ராமோஜியம் – என் அடுத்த நாவலில் இருந்து – மழை இரவுக்குப் பின் வரும் காலை – சென்னை 1942

காலையில் மழை விட்டு வானம் வெளிறி இருந்தது. கையில் காப்பிக் கோப்பையுடன், தினமணி பேப்பர் படித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன்.

”என்ன சார், உங்க வீட்டுலே ப்யூஸ் போகலியா?”. ஓவென்ற இரைச்சலாகப் பேச்சு சத்தம். எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடுதான்.

அவருக்கும் ரத்னாவிடம் சொல்லி ஒரு காப்பியை வரவழைத்தேன். மகிழ்ச்சியாகக் குடித்து விட்டு ஊர் வம்புக்குத் தாவினார் மணவாள நாயுடு.

“சார் ஜப்பான் ப்ளேன் குண்டு போட வந்தா ஓன்னு சங்கு பிடிக்கணும்னு உங்களைப் போல ஏ ஆர் பி வார்டன்களாக ரோந்துலே போறவங்க, சுவிட்சைப் போடன்னு பேட்டைக்கு பேட்டை சைரன் வச்சுக் கொடுத்திருக்காங்களே.. அங்கே எல்லாம் ஒரு தடுப்பு கதவு வைக்கக் கூடாதா? மழைச் சாரலும் தண்ணியுமா சைரன் எல்லாம் முழுக்காட்டிக் கிடக்கு. ஜப்பான் என்ன, ஜர்மனியும் சேர்ந்து வந்து குண்டு போட்டாலும் சைரன் சத்தம் கேட்காது. சர்க்யூட் எல்லாம் ரிப்பேர். அப்படி இல்லேன்னா, மழைக்காலத்திலே ஜப்பான்காரன் குண்டு போடமாட்டான்.. போட்டா ஈரத்துலே விழுந்து நமத்துப் போயிடும் அதெல்லாம்னு நம்பிக்கையா?”

தெரியலையே என்றபடி தினமணி மூன்றாம் பக்கத் தலைப்புச் செய்தியைப் படித்தேன் – ’மதறாஸில் ஜலக் கஷ்டம் இந்த வருஷம் ஜாஸ்தி இருக்காது’. என் தமிழே பரவாயில்லை போல் இருந்தது.

”அது கிடக்கு சார், தசாபதி பயாஸ்கோப் பார்த்தீங்களா? என்னமா நடிச்சிருக்கார் காளிங்க ரத்தினம்”, எலக்ட்ரீஷியன் சினிமாவுக்குப் போனார்.

ஆமாங்க, பார்த்தேன் என்றேன் பேப்பரை மடக்கி வைத்தபடி.

”அந்த ஹீரோயின் கூட, சோப்புக் கம்பெனியிலே உத்தியோகம் பாக்கற பொம்பளே .. துறுதுறுன்னு.. பேர் என்ன?.”.

“சாவகாசமா பேரென்னன்னு பார்த்துக்கலாம், ஆபீஸ் கிளம்பற உத்தேசம் இல்லியா…?” ரத்னா குரலை உள்ளே இருந்து உயர்த்த எலக்ட்ரீஷியன் ஷாக் அடித்தாற்போல் திண்ணையிலிருந்து ஒரு துள்ளு துள்ளி செருப்பில் கால் நுழைத்தபடி ஓடியே போனார். அது என் செருப்பு என்று இரைய வேண்டிப் போனது.

குளியல் நேரத்தில் தெலக்ஸ் சோப் டப்பாவை இறுக மூடி வைத்துவிட்டு சுதேசி சோப்பை ரெண்டு தடவை கடமைக்காக வயிற்றில் தேய்த்து ஒரு செம்பு தண்ணீர் ஊற்றிக் கொண்டபின் மைசூர் சாண்டல் சோப் எடுத்து மணக்க மணக்க உற்சாகமாகத் தேய்த்துக் குளிக்கலாம் என்று டப்பாவை எடுத்தால் தேசலாக ஒரு துண்டு சந்தன சோப் மேல் கொழுக் மொழுக் என்று முட்டை வடிவத்தில் காத்ரஜ் சோப். ரத்னா டியூசிஎஸ் போனால் இப்படியான புதுசு புதுசான சரக்குகள் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாகப் படி ஏறி விடும்.

கோத்ரஜ் சோப் எடுக்க வேண்டாம் என்றால் சுதேசி. அதுவும் வேணாம் என்றால்… நான் இருக்கேன் என்று மனதில் தெலக்ஸ் எட்டிப் பார்க்க வலுக்கட்டாயமாக அங்கே எல்லா அறையிலும் பூட்டுப் போட்டேன். பத்தே நிமிடத்தில் காத்ரெஜ் தேய்த்து நீராட, கொஞ்சம் ஆஸ்பத்திரி வாசனை, கொஞ்சம் டால்கம் பவுடர் வாசனை, இன்னும் கொஞ்சம் கேரம்போர்டில் போடும் வெழுமூணான பவுடர் நெடி இத்தோடு லேசிலும் லேசான ஆபீசர்ஸ் பட்டணம்பொடி நறுமணம்..

கோத்ரஜ் பாஸ் மார்க் எடுத்திருந்ததை நினைத்து சந்தோஷப்பட ரத்னா தோளில் குற்றாலத் துண்டோடு எதிர்ப்பட்டாள். துண்டை நின்றபடி பாத்ரூம் கதவின் மேல் உத்தேசமாக எறிய, நான் கையை மட்டும் உள்ளே இருந்து வெட்கத்தோடு ஒரு வினாடி வெளிப்பட்டுக் கையில் ஏற்று வாங்கி கதவுக்குப் பின் மறைந்தேன்..

”அய்யே.. ஏதோ பத்தினிப்பெண் ரூபசுந்தரி மாதிரி.. உங்களை முழுக்க பார்க்கலேன்னா மனசு கேக்காதாக்கும்” என்று கேலியும் கிண்டலும் வழக்கமாக வருவது போல் இன்றைக்கு இல்லை.. ஏதோ புகார் செய்ய வந்திருக்கிறாள். அப்படியே துண்டு வீச்சும் நடந்திருக்கிறது.

”சாப்பாட்டு பாத்திரத்தை ஆபிசிலேயே விட்டுட்டு வந்திருக்கீங்க… இன்னிக்கெதுலே வச்சுக் கொடுத்து அனுப்புவேன்?”

துண்டுடுத்து நின்ற என்னிடம் முறையிட்டாள்.

”நேத்து பந்துலு சாரோட வெளியே போகவேண்டி..”, நான் பம்மினேன்.

”எங்கே, தெலக்ஸ் வீட்டுக்கா? கூலிக்காரன் மாதிரி மாகாணிக்கிழங்கு வாங்கிட்டு கித்தான் பையிலே போட்டு தோள்லே வச்சு எடுத்துப் போய்ப் படைச்சீங்களா அந்த அழகு தேவதைக்கு?”

நான் ஸ்தம்பித்துப் போனேன்.

இதென்ன இட்சிணி வேலையா? அல்லது இந்த மாதிரி விசிட்டுக்கு கண்ணும் மூக்கும் வைத்து வரும் இந்துநேசன் பத்திரிகைச் செய்தியா?

நானே தயங்கித் தயங்கி எங்கே போனேன் என்று ஆரம்பிக்கும் முன்னால் ரத்னா புட்டுப் புட்டு வைக்கிறாள். எனக்கு வேலை வெகுவாகக் கம்மியானது போல் ஆசுவாசம்.

Excerpts from my forthcoming novel RAMOJIUM – morning after the rainy night in Madras 1942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன