வெளிவர இருக்கும் என் நாவல் ‘ராமோஜியம்’ – சென்னையில் ஒரு மழைக்கால இரவு 1942

மேற்கே தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் ஏதோ வெளிச்சம் மின்னி மின்னி வந்து போனது. டார்ச் வெளிச்சம். உளுந்து கடத்தல் ஆரம்பமா?

அடுத்த விநாடி விளக்கு வந்தது. தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் இரண்டு பேர் சிரமத்தோடு ஒரு சாக்கு மூட்டையை வெளியே சிறு மோட்டார் வேனில் ஏற்றுவது தெரிந்தது. வேன் சத்தமிட்டுக் கிளம்பும் ஓசை. விளக்கை அணைத்து விட்டு வந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து, குளித்து, ராத்திரி ஒன்பதுக்கு, ஏ ஆர் பி வார்டனாக அரை நிஜார், இறுக்கமான சட்டை, தலையில் ஹெல்மெட், காலில் கேன்வாஸ் ஷூ என்று ரோந்து போகத் தயாரேனேன்.

இன்னிக்குப் போய்த்தான் ஆகணுமா என்று ரத்னா கேட்டாள். மழையில் நனைவது பற்றிய பச்சாதாபம் என்பதோடு பெண்பறவை ஆணைச் சிறகால் அணைத்தபடி அருகில் இருக்க அழைக்கும் வேட்கையும் கூட அதில் பிரதிபலித்தது.

கொஞ்சம் காத்திரு கண்ணே. சீக்கிரம் வந்து விடுவேன். ஒரு குடை எடு.

நான் நேரே தங்கப்பன் முதலாளி வீட்டுக்குள் போக நினைத்தேன். அது சரியாக இருக்காது என்று இரண்டு தடவை எங்கள் தெருவையும் பக்கத்துத் தெருக்களையும் இரண்டிரண்டு தடவை சுற்றி வந்தேன். அப்புறம் தங்கப்பன் முதலாளி வீட்டு இரும்பு கிராதி கதவைத் தள்ளித் திறந்தேன். ஈரக் குடையை உதறி மடக்கிச் சுவரோடு சார்த்தி வைத்து விட்டு உள்ளே போனேன்.

செடிகொடிகள் அடர்ந்த அவர் வீட்டுத் தோட்டத்தைக் கடந்து நடக்க, இருட்டில் அங்கே நின்ற மூன்று பேரைப் பார்த்து நிற்க வேண்டிப் போனது.

ஏ ஆர் பி வார்டன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். சொல்லவே தேவையில்லை. அந்த நேரத்தில் நிஜாரும் ஹெல்மெட்டும் ஷூவுமாக வேறே யார் வரப் போகிறார்கள்?

”ஜன்னல்லே சரியா கருப்பு காகிதம் ஒட்டலியே? கிழிஞ்சிருக்கு.. வெளியே இருந்து வீட்டுக்குள்ளே வெளிச்சம் தெரியுது…சட்டப்படி தப்பு இது”..

நான் ஜன்னலை சோதிக்க போவது போல் போக்குக்காட்டி உள்ளே நடந்தேன். நீண்ட ஒழுங்கையில் நான்கைந்து மூட்டைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் போகும்போதே ஈரமண் நெடி தாங்காமல் தும்மல் ஏற்பட்டது. மிளகாய் மூட்டையாக இருக்குமோ? சுபாங்கிஅம்மாள் பருப்பு பதுக்கி வைத்து ப்ளாக் மார்க்கெட்டில் விற்பதைத்தானே சொன்னார்?

நெடி அடித்த மூட்டைக்கு அடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சாக்கு மூட்டைகள். அதெல்லாம் என்ன என்று கேட்டேன்.

”முதலாளிக்கு தான் தெரியுமுங்க” என்றார் அதைத் தூக்கிப்போக வந்த ஒருத்தர்.

”முதலாளி எங்கே?”

”குண்டூருக்கு சரக்கு பிடிக்க போயிருக்காருங்க சார்”.

”வேறே வீட்டுக்காரங்க யாரு?”

அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு மௌனமாக நின்றார்கள். வெளியே அடித்துப் பெய்கிற மழையின் சத்தம்.

”இந்த மூட்டை எல்லாம் எங்கே போவுது?” நான் நைச்சியமாகக் கேட்டேன்.

”டவுட்டன் கிட்டே, அய்யா கடைக்கு”.

மனசே இல்லாமல் ஒருத்தன் அரைகுறையாகப் பதில் சொன்னான். ஆக பருப்பு, மிளகாய் கடத்தல் தான். கடையில் இருந்து தானே இங்கே வரணும்? இங்கே இருந்து அங்கே ஏன் போகணும்? புரியவில்லை. யார் கண்டது? ப்ளாக் மார்க்கெட் சுவடு விட்டுப் போகும் வழி யாருக்குத் தெரியும் அதில் ஈடுபடுகிறவர்களைத் தவிர?

”சரி, ஜன்னல்லே புதுசா கருப்பு காகிதம் ஒட்டுங்க. நாளைக்கு வருவேன். சரியா இல்லேன்னா அப்புறம் எங்க மேலே வருத்தப்பட்டு ஒண்ணுமாகாது”

நான் என்ன செய்யப் போகிறேன் என்று கோடி காட்டி – அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஏஆர்பி வார்டன் ஒரு துரும்பைக் கூட இங்கே இருந்து அங்கே எடுத்துப் போடச்சொல்லி யாரையும் அதிகாரம் பண்ண முடியாது – சும்மா ஒரு பந்தாவுக்கு சொல்லியபடி வாசல் கதவுக்கு பக்கம் வந்து குடையைப் பிரித்தேன். யாரோ சிரிக்கிற சத்தம். பருப்புக் கடத்தலில் வேறு யாரோ கூட இருக்கிறார்கள் போல் இருக்கே என்று ஆச்சரியத்தோடு குடையைக் கீழே கொண்டு வந்து பார்க்கும்போது கொடிமின்னல் வெட்டி வானம் அதிர மின்னலும் இடியும். இனி ரோந்து புடலங்காய் எல்லாம் எதுவும் இல்லை வீட்டுக்குப் போகலாம் என்று திரும்பி நடந்தேன். ரத்னாவும் குளித்திருந்தாள்.

அந்த ராத்திரி மழை மத்தளம் கொட்ட எனக்கு இன்னொரு சோபான ராத்திரி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன