நாவல் ராமோஜியம் – 1935 கும்பகோணம்

எழுதப்படும் நாவல் ‘ராமோஜியம்’ – ஒரு சிறு பகுதி

ஒரே நாளில் உலகத்து அறிவை எல்லாம் கரைத்துப் புகட்டப்பட்டவனாக எதுக்களித்து எழுந்து நின்றேன். ஆபீசர்கள் குட் லக் என்று சொல்லிக் கை குலுக்கி கீழே கோவிந்தா லாட்ஜில் சாப்பிடப் போனார்கள்.

நான் அவர்கள் தின்று முடித்துத் திரும்ப வரும்வரை காத்திருப்பதா அல்லது நடந்து ஊரைச் சுற்றிப் பார்ப்பதா என்று முடிவுக்கு வர முடியாமல் நின்றபோது மொழுக்கென்று வயது என்ன என்று தீர்மானிக்க முடியாத ஆகிருதியோடு மனுஷன் ஒருத்தன், குஷியாக கையில் பழுப்பு நிறக் கவரோடு வந்து சேர்ந்தான். சேர்ந்தார்.

என்னைப் பார்த்து விட்டு நேரே என்பக்கம் வந்தார்.

“சார் டீ ஆபீசர் நீங்க தானா உங்க கிட்டே புகார் தரணும்னு லெட்டர் வந்திருக்கு .. ஊர்லே தெருநாய், கொசு தொல்லை ஜாஸ்தி, குடிதண்ணீர் சரிவர கிடைக்க மாட்டேங்கறது”, என்று படபடவென்று சொல்லிக் கொண்டே போனார். கையில் வைத்திருந்த கவரை என்னிடம் நீட்டினார். டியர் மிஸ்டர் விட்டோபா என்று தொடங்கிய கடிதம் ப்ளீஸ் ரிபோர்ட் டு என்று முடிந்திருந்தது. சிரித்து விட்டேன்.

”விட்டோபா சார், நீங்க தானே அது?”

“ஆமா, வேறே யார் விட்டோபா எங்க வீட்டிலே?” என்றார் பெருமையோடு.

”சரி, விட்டோபா, உங்களுக்கு உத்தியோகம் கொடுத்து டீ போர்ட் உத்தரவு. சேல்ஸ்மேன். நீங்க என்கிட்டே ரிப்போர்ட் பண்ணுவீங்க. புகார் இல்லே. வேலையிலே ஜாயின் பண்ணுவீங்க.. அங்கே சாப்பிட்டுட்டு இருக்கற ரெண்டு ஆபீசர்களையும் முதல்லே சந்திச்சுடுங்க. இருங்க, அவங்க சாப்பிட்டு முடிச்சதும் போங்க” என்று விவரமாகச் சொல்லும்போது இவரோடு தான் இனி காலம் தள்ள வேண்டும் என்ற நினைப்பு மலைக்க வைத்தது.

விட்டோபா என்ற விற்பனையாளரும், ராமோஜி என்ற விற்பனை அதிகாரியுமாக கும்பகோணம் டீ போர்ட் பிராஞ்சு கோவிந்தா லாட்ஜ் மத்தியான சாப்பாடு வாடையோடு இயங்கத் தொடங்கியது.

விட்டோபா உள்ளூர்க்காரர் என்பதால் அவர் உதவியோடு உத்தியோகத்தில் ஒரு வருஷம் இங்கே குப்பை கொட்டிவிட்டு செங்கல்பட்டோ, காஞ்சிபுரமோ மெட்றாஸுக்கு பக்கமாக ட்ரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளலாம் என்று மனம் கணக்கு போட்டது. எங்கே டீ ஆத்தினா என்ன என்று இன்னொரு மனம் இடித்தது.

விட்டோபாவிடம் நாளைக்கு சந்திக்கலாமா என்று கேட்டேன். எங்கே என்று எனக்கே தெரியாது தான்.

”சார், நாளைக்கு மகாமகக் குளத்தங்கரையிலே உட்கார்ந்து வேலையை ஆரம்பிச்சுடலாம்”. என்று விட்டோபா உற்சாகமாகச் சொல்ல அவர் செய்ய வேண்டிய வேலை என்ன என்று மனதில் சரியாக வாங்கிக்கொண்டிருக்கிறாரா என்று சந்தேகம் எழுந்தது.

”நீங்க எங்கே தங்கி இருக்கீங்க?” கேட்டார். சொன்னேன்.

”பக்கம் தான். நான் அங்கே இருந்து பத்து நிமிஷம் வேகுவேகுன்னு நடந்தா வரும் பாருங்கோ சோலையப்பன் தெரு அங்கே தான் ஸ்ரீராம பஜனை சபா பக்கம் ஜாகை.. எங்க மனுஷா துக்காம்பாளையத் தெருவிலேயும் உண்டு. ராமாராவ் வீட்டுக்கு பத்து வீடு போட்டு கீழண்டை .. கமலா பாய் என் ஒண்ணுவிட்ட அக்கா தான். ”

என்னமோ எனக்கு ஊரும் மனுஷர்களும் உள்ளங்கை துல்லியமாக அத்துப்படியானதுபோல் விட்டோபா சொன்னார். சரி என்று சும்மா தலையை ஆட்டும்போது நினைவு வந்தது, இவர் சொன்ன வீட்டுக்குள் தானே அந்த அழகுப் பெண் என்னோடு ரயில் இறங்கி வந்து ராத்திரி நடந்து போனது.

புறப்பட்டுப் போய் ரெண்டடி நடந்து சட்டென்று திரும்பி என்னை நோக்கி வந்தார் விட்டோபா.

”நாளைக்குத்தான் ஆரம்பிக்கணுமா இன்னிக்கே நாள் நல்லா இருக்கே?”. அவர் சொல்ல, ”நல்லது, இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்”. என்றேன்.

சந்திக்க வேண்டிய பிரமுகர்கள், வணிகர்கள் , டீத்தூள் விற்க ஏறி இறங்க வேண்டிய மளிகை, மற்றக் கடைகள், பக்கத்து கிராம விவரங்கள் இப்படி ஜாபிதா தயார் பண்ணிடலாம் என்று ஆரம்பித்துக் கொடுத்தேன்.

“முதலில் ராதாகிருஷ்ண அய்யர் ஸ்டேஷனரி ஷாப்பிலே ரூல் போட்ட ஒரு கொயர் நோட்புக் ரெண்டு வாங்கிடலாம்”, என்றார் விட்டோபா. “ராதாகிருஷ்ண அய்யரையும் பார்த்துட்டு டீ டிஸ்ப்ளே பத்தி பேசிடலாம்” என்றேன் உற்சாகமாக.

“அய்யர் பரலோகம் போயாச்சு, கடையை அப்துல் சமத் எடுத்து நடத்திட்டிருக்கார். பெயரை மாத்த வேண்டாம்னு வச்சிருக்கார்”.

——————————–

Novel ‘Ramoji’ excerpt

(1935 – டெல்லியில் இருந்து இரண்டு டீ போர்ட் ஆபீசர்கள் தினசரி செய்ய வேண்டியதாக ராமோஜிக்குக் கொடுத்த வேலை விவரம் தொடர்ச்சி – வருடம்1935 – கும்பகோணம்)

இது தவிர ஒவ்வொரு நாளும் டீ கொடுத்த தெருவில் சாயந்திரங்களில் டீ குடிப்பதன் நல்ல பலன்கள் பற்றி தெருவாசிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தேக ஆரோக்கியம், சுறுசுறுப்பு, ஜீரண சக்தி போன்றவை கூடுதலாகும் என்பது இவற்றில் சில. இதற்கான புத்தகம் மெட்றாஸில் இருந்து விரைவில் அனுப்பி வைக்கப்படும், புத்தகம் வராத காரணத்தால் தெருக் கூட்டம் போடுவதைத் தவிர்க்கக் கூடாது.

இந்தக் கூட்டங்களின் முடிவில் தெருவாசிகளின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

டீ குடித்தால் உடம்பு கருத்துப் போகுமா, முகம் வெளுக்குமா, பல் எல்லாம் கொட்டிப் போகுமா, பெண்களுக்கு முடி கொட்டி வழுக்கையாகி விடுமா, டீ குடித்தால் பேதியாகுமா, மலச்சிக்கல் வருமா, பெண்களுக்கு மாதவிலக்கு சீக்கிரம் வருமா, தாமதமாக ஏற்படுமா, ஆண்களுக்கு மாத விலக்கு ஏற்படுமா, காலில் ஆணிப்புற்று ஏற்படுமா?

இப்படி வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும். பொதுவாகக் கேட்கப்படும் சில கேள்விகளுக்கான விடைகள் –

டீ குடித்தால் உடம்பு கருத்துப் போகும் என்று நிரூபணமாகவில்லை. இங்கிலாந்திலும், பிரான்சிலும் துரைகளும் துரைசானிகளும் தினசரி பகல் நாலு முதல் ஐந்து வரை இந்தியாவிலிருந்து வந்த டார்ஜிலிங்க் டீ தினசரி சராசரி 13547 கோப்பை குடிக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் மேனி கறுக்கவில்லை என்பது கண்கூடு.

டீ குடிக்காத கறுப்பர் இனத்து ஆப்பிரிக்கக் கண்ட பிரஜைகள் தினசரி டீ குடிக்கப் பழகினால் அவர்களின் மேல்தோல் வெளுக்கலாம் என்று ஆப்ரிக்காவில் பீதி எழுந்தது. அது தவறான தகவல் என்று அப்புறம் நிரூபிக்கப்பட்டது.

டீ குடித்தால் பல் கொட்டிப் போகாது. டீ குடிக்கும் முன்பு, காலை என்றால் தினசரி தந்தசுத்தி செய்யாமல் இருந்தால் பல் உதிர வாய்ப்பு உண்டு.

டீ குடித்தால் தலைமுடி கொட்டாது. அதிகம் வளரவும் செய்யாது. டீ குடித்தால் பேதியாகாது. பால் கலந்த டீ என்றால், ஒரு நாளைக்கு இருபது கோப்பைக்கு மேல் பருகினால் வயிறு கொஞ்சம் போல் வலிக்க வாய்ப்புண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் போன்ற டீயும் நஞ்சாகலாம்.

மலச்சிக்கலுக்கும் டீக்கும் சம்பந்தம் இல்லை. டீ குடிக்கப் பழகி தினசரி டீ குடித்தபின் காலைக் கடன் கழிப்பது என்று வழக்கப் படுத்திக் கொண்டால் தினம் தினம் தேக சௌகர்யம், தேக காந்தி கூடும்.

நல்ல டீ சாப்பிட்டால் வரவேண்டிய நேரத்தில் மாதவிலக்கு பெண்களுக்கு ஏற்படலாம். மாதவிலக்கு தாமதத்துக்கும் டீ குடிப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

டீ பருகுவதால் ஆண்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

காலில் ஆணிப்புற்று வளர, இறந்து போன திசுக்கள் காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள், டீ குடித்தால் கால் ஆணி வலியை மறந்து உற்சாகமாகச் செயல்படலாம்.

கேள்விகள் குழப்புவதாகவோ, வம்பிழுக்க என்றே கேட்டப்பட்டவையாகவோ இருந்தால், ‘இதற்கான விடை எங்கள் மதறாஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டு தரப்படும்’ என்று அடுத்த கேள்விக்குப் போக வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன