மதறாஸ் – புதுடெல்லி 1944 – கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ்

பாட்டிக்கு கண்ணீர் வராவிட்டாலும் தலையில் கை வைத்து மடியில் தண்ணீர்ச் செம்போடு உட்கார்ந்திருந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அவள் மகன் குழந்தையைத் தோளில் சுமந்து எங்கள் பக்கம் வந்தான்.

“அம்மா இப்படித்தான் தத்து பித்துன்னு ஏதாவது சொல்லி ரசாபாசம் ஆயிடும். ராமேசுவரத்திலே கோவில் வாசல்லே பூக்காரி ஜவ்வந்திப் பூமாலை கட்டித் தந்தபோது, ஏண்டியம்மா தீண்டலுக்கு ஒதுங்கினியோன்னு கேட்டு தெருவையே ஸ்தம்பிக்க வச்சுட்டா” என்றான்.

அவன் வீட்டுக்காரி, “ஐயோ, இதை விஸ்தரிச்சு வேறே சொல்லணுமா?” என்று பாதி புகார் சொல்லும் தொனியும் பாதி சிரிப்புமாக எங்களுக்கு முன் நின்றாள். அவள் முந்தானையைப் பிடித்தபடி பெண் குழந்தை வாயில் விரல் போட்டபடி நின்றது.

“வர்த்தினி, உன் பொண்ணு கல்யாணம் ஆறபோதும் விரல் சூப்பறதை விடமாட்டா.. எடுடி குஞ்சம்மா .. விரலே காணாமப் போயிடும் ஒரு நாள்..”

இரைச்சலாகச் சொல்லிவிட்டுக் குழந்தை மேல் தண்ணீர் தெளிப்பது போல் பாட்டி பாசாங்கு செய்ய, குழந்தை சிரித்தது.

அவர்கள் குடும்பமே எங்கள் எதிர் சீட்டுகளில் அமர்ந்தது. பெண் குழந்தை பாட்டி மடியில் உட்கார்ந்து “பாட்டி, பல் தேச்சாச்சு.. முட்டாய் கொடு” என்று கேட்டது.

“ஏண்டி லண்டி முண்டே, ராத்திரி தானே ஆரஞ்சு முட்டாய் உங்கம்மாவுக்குச் சொல்ல வேண்டாம்னு கேட்டு முழுங்கினே. இப்போ இன்னொண்ணு வேணுமா? வயத்துலே கீரைப்பூச்சி வந்து குண்டி அரிச்சிண்டே இருக்கும். பரவாயில்லேயா?” தலைமாட்டில் கூஜா பக்கமாக வைத்த துணி சஞ்சியிலிருந்து ஒரு மிட்டாய் எடுத்துக் கொடுத்தபடி பாட்டி சொன்னாள்.

ரத்னா, பாட்டிக்குக் காட்டும் மடி ஆசார சலுகையாக காப்பியை அண்ணாந்து வாயில் விட முயற்சி செய்ததோ, பாட்டி பேசியதோ அவளுக்கு புரையேறி ஒரு வாய்க் காப்பி முகத்தைச் சுற்றிச் சிதறியது.

”மன்னிச்சுக்கங்க அம்மா.. ” ரத்னா பயத்தோடு அவளைப் பார்க்க, “நான் ஏண்டியம்மா ஷமிக்கணும்? அண்ணாந்து குடிக்க வராதுன்னா சீப்பிக் குடிக்க வேண்டியதுதானே? எசகுபிசகா காப்பி உள்ளே போயிருந்தா?”

பாட்டி ஸ்தாலி செம்பை சீட்டில் அடைப்புக்குப் பக்கம் தள்ளி உருண்டு விடாமல் பாதுகாத்தாள். உலகம் முழுமையும் அவள் சுத்தப்படுத்த அப்போதைக்கப்போது தேவையான தண்ணீரை அந்தச் செம்பு ஊற்று மாதிரி உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும் என்று தோன்றியது எனக்கு.

“டெல்லிக்கு போறீங்களா?” என்று பாட்டியம்மா மகனிடம் கேட்டேன்.

“இல்லே சார், ஆக்ராவிலே இறங்கணும்” என்றான் அவன்.

“ஜாகை எல்லாம் மெட்றாஸா?” பாட்டி ரத்னாவைக் கேட்க, என் புரசைவாக்கம் விலாசம் தவிர மீதி எல்லாம் சொல்லப்பட்டது.

“நாங்க மாம்பல வாசிகள். போன வாரம் ராமேஸ்வரம் போய்ட்டு வந்தோம். இப்போ காசி யாத்திரையா பூர்த்தி பண்றோம்” என்றான் அந்த பிராமணன்.

“ஆக்ராவிலே இறங்கணும்னு சொன்னீங்களே?, ரத்னா மருமகளைக் கேட்டாள்.

”ஆமா, அங்கே என் தம்பி ஆர்மி கேண்டீன்லே சமையல் பண்ணி போட்டுண்டிருக்கான். அவாத்திலே போய் இருந்து மதுரா, ஹரித்வார் எல்லாம் பார்த்துட்டு காசி போறோம்” பாட்டி விளக்கமாகச் சொன்னாள்.

“நாங்களும் டெல்லியிலே இருந்து ஹரித்வார் போய்ட்டு காசிக்கு போறோம்”, ரத்னா சொன்னாள்.

”நேத்து ராத்திரி மெட்றாஸிலே ரயில் ஏறும்போதே இங்கே வந்திருக்கணும். நாங்க ஏறினது முழுக்க பட்டாளக்காரா இருந்த கம்பார்ட்மெண்ட். ராத்திரி ஒரு க்ஷணமும் தூங்கலே” என்றான் பாட்டியம்மா மகன்.

ராத்திரி இங்கே இருந்த வேறொரு பாட்டி நினைவுக்கு வரச் சிரித்தேன்.

”அடுத்தாப்பலே என்ன ஸ்டேஷன் வரும்?” பாட்டி யாரை என்று இல்லாமல் கேட்டாள்.

ரத்னா ”பலார்ஷா” என்றாள். பெண் குழந்தை கன்னத்தை பிரியமாகத் தன் கன்னத்தோடு இழைத்தாள். சந்த்ரபூர் வரும் என்றான் குழந்தைக்கு அப்பா. சிர்ப்பூர் வரும்னு நினைக்கறேன் என்று மெல்லிய குரலில், குழந்தைக்கு அம்மா சொன்னாள்.

”ஏண்டி உனக்கு சகலமும் தெரியுமா?” அவள் வீட்டுக்காரன் எகிறினான்.

அவன் போல் நான் இருந்தால் ரத்னா என்னைத் தலைமுழுகி விட்டு இச்சலகரஞ்சிக்கு அம்மா வீட்டுக்கு ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்திருப்பாள்.

போனால்? மனசின் இருண்ட குகைக்கு உள்ளே இன்னொரு குகை அதற்குள் இன்னொன்று என்று எத்தனையோ கடந்து போக, இருட்டில் ஒரு சிலந்திப் பூச்சி மனதில் சொன்னது –

’ரத்னா போனா, விலாசினி, போஜனசாலை தெலுங்கச்சி மாதிரி உடுத்து, தினம் எண்ணெய்ப் பண்டம் வகைதொகை இல்லாம கொழும்புத் தேங்காய் எண்ணெயிலே பொறிச்சு ஊட்டி விடுவா’. வேண்டாம் என்று விலக்கினேன்.

வண்டி ஸ்டேஷனில் நுழைவது கண்டு ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தேன். சிர்ப்பூர் ஸ்டேஷன். நான் அறிவித்ததும் அந்தப் பிராமணப் பெண் முகம் ஒரு வினாடி ஜொலித்து மறுபடி சகஜ பாவம் கொண்டது.

”சிர்ப்பூரில் என்ன விசேஷமானதா கிடைக்கும்?”.

ரத்னா என்னைக் கேட்டாள், என்னமோ நான் தான் உலகத்தில் சகலமான அறிவுக்கும் பிரதிநிதி என்பது போல.

”ஒரு மண்ணும் கிடைக்காது”. பாட்டியம்மா ஒரு மடக்கு தண்ணீரை ஸ்தாலி செம்பிலிருந்து ஆசமனம் செய்வது போல் வாயில் ஊற்றிக்கொண்டு நிஷ்டூரமாகச் சொன்னாள். மருமகள் வாக்கு நிஜமானது அவளுக்கு ரசித்திருக்காது போல.

”சிர்ப்பூர் பாலாஜி கோவில் இருக்குன்னு சொல்வா”.

மறுபடியும் மருமகள் தான். நெட்டுயிர்த்து, அபசாரம் அபசாரம் என்று கன்னத்தில் போட்டபடி கிழவி தான் ஈசுவர தூஷணை செய்ததற்கு தண்டனையாகப் புடவை முக்காட்டுக்கு மேல் தலையில் குட்டிக்கொண்டாள்.

நான் ரத்னாவின் அனுமதியோடு கீழே இறங்கிப் போய் ஒரு கோப்பை டீ குடித்து விட்டு அது மகா கண்றாவி என்று ரத்னாவிடம் பொய் சொல்லத் திரும்பி வந்தபோது, பாட்டியம்மா கண்டிப்பாகச் சொன்னது இது –

”யாத்திரைகள் நடத்த முன்னாடி நாக்கைக் கட்ட பிடிவாதமா பழக்கணும். என்ன பாலோ, என்ன டீத்தூளோ, பாத்திரம் வருஷா வருஷமாவது கழுவுவானா இல்லையா, அந்த ஜலம் எங்கே இருந்து வருது இப்படி தெரியாத போது சீக்கு வரவழச்சுக்கணுமா டீயும் காப்பியும் வெளியிலே குடிச்சு?”.

அவள் சொல்வதில் இருந்த பழைய கால நியாயம் சரிதான் என்றது என் மனது. பாட்டி என்ன சாப்பிடுவாள் என்ன குடிப்பாள்?

நடுப் பகலுக்கு பலார்ஷா ஜங்க்ஷன் வந்தபோது விடை கிடைத்து விட்டது.

(எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து)

pic courtesy natgeotraveller.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன