிழ் இலக்கிய வாசகனாகவும் எனக்கு ஏற்பட்ட மாபெரும் சோகம் அது.

பேரிழப்பில் உருவாகும் பிறப்பாக, பிப்ரவரி 28க்கு அடுத்த இரண்டு நாட்கள் என்னளவில் கூடுதல் பாதிப்பை வாழ்க்கையில் ஏற்படுத்தி, புது திசைகளில் அடியெடுத்து வைப்பதற்குத் தொடக்கம் குறித்தவை. துக்கத்தை மனதில் ஒரு ஓரமாக வைத்து, சுஜாதா சார் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த டைரக்டர் வசந்திலிருந்து தொடங்கி அந்த இரண்டு நாட்களில் என் நட்பு வளையம் விரிந்ததை ஒரு செய்தியாக மட்டும் முன்வைக்கிறேன். நண்பர் மனுஷ்யபுத்ரன் ஏற்பாடு செய்து நடத்திய இரங்கல் கூட்டத்துப் பின்மேடையில் கிடைத்த பெரும்பாலும் திரையுலகைச் சார்ந்த புது நண்பர்களின் பட்டியலையும் இங்கே தர உத்தேசமில்லை. அதில் ஆத்மார்த்தமான, மிக நெருங்கிய நண்பராகக் கனிந்த ஒரே ஒருவரைப் பற்றி மாத்திரம் இது. என் அன்புக்குரிய க்ரேஸி மோகன்.

க்ரேஸியின் நகைச்சுவை முகம் தமிழகம் முழுக்கப் பிரபலமானது. யாரையும் புண்படுத்தாத, இரட்டை அர்த்தமோ அதற்கு மேலுமோ தொனிக்காத நகைச்சுவை இவருக்கே உரியது. டெலிவிஷன் வந்து மேடை நாடகம் காணாமல் போய்விட்டது என்றோ, தமிழ் நாடகம் சென்னை தாண்டி செங்கல்பட்டுக்குக் கூடப் போகாது என்றோ நினைப்பவர்கள் க்ரேஸியின் புதிய ‘சாக்லெட் கிருஷ்ணா’வை ஒரு தடவை பார்த்தால் போதும். சென்னையோ, சேலமோ, குடந்தையோ, அவை நிறைந்து, தமிழில் நாடகம் நடத்துகிற ஒரே நட்சத்திரம் க்ரேஸிதான். (சாக்லெட் க்ருஷ்ணா பற்றி, க்ரேஸியின் நட்பான குழு பற்றி, நண்பர் மாது பாலாஜி, வரதுக்குட்டி கோபி பற்றி எல்லாம் சாவகாசமாக எழுதுகிறேன்).

க்ரேஸியின் நகைச்சுவை மேடையிலோ திரையிலோ நிகழ்த்தி முடித்து நிஜ வாழ்க்கைக்குத் திரும்பியதும் காணாமல் போகிற கற்பனை மட்டுமான கலை இல்லை. அவருடைய வாழ்க்கை பற்றிய பார்வையின், ஆளுமையின் நீட்சிதான் அது என்பதால் அசலானது. இந்த அபார நகைச்சுவையோடு, ஒரு தேர்ந்த இலக்கிய ரசிகராக, ஒரு நல்ல ஓவியராக, சிறப்பான மரபுக் கவிஞராக க்ரேஸி மோகன் எனக்குப் பரிச்சயமாகிப் பழகிக் கொண்டிருப்பது கடந்த ஆறு மாதமாக.

தினசரி எஸ்.எம்.எஸ்ஸில், தொலைபேசியில் வெண்பாவும், கேள்வி பதிலும், நகைச்சுவையும், ரசித்த இலக்கியமும், புதுக் கவிதையுமாக க்ரேஸி கலகலக்க வைக்காத நாள் இல்லை. அவருக்கு பதில் எழுதவே கிட்டத்தட்ட நூறு வெண்பா நானும் இயற்றி விட்டேன்.

‘என்ன, வெண்பா அம்பு விட்டுக்கறீங்களா தினமும் மோகனும் நீங்களும்?’ கண்ணில் ஒரு மெல்லிய சிரிப்போடு விசாரிப்பார் கமல் எனக்கு முன்னால் என் வெண்பா க்ரேஸி உபயத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.

’40, ரெட்டைத் தெரு’ நூலுக்கு எழுதிய முன்னுரையை க்ரேஸி என்னிடம் படித்துக் காட்டியது போன வார இறுதியில் ராத்திரி பத்து மணிக்கு. அன்றைக்கு மூன்று காட்சி சாக்லெட் க்ருஷ்ணா நாடகம் முடித்து, மருத்துவனையில் நெருங்கிய உறவினரை அட்மிட் செய்து, கூட இருந்துவிட்டுத் திரும்பி வந்து, எழுத உட்கார்ந்தவர் முடித்து ஈமெயிலில் அனுப்பியதாக எஸ்.எம்.எஸ் அனுப்பியது காலை 1:11 மணிக்கு. கிருஷ்ணன் மேக்கப்பைக் கலைக்காமல், மூக்குக் கண்ணாடியோடு (மேடையில் தோன்றும் கிருஷ்ணனும் கண்ணாடி அணிந்த நாலு கண்ணன் தான்) வாயில் வி.எஸ்.பி மென்றபடி (வெற்றிலை, சீவல், புகையிலை) க்ரேஸி இந்த முன்னுரையை எழுதிக் கொண்டிருக்கும் காட்சி மனதில் விரிகிறது.

‘தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ’ என்ற கம்பனின் வரிகளை க்ரேஸியில் காண்கிறேன். அவருடைய இந்த முன்னுரை என்னை பயப்பட வைத்திருக்கிறது. அந்த நல்ல நண்பரின் நம்பிக்கை வீண்போகாமல் நான் இனிவரும் நாட்களில் எழுதிப் போக வேண்டும். கண்ணன் அருள் உண்டு திண்ணம்.

தேங்க் யூ க்ரேஸி!

இரா.முருகன், ஆகஸ்ட் 27 2008, புதன்கிழமை காலை 5:00 மணி

——————————————————————————————-

நெம்பர் 40, ரெட்டைத் தெரு
————————————-

க்ரேஸி மோகன் முன்னுரை – சில பகுதிகள் இங்கே

—————————————————————————————————————————-
கல்கி ”க்ரேஸியைக் கேளுங்களில்” கேட்டு நான் இன்னமும் பதிலளிக்காத கேள்வி….” உங்களுக்குப் பிடித்த வசனம் எது? (நீங்கள் எழுதிய சினிமா வசனமாகவும் இருக்கலாம்)….நான் பார்த்த சினிமா, நாடகங்களில் தேடியதில் சந்துஷ்டியாக ஏதும் அகப்படவில்லை….சினிமா வெண்ணெய்யை விட்டு சிறுகதை-நாவல் நெய்யில் அலைய ஆரம்பித்தேன்….”கண்டேன் வசன சீதையை”…. ”சாமி….இந்த தராசு எளுதின காயிதத்துக்கும் எளுதாத காயிதத்துக்கும் உள்ள எடை வித்யாசம் காட்டும்”-தி.ஜானகிராமனின் சிறு கதையில் வரும் இந்த வசனம் ”எதுக்கு நீயெல்லாம் வசனம் எழுதறே?” என்ற ரீதியில் என்னை விசனமாகப் பார்த்தது….” இனிமே வசனம் எழுதினே….உடைஞ்ச கைக்கும் உடையாத கைக்கும் உள்ள வித்யாசத்தை தராசு காட்டும்” என்ற தோரணையில் அச்சுறுத்தியது நான் அடுத்ததாகப் படித்த வசனம்….அது, அசந்தர்ப்பமாக நிகழ்ந்து விட்ட கர்பத்தைக் கலைக்க வந்த பெண்ணிடம் மருத்துவச்சி கூறுகிறாள் ” நாளைக்கு காலீல ஒண்ணும் சாப்பிடாம வெறும் வயத்தோட வாம்மா…வெறும் வயத்தோட அனுப்பிடறேன்”-இரா.முருகனின் ”நாள்” சிறுகதையில் வரும் இந்த வசனத்தை நான் சொல்லாத ”நாள்” கிடையாது , சொல்லாத ”ஆள்” கிடையாது, கமலஹாசன் உட்பட….சிறு-கதை தொகுப்புக்கள், அரசூர்-வம்சம் நாவல் என்று பாராயணம் செய்ததில், இந்த சீதக்காதிக்கு நான் சீத்தலைச் சாத்தனாராகி விட்டேன்….

…எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரை நடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் முற்றும் போடும் தைரியம், விஞ்ஞான பரிபாஷைகள், சாதுர்யமான சம்பாஷனைகள், மரபு PLUS அமரபு கவித்துவம்….இப்படி சுஜாதா போல இந்த முருகனுக்கு ஆறு முகம் உண்டு….

இவரோ இலக்கியவாதி….நானோ காமெடி கலக்கியவாதி….பிரபந்தத்திற்கு ”பெரிய-வாச்சான் பிள்ளையைப்” போல நான் வாஞ்சையான நட்பால் முருகனுக்கு ”வந்து-வாச்சான் பிள்ளை”….

இதுக்கு ”ரெட்டைத் தெரு ராட்சசர்கள்” என்று கூட நாமகரணம் சூட்டியிருக்கலாம்….இது முருகனின் பால்ய-BIOGRAPHY….”YOUTH IS WASTED ON YOUNG PEOPLE” என்பார் OSCAR-WILDE….இதையே ”கிளரொளி இளமை கெடுவதன் முன்னர்” என்பார் நம்மாழ்வார்….முருகன் முதிர்ச்சியோடு இளமையில் இருந்திருக்கிறார்….எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்யாசம்….எழுத்தாளன் பார்க்கிறான்….மற்றவர்கள் பராக்கு பார்க்கிறார்கள்….பால்யத்தில் பராக்குப் பார்த்ததை, எழுத்தாள எதிர்பார்ப்பில் த்ருண மாத்திரம் விடாது பதிவு செய்தது இவரது தீவீரத்தைக் காட்டுகிறது….EMOTIONS RECOLLECTED IN TRANQUILITY என்று WORDS-WORTH சொன்னது போல தான் ”கற்றதை, பெற்றதை, விற்றதை அப்புறம் மற்றதையெல்லாம்” ஆற அமர அசைபோட்டு ரெட்டை(தெரு) இலையில் பறிமாறியிருக்கிறார் இந்த டிஜிடெல் கேண்டீன்காரர்….தான் OBSERVE செய்ததை அறுசுவையோடு SERVE செய்திருக்கிறார்….

சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு….நாம் ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது, எசகேடாக எதிரில் வந்து, ” இது பிரமாதமான புக்….நான் ஏற்கனவே படிச்சாச்சு” என்று, அதில் ஒரு வரி விடாமல் ஒப்பித்து விட்டு, நம்மை செவிடனாக பாவித்து ”நான் சொன்னதை காதுல போட்டுக்காதீங்க….நீங்களும் படிச்சு பாருங்க”என்பார்கள்….நாம் அதற்கு பிறகு அந்த புத்தகத்தைப் படிக்கும் போது , நமக்கு என்னவோ ”ரெண்டாம் தாரம்” கல்யாணம் செய்து கொண்டது போல இருக்கும்….அதனாலேயே இந்த தொகுப்பில் வரும் சம்பவங்களை, அது தொடர்பான ஹாஸ்யங்களை, முந்திரி கொட்டை போல சொல்லாமல், உள்ளங்கை நெல்லிக் கனி போல, நீங்களே அனுபவிக்க விட்டு விடுகிறேன்…. ஹாஸ்யப் புத்தகத்தைப் படிப்பது முதலிரவைப் போல….”சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை”….

————————————————————————————————————————–

(நூல் இந்த மாதம் வெளியாகிறது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன