கல்யாணம் கச்சேரி உல்லாசம் எல்லாமே

 

குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி

‘இந்தத் தேதியில் கல்யாணம். ரிசப்ஷன். வந்து வாழ்த்தவும்.’ ஆடி பிறந்து ஆத்தா கோவில்களில் ஒலிபெருக்கி கட்டி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு போட ஆரம்பிக்கும்வரை தொடர்வது திருமண அழைப்புகளின் படையெடுப்பு. மனசு நிறைய அன்பும், வாழ்த்த வாயில் வார்த்தையும் இருக்குது தான். ஆனாலும் ஒரு கல்யாணப் பந்தல் விடாமல் ஏறி இறங்கினால் ஆபீசில் லீவும் பர்ஸில் பணமும் கரைந்து போகும். செருப்பு அடிக்கடி காணாமல் போகும்.

டிவிடி மாதிரி வட்டமாக, கோலக் குழலாக மடித்து சரிகை சுற்றி, தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கிடைத்த ஓலைச்சுவடி மாதிரி மொடமொடத்து, வெள்ளைத் தாளில் கையெழுத்து மாதிரி நாலே வரி அச்சடித்து பல தினுசில் வரும் திருமண அழைப்புகள். சம்பிரதாயத்துக்கு அதன் டிசைனைப் பற்றி ஒரு வினாடி பாராட்ட வேணும். அப்புறம் அவசரமாக கல்யாணம் எங்கே என்று தேடிப் பார்க்கணும். வெளியூரா? தீர்ந்தது கவலை. ‘அட்வான்ஸ் வாழ்த்துகள். நான் வரமுடியாட்டாலும் என் இதயம் அங்கேதான்’. பொய். ஆனால், சொல்லவும் கேட்கவும் அழகானது.உள்ளூர் கல்யாணம் என்றால் எல்லா சிரமமும் கிரமமாக வரும். ஞாபகமாகப் பரிசு வாங்கணும். கப்பும் சாசரும், மில்க் குக்கர், பூப்போட்ட கண்ணாடி குவளை செட் இப்படியான பொருட்கள் உற்பத்தியாகி கடைக்கு விற்பனைக்கு வருவதே கல்யாணப் பரிசு வாங்க வருகிறவர்களை நம்பித்தான். ‘நாலு நல்ல புத்தகமாகக் கொடுக்கலாம். அதிலே ரெண்டு நான் எழுதினது’. வீட்டுக்காரியிடம் மன்றாடிப் பார்த்தேன். ‘வேணாம், நிறக்காது’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.

கொசகொசவென்று பூப்போட்ட காகிதம் சுற்றிய பரிசு பார்சலைக் கையில் பிடித்துக் கொண்டு கல்யாண மண்டபத்துப் படி ஏறும்போது ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டியது சரியான இடத்துக்குத் தான் போகிறோமா என்பதை. ஒரே திருமண மண்டபத்தில் பிளைவுட் வைத்துத் தடுத்து மாடியிலும், கீழ்த்தளத்திலுமாக நாலு கல்யாண மேடை. முடுக்குச் சந்து போல் பாதை நுணுக்கமாகப் பிரிவதைக் கவனித்து நாம் போவது இருக்கட்டும். அவசரத்தில் மணமக்கள் மாறிப் போனால்?

கல்யாண வரவேற்பு என்பது ஏகப்பட்ட இரைச்சல், வீடியோ பிளாஷ் படப்பிடிப்பு, நசுங்கின ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குவளையில் அசட்டுத் திதிப்போடு ஆரஞ்ச் ஜூஸ் தருகிறது, துருப்பிடித்த இரும்பு நாற்காலியில் அட்ஜஸ்ட் செய்து உட்காருவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களால் ஆனது. பல சமயங்களில் சத்திர வாடகையைக் குறைக்க, கல்யாணத்துக்கு முதல்நாளே இதை நடத்திவிடுவதால், நாம் வாழ்த்துவது மணமக்களையா அல்லது இன்றைக்கு யார்யாரோவாக இருந்து நாளைக்கு இணையப் போகிற ஜோடியையா என்று குழப்பம். ‘மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் டுமாரோ’ என்று வாழ்த்தினால் சரிப்படுமா?

நூறு பேர் இருக்கிற அந்த ஹாலில் நாலைந்து டிரம், கிதார், கீபோர்ட் என்று ஹெவி வாத்தியங்களோடு ஒரு லைட் மியூசிக் குழு காதைக் கிழித்துக் கொண்டிருப்பது வாடிக்கை. போன மாதம் போன ஒரு கல்யாண வரவேற்பில் மேடையில் ‘ஓஹோ எந்தன் பேபி’ என்று ஐம்பது வருடம் முந்திய சினிமாப் பாட்டு. பேபியை வாரய் என்று ஏ.எம்.ராஜா குரலில் கூப்பிட்டது, மீசை அரும்பிக் கொண்டிருந்த ஒரு சின்னப் பையன். ஓஹோ எந்தன் டார்லிங் என்று பதில் வந்த திசையில் பார்த்து அரண்டு போனேன். ஐம்பது கடந்த ஒரு பாட்டி பதில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, பேபியம்மா குரல் புத்திளமையோடு ஒலிக்க, நம்ம பையன் குரல்தான் கரகரவென்று பிசிறடித்தது.

திருமண வரவேற்புக்கு வருகிறவர்களை தாராளமாக வீடியோ எடுக்கட்டும். அதை ஏன் லைவ் ரிலேயாக மண்டபத்துக்குள்ளேயே டிவி வைத்து ஒளிபரப்பணும்? ‘மீசை ரொம்ப கட்டையா இருக்கு, வெட்டுங்க’ என்றாள் மனைவி சின்னத்திரையில் என்னைப் பார்த்தபடி. பக்கத்தில் இத்தனை வருடம் பார்த்து அது தெரியலையா?

கல்யாண விருந்து ரெடி என்று அறிவித்ததும் அடித்துப் பிடித்து நுழைய, திரும்ப ஸ்டீல் நாற்காலிகளின் அணிவகுப்பு. நான் போய் உட்கார்ந்தபோது ‘மோர் வேணுமா’ என்று கேட்டார் பரிமாறுகிறவர். இது என்ன புது வழக்கமாக மோரில் ஆரம்பிக்கிறாங்களே என்று பார்த்தால், என் தப்புதான். பாதி நடக்கிற பந்தியில் சுத்தமாகத் துடைத்தாற்போல் யாரோ சாப்பிட்டு விட்டுப் போன இலைக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். இருக்கட்டுமே, நின்றபடிக்கு கையில் தட்டை வைத்துக்கொண்டு விருந்து சாப்பிடும் அவஸ்தைக்கு இது ரொம்பவே மேலானது.

‘சும்மா கிண்டல் பண்ண வேணாம். நாளைக்கு நம்ம பசங்களுக்கு கல்யாணம் நடத்த வேண்டியிருக்கும். நீங்க எங்கேயும் போகலேன்னா நம்ம வீட்டு விசேஷத்துக்கு நாற்பது, நானூறு பேர் எப்படி வருவாங்க?’ பின்னால் குரல் கேட்கிறது. நானூறு பேருக்கு ஆரஞ்சு ஜூஸ், பிசிபேளா பாத், ஓஹோ எந்தன் பேபி, வீடியோ லைவ் ரிலே ஏற்பாடு செய்யணுமா? எதிர்த் தரப்பு கண்ணோட்டமும் செலவு எஸ்டிமேட்டும் புரிய நடுங்குகிறேன்.

(இரண்டு வாரங்கள் முன் வெளியானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன